உலக சதுரங்க தினமான இன்று (20 ஜூலை ) செஸ் எனப்படும் சதுரங்கம் பற்றி கொஞ்சம் சுவாரஸ்யமான தகவல்கள்!

உலக சதுரங்க தினமான இன்று (20 ஜூலை ) செஸ் எனப்படும் சதுரங்கம் பற்றி கொஞ்சம் சுவாரஸ்யமான தகவல்கள்!

குப்தர்கள் ஆட்சி காலமான ஆறாம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் முதன் முதலில் செஸ் தோன்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன. சத்ரங் என்ற பெயரில் தோன்றிய இந்த விளையாட்டு மெதுவாக evolve ஆகி 9 ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நுழைந்தது. ரஷ்யர்கள் இந்த விளையாட்டை பெரிதும் விரும்பி, மிகத் தீவிரமான முறையில் விளையாடத் துவங்கினர். 15 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் (Europe) காலூன்றியது. அங்கு பல்வேறு மாறுதல்களுக்கு பிறகு, செஸ் உலகமெங்கும் பரவியது.

செஸ் சீனாவில் தோன்றியது ஒரு தரப்பினர் சொன்னாலும், அது இந்தியாவில் தான் தோன்றியது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. 15 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த விளையாட்டில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நிறைய மாற்றங்கள் செய்யப் பட்டன. முதன் முதலில் செஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான் புத்தகம் எழுதிய பெருமை லூயிஸ் ராமிரேஸ் (Luis Ramirez) என்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரையே சாரும். அவருடைய Repetition of Love and the Art of Playing Chess என்ற புத்தகம் இன்றளவிலும் போற்றப்படுகிறது.உலகளவிலான செஸ் போட்டி 1851 ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. அதிசயமாக இதில் ஜெர்மனியைச் சேர்ந்த Adolf Anderssen என்பவர் வெற்றி பெற்றார். பிறகு, அமெரிக்காவை சேர்ந்த Paul Morphy மிகக் குறுகிய காலத்திலேயே (1857-1863) உலக அளவில் பெரும் புகழ் பெற்றார். அதற்க்கு முன் இருந்த எல்லா பிரபல செஸ் விற்பன்னர்களையும் இவர் தோற்கடித்தார். இரண்டாம் உலகப் போருக்கு பின் நிறைய உலகப் போட்டிகள் நடத்தப்பட்டன. World Chess Federation (FIDE) 20 ஜூலை 1924 ம் தொடங்கப்பட்டதையே இப்போது நாம் உலக செஸ் தினமாகக் கொண்டாடுகிறோம்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் சர்வதேச  அளவில் விளையாடப்படும் விளையாட்டுக்கள் பலவற்றிலும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்படும் விளையாட்டுக்களே அநேகம். ஆனால் முழு அளவிலும் மூளையின் பலத்தை நம்பியே விளையாடப்படும் விளையாட்டாக இருப்பது, ‘செஸ்’ என்று அழைக்கப்படும் சதுரங்கப் போட்டி. சதுரங்கம் என்ற சொல் இந்தியாவில் செஸ் விளையாட்டை குறிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.செஸ் விளையாட்டை குறிக்கும் சரியான தமிழ்ச்சொல் ”செங்களம்” ஆகும். செங்களம் என்பது இன்றைய நவீன முறையிலான விதிகள் வகுக்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட செஸ் விளையாட்டிற்கு, புதிதாக சூட்டப்பட்ட தமிழ் சொல்லாகும். சதுரங்கம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு நாற்படை என்ற வடமொழிகளில் பொருள் கிடைக்கிறது. அதாவது தேர்,குதிரை,யானை,தானை என்ற நான்கு படைகள் என்பதே இதன் பொருள். பொதுவாக செஸ் விளையாட்டிற்கு மிக பிற்காலத்தில் சூட்டப்பட்ட சமஸ்கிருத சொல் ‘சதுரங்கம்’ ஆகும். அதாவது நாற்படை ஆட்டம் ஆகும்.

