மோடியை பன்னீர்செல்வத்துடன் போய் சந்தித்தது ஏன்? எடப்பாடி பேட்டி!

மோடியை  பன்னீர்செல்வத்துடன் போய் சந்தித்தது ஏன்? எடப்பாடி பேட்டி!

மிழ்நாட்டில் எதிர்கட்சியாகி இருக்கும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே மறைமுகமாக அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இதில் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி கை கொஞ்ச ஓங்கியே இருக்கிறது. இதன் காரணமாக தன்னை அதிமுகவில் பலப் படுத்திக் கொள்வதற்காக சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளலாம் என பன்னீர்செல்வம் கூறி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொண்டால் தமக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை குறைந்து விடும் என்ற காரணத்தினால் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து வருகிறார். இந்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (26-7-2021) டெல்லியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து பேசினர்,

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்று காலை 11 மணியளவில் புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில். உள்ள பிரதமரின் அறையில் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மனோஜ் பாண்டியன், தம்பிதுரை, எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமரைச் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு எடப்பாடி கே. பழனிசாமி பேட்டி அளித்த.விவரம் இதோ:

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணிக்காக பிரசாரம் மேற்கொண்டதற்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கவும் நானும் ஓபிஎஸ் அவர்களும் பிரதமரை கேட்டுக்கொண்டோம். மேகதாது அணை பிரச்சினையைப் பொறுத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வரை, அதன் பின்னர் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோதும், அதன் பின்னர் நான் முதல்வராக இருந்தபோதும் அணையைக் கட்டக்கூடாது, அதற்கு மத்திய அரசு உதவக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். அதையே இப்போது தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம்.

மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டம் பாலைவனமாகிவிடும். தமிழ்நாட்டில் 16 மாவட்டங்கள் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளன. அதை பிரதமர் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க கேட்டுக்கொண்டோம். அதோடு நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் உள்ளது. அதை போக்குவதற்காக குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை வைத்தோம். சாலை திட்டங்களை விரைந்து நிறைவேற்றவும், மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது நடவடிக்கை குறித்தும் அதை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்தோம்” என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி அளித்த பதில்:

கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் விலகுகின்றனர், தலைமை மீது அதிருப்தி காரணமா?

தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அவர்கள் விலகிச் செல்கின்றனர். தொண்டர்கள் யாருக்கும் அதிருப்தி இல்லை. கட்டுக்கோப்பான இயக்கமாக அதிமுக உள்ளது.

பிரதமரிடம் தமிழக அரசின் ஆட்சி மீது புகார் எதுவும் சொன்னீர்களா?

அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்று 3 மாதம் தான் ஆகிறது. இதில் என்ன குறைகளை நாங்கள் சொல்ல முடியும். தமிழக மக்களுக்கு தேவையான, நன்மையளிக்கும் திட்டங்களை நிறைவேற்றக் கோரினோம் அவ்வளவே.

தமிழகத்தில் லாட்டரி விற்பனை இல்லை என்று அரசு கூறியுள்ளதே?

அப்படி ஒரு தகவல் இருந்ததால் அறிக்கை விட்டோம், கற்பனையாக நான் சொல்வதாக சொல்லியிருக்கிறார்கள், எதையும் நான் கற்பனையாக சொல்லவில்லை, தமிழக அரசு லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்ததால் ஆட்சேபித்தோம். அவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் கொண்டுவரவில்லை என்றால் நல்லதுதான்.

உங்கள் பயணத்தில் உள்துறை அமைச்சரை சந்திக்கும் திட்டம் உண்டா?

இதுவரை இல்லை, அப்படி வாய்ப்பு கிடைத்தால் மத்திய உள்துறை அமைச்சரை சந்திப்போம்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதே சமயம் இந்த சந்திப்பின் போது பிரதமரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், 5 முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட எடுக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை எனில் தமிழகம் பாலைவனமாகிவிடும். தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக மாநில அரசு கூறுகிறது. மத்திய அரசு தடுப்பூசியை முறையாக வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. தமிழக மக்களை கொரோனா பிடியில் இருந்து காக்க போதுமான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.

இந்திய – இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்கிறார்கள் இந்திய அரசின் தலையீட்டின் பேரில் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். ஆனால் படகுகளைத் திரும்பத் தருவதில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையீட்டு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களின் படகுகளை திரும்பப் பெற்று தர வேண்டும்.

கோதாவரி – காவேரி ஆறு இணைப்பு திட்டத்துக்கு இந்திய அரசு முழு ஒப்புதல் தந்துள்ளதற்கு தமிழக மக்களின் சார்பிலும் அதிமுக சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு எங்களால் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதியும் வழங்கியுள்ளது. அந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி விரைந்து நிறைவேற்ற வேண்டும்” என அதிமுக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!