ரைட்டர் – விமர்சனம்!

ரைட்டர் – விமர்சனம்!

மிழகம் முழுவதும் தற்போது, 196 அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள், 59 புறக்காவல் நிலையங்கள் உட்பட, 1,492 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, மக்கள் தொகையை அடிப்படையைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட போலீசார் தேவை, 1 லட்சத்து, 9,522 பேர். ஆனால், கடைசியாக கிடைத்த தகவல்படி இருப்பதோ, 88 ஆயிரத்து, 218 பேர் மட்டுமே. ஆக மொத்தம், 21 ஆயிரத்து, 304 போலீஸ் பற்றாக்குறையில், மழையோ, வெயிலே, இரவோ, பகலோ ஓய்வு இன்றி பணி செய்தாலும், சினிமாவிலும், சீரியல்களிலும் அதிகம் கிண்டலுக்கு ஆளாக்கப்படுவது தமிழ்நாடு போலீஸ்தான். ஸ்காட்லாண்ட்யார்டு போலீசுக்கு நிகராக பலரால் பெருமையாக பேசப்பட்டது. ஆனால் அப்பேர்பட்ட தமிழக காவல்துறையில் இன்றைக்கு பலரும் குமுறிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் காவலர் பணியின் முதல்படியாக இரண்டாம் நிலை காவலர் என்ற பணிக்கே ஆள் எடுப்பார்கள். இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டபின் பணியிடம் தரப்படும். 10 ஆண்டுகள் வரையில் இவர்கள் தண்டனை ஏதும் இன்றி பணியாற்றி வந்தபின் இவர்களுக்கு முதல் நிலைக் காவலர் அந்தஸ்து வழங்கப்படுகிறது. அவர்களின் காக்கிச் சட்டையில் 2 கோடுகள் அதிகரிக்கும். 25 ஆண்டுகள் பணி முதல் நிலைக் காவலராக பணியாற்றி 5 ஆண்டுகள் வரை தண்டனை ஏதுமின்றி பணியாற்றினால், தலைமைக் காவலர் ஆக பதவி உயர்வு பெறுவார்கள். அப்போது காக்கிச் சட்டையில் 3 கோடு கொடுப்பார்கள். அப்படியான ஏட்டய்யா என்றழைக்கப்படும் இப்பணியில் உள்ள ஒரு கேரக்டரை வைத்து ரைட்டர் என்ற தலைப்பில் காவல் துறையில் நடக்கும் அத்துமீறல்களையும், அடாவடி போக்கையும் வெளிச்சமிட்டு காட்ட முயன்றிருக்கிறார்கள்.

 

கதை என்னவென்றால் திருச்சி சிட்டியிலுள்ள ஒரு போலீஸ் ஸ்டேசனில் ரைட்டராக (எழுத்தர்) பணிபுரியும் தங்கராஜ் (சமுத்திரகனி) காலவர்களின் உரிமைகளுக்காக போலீஸ் சங்கம் அமைக்கப் போராடுகிறவர். அதன் காரணமாக உயர் அதிகாரியால் சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படுகிறார். சென்னை வந்த இடத்தில் சட்டத்துக்குப் புறம்பாக உயர் அதிகாரியின் தனிப்பட்ட உத்தரவின் பேரில் பி.எச்டி படிக்கும் மாணவன் ஒருவன் சிறை பிடிக்கப்பட்டுள்ளான். எதற்காக சிறைபிடிக்கப்பட்டான் என்பது குறித்து அவனுக்கே ஒன்றும் தெரியாது. அவனை காவல் காக்கச் செல்லும் சமுத்திரகனி அவன் குற்றமற்றவன் என்பதை கண்டு கொள்கிறார். இதை அடுத்து எதற்காக அவன் சிறை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறான் என்றறிந்து அவனை விடுவிக்க முயலும் சமுத்திரகனியின் அவஸ்தைதான் படம்,

ரைட்டராக அதுவும் இன்னும் சில மாதங்களில் ரிட்டயர் ஆகப் போகும் ரோலில் கொஞ்சூண்டு தொப்பை சகிதம் சமுத்திரகனி மிக இயல்பாக பொருந்தி போகிறார். குறிப்பாக மேல் அதிகாரி அடி வாங்கி விட்டு வெளியே வந்து சகஜமாக பேசும் காட்சி, கைதிகளிடம் பரிவு காட்டும் போக்கு , பள்ளியில் தலை குனிந்து வேதனைப்படுவது என்று நடிச்சே அசத்தவும் தெரியும் என்று நிரூவிக்கிறார்.

ரைட்டர் கதையோட்டத்துக்கு முக்கிய பாத்திரத்தில் ரிசர்ச் ஸ்டூடண்டான ஹரி கிருஷ்ணன், சபாஷ் சொல்ல வைக்கிறர். க்ளைமாக்ஸ் காட்சியில் உயிருக்காக அழும் காட்சி அருமை. ஸ்டேசனில் எடுபிடி வேலைகள் செய்யும் ரோலில் வரும் ராஜா (ஆண்டனி) யதார்த்தமாக நடித்திருக்கிறார். தப்பைக்கூட தடயம் இல்லாமல் செய்யும் அந்த உடல்மொழியும் சரி, ‘திருடனை மனுசனா நடத்துங்க போதும்’ என்கிற இடம் தொடங்கி பல இடங்களில் சாதாரணமாக ஸ்கோர் செய்து விட்டுப் போகிறார்.

சுப்பிரமணிய சிவா வசனங்களாலும், உணர்ச்சியைக் கொட்டுவதிலும் தனிக் கவன்ம பெறுகிறார். கவிதா பாரதி பக்கா போலீஸ் ஆபீசராகாவே மாறி மிரட்டுகிறார் . வுமப் போலீஸ் சரண்யாவாக வரும் இனியா தனித்து கவர்கிறார். சாதியைக் காரணம் காட்டி குதிரை சாணியை அள்ள விட்ட கமிஷனருக்கெதிராக குதிரையில் சென்று திமிறியபடி எதிர்கொள்வதைக் கண்டு அப்ளாஸ் அள்ளுகிறது

கேமரா ஒர்க்கும் ம்யூசிக் டீமும் ரைட்டருக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்துள்ளார்கள்..

புது முக இயக்குநர் ஃபிராங்கிளின் பலரும் கையாண்ட போலீஸ் கதையில் இது வரை யாரும் தொடாத கோணத்தில் சிண்டித்து அதை சகலரும் ரசிக்கும்படியும் கொடுத்துள்ளார். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் மாண்ட ராம்குமார் வழக்கையும் டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கையும் பின்னி தான் சொல்ல வேண்டிய பல சமாச்சாரங்களை கடத்துவதில் வெற்றி அடைந்து விட்டார்கள் என்றே சொல்லலாம்

மொத்தத்தில் இந்த ரைட்டர் -கைத்தட்டல் வாங்கி விட்டார்

மார் 3.5 / 5

error: Content is protected !!