செஸ் விளையாட்டிற்கு முதன்முதலாக சமஸ்கிருத இலக்கியத்திலிருந்து சதுரங்கம் என்ற சொல்லை எடுத்து பயன்படுத்தியவர் சர்.வில்லியம் ஜோன்ஸ் ஆவார். இவர் சமஸ்கிருத மொழியியல் பண்டிதரும் ஆய்வாளருமான ஒரு ஆங்கிலேயர் ஆவார். 17ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் உயர் பதவி வகித்த ஜோன்ஸ் முதன் முதலாக ‘பவிஷ்ய புராணத்தில்'(கிபி12ம் நூற்றாண்டு) குறிப்பிடப்பட்ட ஒரு விளையாட்டுடன் ஒப்பிட்டு செஸ் விளையாட்டு இந்தியாவில் தோன்றி உலகெங்கும் பரவியதாக குறிப்பிட்டார்(“On the Indian Game of Chess” – 1790). ஜோன்ஸ் சமஸ்கிருத மொழி ஆய்வாளர் என்ற வகையில் இக்கருத்தை தெரிவித்திருப்பினும் செஸ் விளையாட்டின் பழமையான விளையாட்டுவகைகள் இந்தியாவில் இருந்துள்ளது என்ற உண்மையை முதன்முதலாக உலகிற்கு அறிவித்தவர் ஜோன்ஸே ஆவார்.

ஜோன்ஸ் குறிப்பிட்ட சதுரங்க விளையாட்டு என்பது பவிஸ்ய புராணத்தில் குறிப்பிட்டுள்ள நான்குபேர் விளையாடக்கூடிய ஓர் பலகை விளையாட்டாகும்.ஜோன்ஸ் தனது நூலில் இவ்விளையாட்டு நவீன செஸ் விளையாட்டின் பழைய வடிவம் என்று கூறியதுடன் சதுரங்க விளையாட்டின் தோற்றுவாய் பற்றி ”சதுரங்கமானது இராவணனும் மண்டோதரியும் விளையாடிய விளையாட்டு” என்று கூறுகிறார்.ஜோன்ஸின் இந்த கூற்றானது சதுரங்க விளையாட்டானது இந்தியாவின் பரவலாக விளையாடினாலும் தெற்கிலிருந்துதான் பரவலடைந்துள்ளதாக உணரப்படுகிறது.ஜோன்ஸின் பார்வையில் இது தெற்காசியாவின் பூர்வகுடிகளின் விளையாட்டாக இருந்து பின்னர் வடக்கே பரவியதாக வைத்துக்கொள்ளலாம்.

வங்காளக் கவிஞரான பிரம்மன் இராதாகந்த்(Brahman Radhakant) ”இலங்கை மீது போர்தொடுத்த இராமனை எதிர்க்க இராவணன் அழுத்தத்துடன் இருந்ததால் இராவணனின் கவலைபோக்க மண்டோதரி சதுரங்க விளையாட்டை கண்டுபிடித்தார்” என்று கூறுகிறார். வடநூல்களில் சதுரங்க விளையாட்டு பற்றிய குறிப்பானது ஏறக்குறைய கிபி.6ம் நூற்றாண்டிற்கு பின்னரே கிடைத்தாலும், சதுரங்க விளையாட்டு அதற்கு முந்தைய காலகட்டத்தில் இந்திய பழங்குடியினரால் விளையாடப்பட்டதும், குறிப்பாக தெற்கே இது புகழ்பெற்றிருந்ததும் அறியமுடிகிறது.

சீமாறன் சீவல்லபா என்ற பாண்டிய மன்னன் இலங்கையை எதிர்த்து போரிடும்போது வல்லாட்டம் என்ற போர்விளையாட்டை பயன்படுத்தி போர்நகர்வினை கனித்ததாக தமிழர்கள் நம்புகின்றனர்.இலங்கை உருகுணையில் வல்யானை எனப்படும் பலகை விளையாட்டின் யானைக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சதுரங்கத்தின் வேர்கள் பெரும்பாலும் தெற்கே பரவியுள்ளன.வல்லாட்டமானது ஆரம்பகாலங்களில் யானைப்போர், ஆனைக்குப்பு என்ற ஒரு யானை விளையாட்டாக மலைவாழ் பழங்குடியினரிடையே விளையாடப்பட்டது.ஏறக்குறைய இந்த யானை விளையாட்டு கிமு3000 வாக்கில் தமிழகம் இலங்கை பகுதிகளில் விளையாடப்பட்டு படிப்படியாக சீனா போன்ற தெற்காசிய நாடுகளில் பரவலடைந்தது. சீனாவின் செஸ் விளையாட்டு யானை விளையாட்டு என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts