உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31

லகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே’ இத்தினத்தின் நோக்கம்.புகையிலை நிறுவனங்களின் நூதன வர்த்தக தந்திரங்களும், புகையிலையின் ஆபத்தைக் குறித்த அலட்சிய போக்கும் புகையிலை பொருட்களின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டிற்கு காரணமாகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் இந்தியா உள்பட 170 உறுப்பு நாடுகள் புகையிலையை முழுமையாக கட்டுப்படுத்துவதை லட்சியமாக வைத்து உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.இந்த உடன்படிக்கை மிகப்பெரிய கனவை நோக்கிய தீரமான காலடி சுவடாக சிறப்பிக்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு உறுப்பு நாடும் உடன்படிக்கையை நிறைவேற்ற எவ்வகையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதை பொறுத்து தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது. உடன்படிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசும் புகையிலை பொருட்களின் விநியோகம் மற்றும் விளம்பரம் தொடர்பாக சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. ஆனால், இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியமாகும் என்பதை உணர்த்தும் தினமிது.

கடந்த 1987-ல் உலக சுகாதார நிறுவனம் மே 31 ஆம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக அறிவித்தது. ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் இறந்து வருகிறார்கள். இவர்களுள் 10 லட்சம் பேர் இந்தியர்கள்.15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 57% பேரும், பெண்களில் 10.8% பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் உபயோகிக்கின்றனர். புகையிலையினால் ஏற்படும் வாய்புற்று நோய் இந்தியாவில் லட்சத்திற்கு 10 பேரை பாதிக்கிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 13% மரணங்களுக்கு புகையிலை பழக்கம் காரணமாக அமையும். உலகில் ஆண்கள் 47%, பெண்கள் 12% புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்கள்.

வளர்ந்த நாடுகளில் 42% ஆண்களும் 24% பெண்களும், வளரும் நாடுகளில் 48% ஆண்களும் 7% பெண்களும் புகைபிடிக்கிறனர். இந்தியாவில் 53% ஆண்களும் 3% பெண்களும் (குறிப்பாக வயது வந்த இளம்பெண்கள்) புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எய்ட்ஸ் நோய் (எச்.ஐ.வி.), காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படுவது அதிகமாக இருக்கிறது.

புகை பிடிப்பது மூலம் வாய், நுரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என பல நோய்கள் வருகின்றன. தொடர் புகைப் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் விரைவிலேயே வருகிறது. புற்று நோய், இதய நோய் ஆகியவற்றை புகைப்பழக்கம் 30 சதவீதம் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.புகைப்பழக்கத்திற்கு உலகம் முழுவதும் 115 (2011 நிலவரம்) கோடிக்கும் மேலானவர்கள் அடிமையாகியுள்ளனர். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்கள்தான் அதிகமாக புகை பிடிக்கிறார்கள். தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் வாழ்க்கையில் தினமும் 5 நிமிடங்கள் குறைகிறது. புகை பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி ஆகியவற்றின் புகையை நுகர்வதால் இருமல், சளி உருவாகி ஆஸ்துமா பிரச்சனை வருகிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் புகை பிடித்தால், அது ஆஸ்துமாவை மேலும் அதிகரித்து, மூச்சுத் திணறலை உருவாக்கி உயிருக்கே உலை வைக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பாதிக்கும், அது இறந்தே பிறக்கக்கூடும். ஆர்வக் கோளாரினால் புகைபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். பெற்றோர், உறவினர், நண்பர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களை பார்த்துப் புகை பிடிப்பவர்கள் அதிகம்.ஒருவர் புகை பழக்கத்தை நிறுத்தினால் இதய நோய், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வலிப்பு நோய் போன்றவை படிப்படியாக குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகை பழக்கத்தைக் கைவிட்டு 10-15 ஆண்டுகள் கழித்து தான் மனிதன் முழு ஆரோக்கியம் பெறுகிறான். அது வரைக்கும் அதன் பாதிப்பு உடலுக்குள்ளே இருந்துக் கொண்டேதான் இருக்கும்

தாய்லாந்து, தைவான், மலேசியா போன்ற நாடுகளில் வயது வந்தோருக்கு மட்டுமே கண்டிப்பாக பீடி, சிகரெட் போன்றவை விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அது தீவிரமாகவும் அமல்படுத்தப்படுகிறது. இதனால், அங்கு சிறுவர்கள் புகைப்பது என்பது அரிதாகவே காணப்படுகிறது. இந்தியாவில் சட்டம் என்ன தான் போட்டாலும், பெரும்பாலான வியாபாரிகள், வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.எந்த ஒரு வருமானமும் நியாமானதாக இருக்க வேண்டும் என்று வியாபாரிகள் செய்தால் இது போல் செய்யமாட்டார்கள். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பது தமிழ்நாட்டில் குற்றம். மீறி விற்கும் கடைக்காரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறித்து பொது மக்களும் புகார் கொடுக்க முன் வரவேண்டும்.

புகை பிடிப்பவர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் ஆரோக்கிய பராமரிப்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9 சதவிகிதம் செலவிடப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் இது வெறும் 3% ஆக இருக்கிறது. புகை பிடித்தலுக்கும் பண்புகளின் சீர்குலைவிக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியலாளர்கள் முன்பே அறிந்திருந்தனர்.

ஆனால், மனித பண்புகளை பாதிக்கின்ற காரணிகள் பல இருப்பதால், புகைபிடித்தல் பண்புகளில் சீர்குலைவை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு கூறமுடியவில்லை. புகைபிடித்தல் மன அழுத்த அறிகுறிகளை உருவாக்கலாம் என்றும், அந்த அறிகுறிகளை போக்கும் விதமாக புகைபிடித்தலை தொடர்ந்து, அப்பழக்கத்திற்கு அடிமையாகும் ஆபத்து அதிகரிக்கும் என்ற கருத்திற்கு ஆதரவாக இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன. அதாவது புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் தனது உடலளவில் ஏற்படும் மாற்றங்களை போக்க அனைவரும் எண்ணுவர்.

இருமல், கை நடுக்கம் உள்ளிட்ட அழுத்த உணர்வுகளின் பல அறிகுறிகளிலிருந்து உடனடியாக விடுபட மீண்டும் புகைபிடித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இவ்வாறு தொடர்வதால் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகி அதிலிருந்து மீள்வது கடினமாகிறது. பதின்ம வயது இளைஞர்களுக்கு புகை பிடிக்காதீர்கள், புகைபிடிக்க ஒரு முறை கூட முயற்சிக்க வேண்டாம் என்பதே இந்த ஆய்வின் செய்தியாக உள்ளது.எப்போதாவது புகைபிடித்தால் கூட, அது நீண்டகால பாதிப்புகளை கொண்டு வரும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். பெரியோர் புகைப்பிடித்து விட்டு தூக்கி எறியும் துண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து புகைக்க நினைக்கும் பதின்ம வயதினருக்கு இந்த ஆய்வு ஓர் எச்சரிக்கை.புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ஒன்றும் உலக மகா கஷ்டமான காரியமல்ல. மனது வைத்தால் எல்லாம் முடியும். புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது நூலகம், கோவில் போகலாம்; தியானம் செய்யலாம். வாழ்வை புகையாக்கும் புகை பழக்கம் நமக்கு வேண்டாமே. புகை நமக்கு பகை. மொத்தத்தில் புகையிலையை ஒழித்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

Related Posts