தந்தையர் தினம் – ஜூன் மூன்றாம் ஞாயிறு!

தந்தையர் தினம் – ஜூன் மூன்றாம் ஞாயிறு!

லகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையிலும் மேலும் வேறு நாடுகளில் பிற நாட்களிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற் பகுதியில் பெரும்பான்மையினரால் கொண்டாடப் படும் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையரைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவு விழாவாகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.

முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா ஜெர்வீஸ் தன்னுடைய தாயை கவுரவிக்கும் வகையில் 1909–ம் ஆண்டு முதலாவதாக அன்னையர் தினத்தை கொண்டாடி உலகுக்கும் அறிமுகப்படுத்தினார்.அதனை தொடர்ந்து தன்னுடைய வாழ்கையில் ஏற்படும் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமான தந்தையை கவுரவிக்கும் வகையில் 1910–ம் ஆண்டு அமெரிக்கா வாஷிங்டன் நகரில் 1910–ம் ஆண்டு ஜூன் 19–ந் தேதி சனேரா ஸ்மார்ட் டாட் என்பவர் தன்னுடைய தந்தையை கவுரவிக்கும் வகையில் தந்தையர் தினத்தை கொண்டாடினார். அதை விரும்பி ஏற்று பலரும் கொண்டாடும் நிகழ்வானது இது.

இந்த அப்பா – அதிகம் புரிந்து கொள்ளப்படாத உறவு.. பெரும்பாலும் கண்டிப்பே அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். ஆம்… உறவுகளில் மிகவும் சிக்கலான சற்றே கடினமான உறவாக பார்க்கப்படுவது அப்பா-மகன் உறவு.

அம்மா-மகன் உறவில் இருக்கும் ஓர் அன்னியோன்யம் அப்பா மகன் உறவில் இருப்பதில்லை. தந்தை சற்று கண்டிப்பானவராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்வதால் ஆண் பிள்ளைகள் மத்தியில் விரிசல் ஆரம்பித்து அந்த விரிசல் தொடர்ந்து நீடிப்பதில் தான் சிக்கல் இருக்கிறது. சில வீடுகளில் பேச்சுவார்த்தை கூட இருக்காது. அதுவும் டீன் ஏஜில் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு (அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் விதிவிலக்குகள் தவிர்த்து) நிச்சியம் ஒரு வில்லன் ரேஞ்சுக்குதான் இருந்திருப்பார்.

அப்பாவை திட்டியிராமல் கடந்து விட்ட பதின் பருவமென்பது நிச்சியம் யாருக்குமே இருக்காது.

°இவர் எப்போது தான் நம்மை புரிந்து கொள்வார் ?

°அப்படி என்ன கேட்டு விட்டோம், இந்த சின்ன ஆசையை கூட நிறைவேற்ற முடியாது என்றால் ஏன் தான் பிள்ளை பெற்று கொள்ள வேண்டும்?

°இனி இவர் முகத்திலே விழிக்கவே கூடாது.

°அப்பாவிடம் போட்ட சண்டைகளுக்காக அம்மாவை துன்பப்படுத்தி சாப்பிடாமல் படுக்க போன இரவுகள் என பதின் பருவத்தில் அப்பாவின் மீது கோபமில்லாமல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கவே முடியாது.

பிள்ளைகளின் பார்வையில் தங்களின் ஒவ்வொரு வயதிலும் அப்பா தங்களுக்கு எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைச் சொல்லும் குட்டிக்கதை ஒன்று உண்டு!

5 வயது – ‘என் சூப்பர் ஹீரோ!’
10 வயது – ‘வீட்டில கொஞ்சம் கத்துவார்… மத்தபடி நல்லவர்தான்!’
15 வயது – ‘எப்போ பார்த்தாலும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கார்… சொல்லிவைம்மா அவர்கிட்ட!’
20 வயது – ‘எப்படிம்மா இப்படி ஒரு ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!’
30 வயது – ‘நான் என்ன பண்ணினாலும் குறைசொல்லிக்கிட்டே இருக்கார். இதனாலேயே அவர்கிட்ட நான் பேசுறதைக் குறைச்சுட்டேன்!’
40 வயது – ‘அடிக்கடி கத்துவார்… ஆனா, அடிப்படையில ரொம்ப நல்லவர்!’
50 வயதில் – ‘அந்தக் காலத்தில எங்க குடும்பம் இருந்த நிலைமையில, தன் உழைப்பால எங்களையெல்லாம் கரை சேர்த்திருக்கார். அந்த மனுஷன்தான் எங்களுக்கு எப்பவும் சூப்பர் ஹீரோ!’

ஆக அப்பாவை பற்றி சரியாக ஒரு மனநிலைக்கு வர 40 முதல் 45 வருடகால வாழ்க்கையும் அனுபவமும் தேவைப்படுகின்றன.

திடீரென அப்பா புராணம் எழுத என்ன காரணம் என்று எனக்கே நான் கேட்டுக்கொண்டபோது வயதாகிவிட்டதோ என்கிற எண்ணம் தோன்றுகிறது……

தந்தையர் தினம் 2021

Related Posts

error: Content is protected !!