உலக புகைப்பட தினம்…
புகைப்படம் என்பது வெறும் படமல்ல, அது ஒரு கலை. அதற்கு ஒரு மகத்தான வலிமை உண்டு. சில சமயங்களில் உலக வரலாற்றையே மாற்றும் சக்தி ஒரு புகைப்படத்திற்கு உண்டு. ஆம், தனிமனிதனின் அன்றாட வாழ்க்கையில் தொடங்கி, வரலாற்று நிகழ்வுகள், மகிழ்ச்சி, துன்பம், பொதுக்கூட்டங்கள், தலைவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது புகைப்படம். ஒரு தலைமுறையின் சாதனைகளையும், கதைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பாலமாக புகைப்படங்கள் திகழ்கின்றன. குறிப்பாகச் சொல்வதானால் மனிதன் தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும் ஒரு சில கண்டுபிடிப்புகளில் புகைப்படம் ஒன்று. அப்படியாக பல நினைவுகளை, அழுகைகளை, உணர்வுகளை உலகெங்கும் தாங்கி நிற்கின்றன லட்சோப லட்ச புகைப்படங்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமின்றி புகைப்படம் முக்கியமான சமூக பிரச்சனைகளில் வகிக்கும் இடம் மிகப் பெரியது. பல கலவரங்களை, போர்களை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை பல புகைப்படக் காரர்களுக்கு உண்டு. 2003 குஜராத் கலவரத்தில் இருந்து வந்த புகைப்படம் ஆகட்டும், சமீபத்தில் மணிப்பூர் கலவரத்தில் இருந்து வெளிவந்த பெண்களின் நிர்வாண ஊர்வல புகைப்படம் ஆகட்டும்… வார்த்தைகள் கொண்டு செல்வதை விட அதிக மக்களுக்கு, அதிக ஆழத்துடன் விஷயங்களை கடத்துவதில் பெரும் பங்கு புகைப்படங்களுக்கு உண்டு.

தூரிகையைக் கொண்டு வரையப்படும் ஒரு ஓவியம், ஒரு தனித்த படைப்பாக இருக்கலாம். ஆனால், ஒரு புகைப்படம் ஒரு நிமிடத்திற்குள் துல்லியமாக ஒரு காட்சியைக் காட்சிப்படுத்தி, அதிலிருந்து பல நகல்களை எடுக்க அனுமதிக்கிறது. புகைப்படக் கருவி (கேமரா) ஒரு காட்சியை அதன் உண்மையான வடிவத்தில், உள்ளது உள்ளபடியே காட்சிப்படுத்துகிறது. பல கதைகளையும், தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு புகைப்படம், ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாததை ஒரே நொடியில் உணர்த்திவிடும் ஆற்றல் கொண்டது. மக்களின் மனதில் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமையும் புகைப்படங்களுக்கு உண்டு.
உலகமெங்கும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலகப் புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பின்னணி, ஒரு வரலாற்று நிகழ்வோடு தொடர்புடையது. 19-ஆம் நூற்றாண்டில், ஃபிரெஞ்சுக்காரரான லூயிசு டாகுவேரே (Louis Daguerre) என்பவர் ‘டாகுரியோடைப்’ (Daguerreotype) என்றழைக்கப்படும் புகைப்படச் செயல்முறையை வடிவமைத்தார். இதற்கான காப்புரிமையை 1839ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஃபிரான்ஸ் அகாடமி வழங்கியது. அதன் பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி, ஃபிரான்ஸ் அரசாங்கம் இந்த ‘டாகுரியோடைப்’ செயல்முறையை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையிலேயே, ஆகஸ்ட் 19ஆம் தேதி உலகம் முழுவதும் புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

லூயிசு டாகுவேரே, பாரிஸில் உள்ள போல்வர்டு கோயிலைப் புகைப்படம் எடுத்தார். அதுவே, தனிநபரால் எடுக்கப்பட்ட உலகின் முதல் புகைப்படமாகக் கருதப்படுகிறது. புகைப்படக் கலைஞர்களின் சாதனைகளையும், இந்தக் கலையின் மகத்துவத்தையும் போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் பல்வேறு அமைப்புகளால் சிறந்த புகைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, பத்திரிகை துறையில் எடுக்கப்படும் சிறந்த புகைப்படங்களுக்கு ‘வேர்ல்டு பிரஸ் போட்டோ’, ‘டைம்’ இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் போன்ற மதிப்புமிக்க அங்கீகாரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆக, ஒரு சாதாரண புகைப்படம் வெறும் படமல்ல, அது ஒரு தலைமுறையின் பதிவாகவும், ஒரு சமூகத்தின் ஆவணமாகவும், ஒரு தனிநபரின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும் திகழ்கிறது.
நிலவளம் ரெங்கராஜன்


