தமிழ் குரல் / AI Voice
‘சாமியாராக இருந்தாலும் யோகி ஆதித்யநாத் வன்முறையாளர் மற்றும் வெறுப்பாளர், ‘ என்று எழுதுகிறார்கள்.
முன்பெல்லாம் என்னை பிறரிடம் அறிமுகப்படுத்துகையில் ராஜாமகள் ‘ஸ்ரீதர் நாத்திகனாக இருந்தாலும் நல்லவன்தான்,’ என்று குறிப்பிடுவார். அந்த மாதிரி இருக்கிறது இது. அதாவது ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலே அவர் defaultஆக நல்லவர் என்று அர்த்தம். மாறாக கடவுள் மறுப்பாளர் என்பவர் default ஆக பொறுக்கியாகத்தான் இருக்க வேண்டும். (இந்த முரண் அவருக்குப் பின்னர் புரிய வந்து அப்படி அறிமுகப்படுத்துவதை நிறுத்தினார்.)

என்னைப் பொருத்தவரை ஒரு மதத்தைச்-சார்ந்து இயங்கும் எந்த சாமியாரும் ஒரு வகையில் வன்முறையை ஏற்றுக் கொள்பவர்தான். காரணம் அகிம்சை என்பது உண்மையில் நவீன சித்தாந்தம். 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை அது பெரிய அளவில் சமூகத்தில் பரவலாகவில்லை. பௌத்தம் ஒரு சிறிய விதிவிலக்கு மட்டுமே. பிற அனைத்து மதங்களும் வன்முறையை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுதான் இயங்கிக் கொண்டிருந்தவைதான். இந்து மதமும் விலக்கல்ல. சொல்லப் போனால் 17ம் நூற்றாண்டு வரை உலகிலேயே ஆகப்பெரிய வன்முறை மதம் என்று இந்து மதத்தைத்தான் சொல்ல வேண்டும். காரணம் விதவைகளை அவர்களின் இறந்த கணவருடன் சேர்த்து சிதையில் எரிப்பதை பரிந்துரைத்து வழக்கத்தில் கொண்டு வந்த சமூகம். அப்படியே உயிரோடு விடப்பட்டாலும் மொட்டை அடித்து வெள்ளையுடை அணிந்து வாழக் கட்டாயப்படுத்திய சமூகம். தங்கள் சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தகுந்த மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று அவர்களை சமூகத்தை விட்டு விலக்கி வைத்து இயங்கிய சமூகம். கறுப்பின அடிமை முறையைக் கூட ‘மென்மையான விஷயம்’ என்று சொல்லும் அளவுக்கு கொடூரமான சிஸ்டம் இந்தத் தீண்டாமை. அதனை சகஜமாக ஏற்றுக் கொண்டு இயங்கி வந்த சமூகம் இது. இவை அனைத்துமே மத நியமங்களாக சொல்லப்பட்டு மத பீடாதிபதிகளின் ஆசியுடன் நடந்தவைதான். உலகில் வேறு எந்த மதமும் இந்த அளவுக்குக் கொடூரமாக இயங்கவில்லை.
பெண்களுக்கு, தலித்துகளுக்கு, பழங்குடிகளுக்கு, சூத்திரர்களுக்கு – இவர்கள் அனைவருக்கும் எதிரான வன்முறை வரலாறு கொண்டது இந்து மதம். அதாவது ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவிகிதம் பேருக்கு எதிரான நியமங்களை போதித்த மதம் இந்து மதம்.
நவீன உலகில் அப்படிப்பட்ட இந்து மத்துக்குள் பிறந்து வாழ்வது வேறு. ஆனால் அதிலேயே சாமியாராக மாறும் ஒருவர் இந்த ஒட்டு மொத்த வன்முறை வரலாற்றை ஏற்றுக் கொண்டவராகிறார். அப்படி இல்லையேல் ‘இவற்றை எல்லாம் நான் மறுதலிக்கிறேன்,’ என்று அவர் அறிவிக்க வேண்டும். இந்த நியமங்கள் அனைத்துமே சமூக விரோத சிந்தனைகள்; இவற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்துப் பாரம்பரியத்தின் உயர்வான விஷயமான தத்துவ விசார அணுகுமுறையை மட்டுமே நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் தெளிவாக அறிவிக்க வேண்டும்.
அப்படி எந்தப் பெரிய மடாதிபதியும், சங்கராச்சாரியும், சாமியாரும் ஏற்றுக் கொண்டு இயங்கியதாக தெளிவில்லை. (நாராயண குரு, விவேகானந்தர், மற்றும் சிலர் மட்டுமே கொஞ்சம் விதிவிலக்கு.) சாதியம், பெண்ணடிமை, மூடப் பழக்கங்கள், திருமண சீர்திருத்தங்கள் என்று நவீன உலகில் நடந்த அனைத்து மாற்றங்களும் செக்யூலர் தலைவர்கள் முன்னெடுத்துப், பின்னர் அரசியல் சட்ட வடிவங்கள் மூலம் செக்யூலர் அரசுகள் கொண்டு வந்தவை.
யோகி ஆதித்யநாத்துமே கூட இந்து மதத்தின் அதன் அனைத்து பாரம்பரியங்களையும் ஏற்றுக் கொண்டு இயங்கி வரும் ‘சாமியார்'(!) தான். கூடவே இந்து மதத்தின் நவீன கொடூர வெர்ஷனாக சவர்க்கர் உருவாக்கிய இந்துத்துவத்தையும் போற்றும் சாமியார். அதாவது பெண்கள், தலித்துகள், பழங்குடிகள் மற்றும் சூத்திரர்கள் இவர்களை வெறுக்கும் இந்து மதம் 1.0. பெண்கள் தலித்துகள், சூத்திரர்கள், பழங்குடிகள் இவர்களுடன் முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள் இவர்களையும் சேர்த்தே வெறுக்கும் இந்து மதம் 2.0, இந்துத்துவம்.
யோகி ஒரு இந்துத்துவ சாமியார். அதாவது வன்முறையின் அப்டேடட் வர்ஷனின் சாமியார். நவீன காலத்து சாமியார்கள் அனைவருமே ஏறக்குறைய இந்த மாதிரி அப்டேடட் வர்ஷன் ஆட்கள்தான். இவர்கள் யாரும் அகிம்சையை, சமத்துவத்தை, நல்லிணக்கத்தை, அறிவியலை போதிப்பவர்கள் அல்ல. மூட நம்பிக்கைகளை, பெண்ணடிமைத்தனத்தை, சாதிப் பாகுபாட்டை, மத வெறுப்புகளை, மதவாத வன்முறையை – இவற்றை எல்லாம் பின்பற்றும், போதிபபவர்கள். சாமியாராக மாறி கோவணம் கட்டி காட்டில் புழு பூச்சிகளுக்கு இடையே தவம் செய்து கொண்டிராமல், நாட்டில் பதவிகளுடன் அதிகாரத்தை சுவைத்துக் கொண்டிருக்கும் சாமியார்கள்; அல்லது கார்ப்பரேட் ஆசிரமத்தில் ஆடம்பரங்களை சுவைக்கும் சாமியார்கள். வேறு எளிய வார்த்தையில் சொல்வதென்றால் ஃப்ராடுகள். Charlatans who deceive people using their saintly image.
எனவே, சாமியாராக இருந்தாலும் இவர்கள் வன்முறையாளர்கள் என்று சொல்வது தவறு. சாமியாராக இருப்பதினால்தான் வன்முறையாளர், வெறுப்பாளர் என்று சொல்வதுதான் ஓரளவுக்கு சரியாக இருக்கும்.
