சார் போஸ்ட் – உலக தபால் தினம்!

சார் போஸ்ட் – உலக தபால் தினம்!

ன்று நாம் உள்ளங்கையில் அடங்கிவிட்ட வாட்ஸ் அப், இ-மெயில் போன்ற அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் நொடிப்பொழுதில் உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் தொடர்பு கொள்கிறோம். ஆனால், இவற்றுக்கெல்லாம் மூத்த தகவல் தொடர்புக் கருவியாக, ஒரு காலத்தில் அன்பையும், பாசத்தையும், செய்திகளையும் சுமந்து, இதயங்களை இணைக்கும் ஒப்பற்ற சேவையை ஆற்றியது அஞ்சல் என்னும் தபால் சேவையே ஆகும்.

அஞ்சல்துறையின் சர்வதேசப் பங்களிப்பை நினைவுகூரும் வகையிலும், அதன் மகத்தான சேவையைப் போற்றும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக தபால் தினம் (World Post Day) கொண்டாடப்படுகிறது. 1874 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் பொது அஞ்சல் ஒன்றியம் (Universal Postal Union – UPU) நிறுவப்பட்டதைக் குறிக்கும் விதமாக, 1969 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர் ரோலண்ட் ஹில் முதல் ஹென்ரிச் வான் ஸ்டீபன் வரையிலான அறிஞர்களின் முயற்சிகளால் உருவான இந்த சர்வதேச அமைப்பு, நாடு, மொழி, இனம் போன்ற வேறுபாடுகளைக் களைந்து, உலகை ஒரே அஞ்சல் பிரதேசமாக மாற்றியதன் வரலாற்றையும், தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் மத்தியில் அஞ்சல் துறை சந்திக்கும் சவால்களையும், அதன் நீடித்த முக்கியத்துவத்தையும் இந்த நாளில் விரிவாக தெரிந்து கொள்வோமா?.

அஞ்சலின் சமூகப் பண்பாட்டுப் பங்கு

  • இதயங்களை இணைக்கும் சேவை: அஞ்சல் சேவை நாடு, இனம், மதம், மொழி போன்ற வேறுபாடுகளைக் கடந்து, இதயங்களை இணைக்கும் ஒப்பற்ற சேவையாகும்.
  • பண்பாடு மற்றும் மொழிச் சின்னம்: அவரவர் பண்பாடு, கலாச்சாரத்திற்கு ஏற்ப மொழிகளைச் சுமந்து செல்லும் கடிதங்கள், மொழிக்கு விழியாக இருக்கின்றன என்பது அறிஞர்களின் கூற்று.
  • உணர்ச்சிப் பரிமாற்ற வடிகால்: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அன்பொழுக வார்த்தைகளை முத்து முத்தாய் எழுதிய கடிதங்கள் நம் வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் (நட்பு, பாசம், கோபம், காதல்) வலம் வந்தன. இவை உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கும் வடிகாலாகவும் இருந்தன.

தொழில்நுட்பத்தின் வருகையால் ஏற்பட்ட மாற்றம் 

பல பரிணாமம் : பழங்ககாலத்தில் புறாவின் கால்களில் கடிதத்தை கட்டி தகவல்கள் அனுப்பப்பட்டன. மன்னர்கள் ஆட்சியின் போது ஒற்றர்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டன. பின் தகவல்கள் தபால் துறை மூலமாக பரிமாறப்பட்டன.

  • வேகமான தொடர்பு சாதனங்கள்: உள்ளங்கையில் அடங்கிவிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ் அப், இ-மெயில், இன்டர்நெட், அலைபேசி போன்ற பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.
  • பரவசத்தின் இழப்பு: கடிதங்கள் கைக்கு வந்து சேர மூன்று நாட்கள் காத்திருந்து, அதைப் பிரித்து, படித்து ரசித்தபோது ஏற்பட்ட பரவசமும், புத்துணர்வும் இப்போது இல்லை என்பது உண்மை.

தபால் சேவையின் பின்னணி மற்றும் வரலாறு

  • உலக தபால் தினத்தின் தொடக்கம்: அக்டோபர் 9 ஆம் தேதி உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் 1874 இல் தொடங்கப்பட்ட உலக தபால் அமைப்பை (Universal Postal Union – UPU) நினைவுகூரும் விதமாக, 1969 இல் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
  • 150-க்கும் மேற்பட்ட நாடுகளில்: இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • சர் ரோலண்ட் ஹில்லின் சீர்திருத்தம் (1840): இங்கிலாந்தில், சர் ரோலண்ட் ஹில் என்பவர் கடிதங்களுக்கு முன்கூட்டியே தபால் செலுத்தும் முறையையும், ஒரு குறிப்பிட்ட எடை கொண்ட உள்நாட்டு கடிதங்களுக்கு ஒரே விகிதம் வசூலிக்கும் முறையையும் கொண்டு வந்தார். இவர் உலகின் முதல் தபால் தலையையும் அறிமுகப்படுத்தினார்.
  • சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தின் தோற்றம்:
    • 1863: மாண்ட்கோமெரி பிளேர் (யுனைடெட் ஸ்டேட்ஸ் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்) பாரிஸில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தும் சர்வதேச ஒப்பந்தம் நிறுவப்படவில்லை.
    • 1874: ஹென்ரிச் வான் ஸ்டீபன் ஒரு சர்வதேச அஞ்சல் தொழிற்சங்கத்திற்கான திட்டத்தை வகுத்தார். அவரது ஆலோசனையின் பேரில், சுவிஸ் அரசாங்கம் செப்டம்பர் 15, 1874 அன்று பெர்னில் ஒரு மாநாட்டை நடத்தியது.
    • அக்டோபர் 9, 1874: பொது அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டு உலக அஞ்சல் நாள் தொடங்கப்பட்டது.
    • 1878: இதன் பெயர் யுனிவர்சல் தபால் ஒன்றியம் என மாற்றப்பட்டது.
  • பெர்ன் ஒப்பந்தம்: 1874-இல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், சர்வதேச அஞ்சல் சேவைகள் மற்றும் கடிதப் பரிமாற்றத்தை ஒரே அஞ்சல் பிரதேசமாக ஒழுங்குபடுத்துவதில் வெற்றி பெற்றது.

 சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை, அன்பொழுக வார்த்தைகளை பயன்படுத்தி நட்புகளும், உறவுகளும் முத்து முத்தாய் நமக்கு எழுதிய கடிதங்கள் 3 நாட்கள் கழித்தே கைக்கு வந்து சேர்ந்தது. அதை பிரித்து, படித்து, ரசித்தபோது ஏற்பட்ட  பரவசமும், புத்துணர்வும் இப்போது இல்லை என்பதும் உண்மை. ஆம்… அஞ்சல் என்னும் கடிதங்கள் வாழ்வில் அனைத்து தருணங்களிலும் நம்மிடம் வலம் வந்தது. நட்பு, பாசம், கோபம், தாபம், காதல், மோதல் என்று அனைத்தையும் கொட்டித்தீர்க்கும் வடிகாலாகவும் இருந்ததே இதற்கான காரணம். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். இன்றைய தகவல்களும் கூட நாளைய சமுதாயத்திற்கான வரலாறாக மாறும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் கரங்களில் எழுதுகோல் தாங்கி கடிதங்களை தீட்டுவோம். இதன்மூலம் மொழிக்கான விடிவெள்ளியாக இருந்து அதற்கு ஒளியூட்ட இனிய நாளில் உறுதியேற்க வேண்டும் என்கின்றனர் காலம் கடந்தும் கடிதங்களை நேசிக்கும் நமது முன்னோடிகள்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts