32°C
விளம்பரம்
Advertisement

பன்னாட்டு ஓசோன் படலப் பாதுகாப்பு நாள் 2026!

admin சேலம் Published: September 16, 2026 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



பூமிக்கு மேலே தோராயமாக 15 முதல் 30 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஸ்ட்ராட்டோஸ்பியர் வளிமண்டல அடுக்கில் ஓசோன் மூலக்கூறுகள் செறிந்து காணப்படுகின்றன. சூரியனிடமிருந்து வெளிப்படும் ஆபத்தான மற்றும் வீரியமிக்க புற ஊதா-சி (UV-C) மற்றும் புற ஊதா-பி (UV-B) கதிர்களை இந்த அடுக்கு சுமார் 99 சதவீதம் வரை உறிஞ்சிப் பூமியைத் தடுத்து நிறுத்துகிறது. இந்த இயற்கையான வடிகட்டி இல்லாவிட்டால், மனிதகுலத்திற்குத் தீவிரமான தோல் புற்றுநோய், விழித்திரை பாதிப்பு மற்றும் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். மேலும், நிலப்பரப்பில் உள்ள தாவரங்களின் ஒளிச்சேர்க்கை திறனை முழுமையாக முடக்கி, ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியையும் சிதைக்கும் பேராபத்திலிருந்து இந்த கண்ணுக்குத் தெரியாத போர்வை நம்மைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.

கிகாலி திருத்தமும் 2026ஆம் ஆண்டின் சிறப்பு மையக்கருத்தும்

பன்னாட்டு ஓசோன் படலப் பாதுகாப்பு நாளான செப்டம்பர் 16ஆம் தேதியன்று, ஓசோன் பாதுகாப்பின் அடுத்த பரிமாணத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான சிறப்பு மையக்கருத்து குளிர்ந்த பூமிக்கான உலகளாவிய நடவடிக்கை (Global action for a cooler planet – Celebrating 10 years of sustainable cooling under the Kigali Amendment to the Montreal Protocol) என்பதாகும். மான்ட்ரீல் நெறிமுறையின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க கிகாலி திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பத்தாண்டு நிறைவைக் குறிக்கும் இந்தத் தீம், குளிர் சாதனத் துறையில் நிலையான மற்றும் பூமிக்கு உகந்த குளிரூட்டும் முறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை உலக நாடுகளுக்கு அழுத்தமாக நினைவூட்டுகிறது.

மான்ட்ரீல் நெறிமுறையின் வரலாற்றுச் சாதனைகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரலாற்றில் மிக வெற்றிகரமான பன்னாட்டு ஒப்பந்தமாக மான்ட்ரீல் நெறிமுறை கருதப்படுகின்றது. கடந்த 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, ஓசோன் படலத்தில் ஓட்டைகளை ஏற்படுத்திய குளோரோபுளோரோகார்பன்கள் (CFCs), ஹேலான்கள் மற்றும் கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற நச்சு வேதிப்பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு உலகளாவிய அளவில் படிப்படியாகத் தடை செய்யப்பட்டன. இந்தத் தடை நடவடிக்கைகளின் நேரடிப் பயனாகவும் கூட்டு முயற்சியின் வெற்றியாலும், அண்டார்டிகா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த மெல்லிய பகுதிகள் மீண்டு வருவதும், ஓட்டை சுருங்கி வருவதும் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் அறிவியல் ஆய்வுகள் மூலம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிகாலி திருத்தமும் ஹைட்ரோஃப்ளோரோகார்பன்களின் (HFCs) சவாலும்

ஓசோன் படலத்திற்குத் தீங்கு விளைவித்த CFC வாயுக்களுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட ஹைட்ரோஃப்ளோரோகார்பன்கள் (HFCs) ஓசோனைப் பாதுகாக்க உதவினாலும், அவை புவி வெப்பமயமாதலை அதிதீவிரமாகத் தூண்டும் ஆற்றல் கொண்டவை என்பது பிற்காலத்தில் கண்டறியப்பட்டது. கார்பன் டை ஆக்சைடை விட ஆயிரக்கணக்கான மடங்கு வெப்பத்தை வளிமண்டலத்தில் தக்கவைத்துக்கொள்ளும் இந்த HFC வாயுக்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு ருவாண்டா நாட்டின் கிகாலி நகரில் மான்ட்ரீல் நெறிமுறையில் வரலாற்றுச் திருத்தம் செய்யப்பட்டது. அடுத்த சில தசாப்தங்களுக்குள் HFC பயன்பாட்டை 80 சதவீதத்திற்கும் மேல் குறைப்பதன் மூலம், பூமியின் சராசரி வெப்ப உயர்வைக் கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

நிலையான குளிரூட்டலும் எதிர்காலத்திற்கான உலகளாவிய நடவடிக்கையும்

தற்காலத்தில் உலகெங்கிலும் அதிகரித்து வரும் தீவிர வெப்ப அலைகள் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏசி சாதனங்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளையில், ஆற்றல் திறன் கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைத் தொழில்நுட்பங்களை (Green Technology) உருவாக்குவதே இப்போதைய மிகப்பெரிய சவாலாகும். ஆற்றல் சேமிப்பு, இயற்கை குளிரூட்டும் முறைகள் மற்றும் குறைவான கரித்துகள் உமிழ்வு கொண்ட நவீன குளிர்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை நோக்கித் தொழில்துறைகளும் அரசாங்குகளும் முழுமையாக மாறுவதன் மூலமே ஒரு நிலையான மற்றும் குளிர்ந்த பூமியை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியும்.

நிலவளம் ரெங்கராஜன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்