பதக்க மங்கை மீரா பாய் சானு ஏ.டி.எஸ்.பி.யாக நியமனம்- மணிப்பூர் அரசு உத்தரவு!

தற்போது டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு டெல்லி திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேட்டியளித்த மீராபாய் சானு, “இந்த போட்டி தீவிர சவாலாக இருந்தது. இதற்கான தயாரிப்புகளை 2016லிருந்தே தொடங்கிவிட்டோம். ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர் நாங்கள் எங்களின் பயிற்சி முறையை மாற்றியமைத்தோம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக நானும் எனது பயிற்சியாளரும் 5 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.
மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்காக கலந்துகொண்ட ஒரே வீராங்கனை மீரா பாய் தான். மொத்தம் 202 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இவருக்கும் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹோ சி ஹூய்க்கும் 8 கிலோவே வித்தியாசம். அவர் 210 கிலோ தூக்கி முதலிடம் பிடித்திருந்தார். தற்போது அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்படவிருக்கிறது. அவர் ஊக்க மருந்து உட்கொண்டிருந்தது உறுதியானால் வெள்ளி வென்ற மீரா பாய்க்கு தங்கம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது
இதனிடையே நாட்டுக்கான முதல் பதக்கத்தை சானு வென்றதையடுத்து, அவருக்கு மணிப்பூர் காவல் துறையில் கூடுதல் எஸ்.பி (விளையாட்டு) பதவி வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது என்பது .குறிப்பிடத்தக்கது.