அடையாறு கேன்சர் மருத்துவமனையின் இளைஞர் நல விழா இன்று தொடக்கம்!

அடையாறு கேன்சர் மருத்துவமனையின் இளைஞர் நல விழா இன்று தொடக்கம்!

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் இளைஞர் நல விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.இந்தக் கண்காட்சி மூலம் இளைஞர்களை தொற்றா நோய்களிலிருந்து காக்கவும், முற்றிலும் தடுக்கக்கூடிய இந்த நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கவும் முடியும் என்று புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா கூறினார்.
Shantha
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா, நேற்று நிருபர்களை சந்தித்த போது,”தொற்றா நோய்கள் என்பவை கிருமிகளால் ஏற்படாமல், வாழ்க்கை முறைமாற்றத்தால் இறப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் தொற்றா நோய்களான புற்றுநோய், இருதய நோய் போன்றவற்றால் ஒவ்வொரு நொடிக்கும் 10 பேர் இறக்கின்றனர். ஒரு கோடி பேர் இறப்பில் 52 லட்சம் பேர் இறப்புக்கு தொற்றா நோய்களே காரணமாக இருக்கிறது.2008–ம் ஆண்டில் ஏற்பட்ட இறப்புகளில் 53 சதவீதமும், 1990–ம் ஆண்டு ஏற்பட்ட இறப்புகளில் 40.4 சதவீதமும் தொற்றா நோய்களே காரணமாகும். 2015–ம் ஆண்டில் இது 59 சதவீதமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவிகித உணவு உண்ணாமை, மது மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துதல், உடல் உழைப்பின்மை ஆகிய 3 காரணிகளை சரிப்படுத்த தகுந்த வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டால் தொற்றா நோய்களால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே ஏற்படும் 80 சதவீத இறப்புகளை தடுக்க முடியும்.ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் இறக்கும் 1½ லட்சம் பேரில், 40 முதல் 60 சதவீதம் இறப்புகளுக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதே காரணமாக இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட 69 ஆயிரம் இறப்புகளுக்கும், 3½ லட்சம் காயங்களுக்கும் சாலை விபத்துக்கள் காரணமாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்புப்படி இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு 6–வது பெரிய காரணமாக இருப்பது சாலை விபத்துகளேயாகும். இருதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படும் சுமார் 3 லட்சம் இறப்புகளுக்கு உடல் உழைப்பின்மையே காரணமாகும். இந்த தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்காக 3–ம்ஆண்டு இளைஞர் நல விழா வள்ளுவர் கோட்டத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 26–ந்தேதி வரை நடக்கிறது. தினசரி காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு போதைபொருட்கள் பயன்படுத்தாமை, சத்தான மற்றும் சரிவிகித உணவு, உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி மற்றும் சுற்றுப்புற, தனிமனித சுகாதாரம் ஆகிய தலைப்புகளில் தொற்றா நோய்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்காக 60 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் செய்முறை விளக்கமும் அளிக்கப்படுகிறது. கண்காட்சி, போட்டிகள், கருத்தரங்கம், நிபுணர்களுடன் கலந்துரையாடல், கலை நிகழ்ச்சிகள், ஆரோக்கிய சமையல் பயிற்சி, மாரத்தான், களரி பயிற்சி நடத்தப்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தென்கிழக்கு ஆசியா பிராந்திய இயக்குனர் டாக்டர் நெவின் சி வில்சன், வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். ”என்று அவர் கூறினார்.