தமிழ் குரல் / AI Voice
நமது நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. எந்தவொரு சிறிய பொருளை வாங்கினாலும் கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ செயலிகள் மூலமாகப் பணத்தைச் செலுத்தும் பழக்கம் சாமானிய மக்களின் அன்றாட வாழ்வியலாக மாறிவிட்டது. இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகள் மீது வர்த்தகர்களுக்கான கட்டணத்தை (Merchant Discount Rate – MDR) விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத் திருத்தம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணப்பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தில் திருத்தம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய பணப்பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் (Payment and Settlement Systems Act) பிரிவு 10A-இல் செய்யப்பட்டுள்ள திருத்தமானது பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. இதுவரை அனைத்து விதமான யுபிஐ பரிவர்த்தனைகளும் எந்தவிதக் கட்டணமும் இன்றி இலவசமாகச் செய்யப்பட்டு வந்தன. ஆனால், புதிய சட்டத்திருத்தத்தின்படி, ரூ.2,000 வரை செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே தொடர்ந்து கட்டணம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், ரூ.2,000-க்கும் அதிகமான தொகைக்கான வர்த்தகர் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலித்துக்கொள்ளச் சட்டப்பூர்வமான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கட்டண விதிப்புக்கான காரணமும் மறைமுகச் சுமையும்
யுபிஐ கட்டமைப்புக்கான பராமரிப்புச் செலவுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறி இந்த வர்த்தகக் கட்டண வரைமுறை நியாயப்படுத்தப்படுகிறது. ஆன்லைன் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்தச் செலவுகள் அவசியம்தான் என்றாலும், இதற்கான நிதிச்சுமை யாரிடம் போய் சேரும் என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது. வர்த்தகர்கள் தங்களுக்கு ஏற்படும் இந்தக் கூடுதல் கட்டணச் செலவுகளைத் தாங்களே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, வாடிக்கையாளர்கள் மீது அல்லது பொருட்கள் மீதான விலையில் மறைமுகமாகச் சுமத்தக்கூடும். இது இறுதியில் சாமானிய மக்களின் பொருளாதாரத்தின் மீது விழும் மற்றொரு மறைமுக வரியாகவே மாறும்.
டிஜிட்டல் இந்தியாவின் இலக்கும் எதேச்சதிகாரப் போக்கும்
ஆரம்பத்தில் பொதுமக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைப் பாதைக்கு முழுமையாகப் பழக்கிவிட்டு, தற்போது அதில் ஒருவித சுங்கக் கட்டணம் போல் பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கத் துடிக்கும் மத்திய அரசின் இந்தப் போக்கு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. நாட்டின் நிதிப் பரிமாற்றங்களை வெளிப்படையாகவும், எளிய முறையிலும் மாற்றியமைத்த யுபிஐ கட்டமைப்பின் அடிப்படையான நம்பிக்கையையே இத்தகைய முடிவுகள் குலைத்துவிடும் அபாயம் உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமையை ஏற்றிவிட்டு, டிஜிட்டல் இந்தியா வெற்றிகரமாகச் செயல்படுவதாகக் கூறுவதில் எந்த அர்த்தமும் இருக்க முடியாது.
மொத்ததில் மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டரக் கலந்துவிட்ட யுபிஐ சேவைகளில் வர்த்தகக் கட்டணங்களை அனுமதிப்பது பொருளாதார ரீதியில் பின்னடைவை ஏற்படுத்தும் செயலாகும். அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கு டிஜிட்டல் இந்தியாவின் உண்மையான நோக்கத்திற்கே முரணாக அமைந்துள்ளது. எனவே, சாமானிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீது மறைமுகச் சுமையை ஏற்படுத்தும் இத்தகைய கட்டண முறைகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விக்கி
