பன்னாட்டு உணவு பாதுகாப்பு தினம்!

பன்னாட்டு உணவு பாதுகாப்பு தினம்!

ண்டுதோறும்  ஜூன் 7 ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது. “உணவே மருந்து” என்ற நம் முன்னோர் வாக்கு, இன்றைய காலகட்டத்தில் “மருந்தே உணவு” என்ற நிலை மாறிவிட்டதற்கு, உணவுப் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்துகிறது. பாதுகாப்பான உணவு, மனித ஆரோக்கியம், பொருளாதார நல்வாழ்வு, விவசாயம், சந்தை அணுகல், சுற்றுலா மற்றும் நிலையான வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

வரலாற்றுப் பின்னணி:

உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2018 ஆம் ஆண்டில் தீர்மானத்தின் மூலம் கொண்டு வந்தது. நெதர்லாந்து ராஜ்ஜியத்தால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்திற்கு 44 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அன்றிலிருந்து, ஆண்டுதோறும் ஜூன் 7 ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து இந்த நாளை ஒருங்கிணைத்து, உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உலக அளவில் ஊக்குவிக்கின்றன.

முக்கியத்துவம்:

  • நோய் தடுப்பு: பாதுகாப்பற்ற உணவு மூலம் சுமார் 200 வகையான நோய்கள் பரவி, ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். உணவுப் பாதுகாப்பு, இந்த நோய்களைத் தடுக்கவும், அடையாளம் காணவும், நிர்வகிக்கவும் உதவுகிறது.
  • ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்: பாதுகாப்பற்ற உணவு நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் மோசமான சுழற்சியை உருவாக்குகிறது. குறிப்பாக குழந்தைகள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளைப் பாதிக்கிறது. பாதுகாப்பான உணவு, அனைவருக்கும் ஊட்டச்சத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது.
  • பொருளாதார வளர்ச்சி: பாதுகாப்பான உணவு வழங்கல், தேசிய பொருளாதாரங்கள், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஆதரிப்பதன் மூலம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • பொறுப்புணர்வு: பண்ணையில் இருந்து நுகர்வோர் தட்டு வரை, உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் மற்றும் நுகர்வு என ஒவ்வொரு கட்டத்திலும் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இது விவசாயிகள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.

2025 ஆம் ஆண்டின் கருப்பொருள்: “உணவு பாதுகாப்பு: அறிவியல் செயலாற்றுகிறது”

2025 ஆம் ஆண்டிற்கான உலக உணவு பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள் “உணவு பாதுகாப்பு: அறிவியல் செயலாற்றுகிறது” (Food Safety: Science in Action) என்பதாகும். உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் அறிவியல் ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது. நோய்களைக் குறைப்பதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் அறிவியல் அறிவு எவ்வளவு முக்கியம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

கொண்டாட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள்:

உலக உணவு பாதுகாப்பு நாளில், உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பயிற்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. உணவு பாதுகாப்பு விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் பாதுகாப்பான உணவு பழக்கவழக்கங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பில் விஞ்ஞானத்தின் பங்களிப்பை உயர்த்தி காட்டும் வகையில், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உணவுத் தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவை தங்கள் கண்டுபிடிப்புகளையும், சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்கின்றன.

முடிவுரை:

உலகில் பத்துப் பேரில் இருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்ப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 4,70,000 பேர் இதனால் இறக்கின்றனர். கிருமிகள், ரசாயனங்கள் கலந்த மோசமான உணவை உண்பதால் 260க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும். இவை புற்றுநோயைக்கூட உண்டாக்கும். கிட்டத்தட்ட 55% குழந்தைகள் மோசமான உணவால் நோய்வாய்ப்படுகிறார்கள். அவர்களில் 1,95,000 பேர் ஒவ்வோர் ஆண்டும் இறக்கின்றனர். ஆக,உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு தனிப்பட்ட அல்லது குறிப்பிட்ட நாட்டின் பிரச்சினை அல்ல. இது உலகளாவிய கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே அடையக்கூடிய ஒரு பொதுவான இலக்கு. “உணவு பாதுகாப்பு: அறிவியல் செயலாற்றுகிறது” என்ற கருப்பொருளின்படி, அறிவியலைப் பயன்படுத்தி பாதுகாப்பான உணவு முறைகளை உருவாக்குவதும், நடைமுறைப்படுத்துவதும் ஒவ்வொரு தனிநபரின் மற்றும் சமூகத்தின் கடமையாகும். அனைவருக்கும் பாதுகாப்பான, சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், ஆரோக்கியமான தலைமுறையையும், நிலையான எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!