உலக மூளை தினம் 2026:எண் சாண் உடம்பின் தலைசிறந்த ‘பவர் ஹவுஸ்’!

உலக மூளை தினம் 2026:எண் சாண் உடம்பின் தலைசிறந்த ‘பவர் ஹவுஸ்’!

நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆனால், அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி, நம்மை இயக்கும் ‘தலைமையகம்’ எதுவென்றால் அது நமது மூளைதான். “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்பார்கள். அந்தச் சிரசுக்கு (தலைக்கு)ள்ளே இருக்கும் மூளையோ, உலக விஞ்ஞானிகளையே இன்னும் தலைபிச்சிக் கொள்ள வைக்கும் ஒரு பேரதிசயம்!

கணினியைக் காட்டிலும் அதிவேகமாகச் செயல்படும் இந்த அற்புத உறுப்பைப் பற்றி விஞ்ஞானிகள் இரவும் பகலும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், அதன் முழுமையான ரகசியங்களை இன்னும் யாராலும் முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. பெண்கள் மனதைப் புரிந்து கொள்வது எவ்வளவு புதிரோ, அதேபோல மனித மூளையும் இதுவரை அவிழ்க்கப்படாத ஒரு நவீனப் புதிர்தான்!

ஜூலை 22 ஆம் தேதி உலகெங்கும் அனுசரிக்கப்படும் உலக மூளை தினத்தை (World Brain Day 2026) முன்னிட்டு, மனித மூளையின் விசித்திரமான ஆற்றல்கள் மற்றும் அதை நாம் எவ்வாறு பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதைப் பற்றிய விரிவான சிறப்புக் கட்டுரை இதோ:

1. மூளை எனும் பேரதிசயம்: வியக்க வைக்கும் தகவல்கள்

மூளை பார்க்கச் சிறிய உறுப்பாகத் தோன்றினாலும், அதன் ஆற்றலும் அமைப்பும் கற்பனைக்கெட்டாத அளவுக்குப் பிரம்மாண்டமானது.

86 பில்லியன் நரம்புச் செல்கள்

நமது மூளையில் சுமார் 86 பில்லியன் நரம்புச் செல்கள் (Neurons) உள்ளன. இவை ஒன்றுக்கொன்று இணைந்து உருவாக்கும் நரம்பு வலைப்பின்னல்தான் நமது எண்ணங்கள், நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளுக்குக் காரணம்.

மின்விளக்கை எரியவைக்கும் மின்ஆற்றல்

நமது மூளையில் உருவாகும் நரம்புத் தூண்டல்கள் மின்சாரம் மூலமே கடத்தப்படுகின்றன. மூளையில் சுமார் 0.025 கிலோவாட் (25 Watts) மின்ஆற்றலை கிரகித்து இயங்கும் திறன் உள்ளது. இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு சிறிய எல்.இ.டி (LED) மின்விளக்கையே ஒளிரச் செய்ய முடியும்!

4 டெராபைட் நினைவாற்றல்

மனித மூளை தனது 18 வயது வரை தொடர்ந்து அளவிலும் திறனிலும் வளர்ச்சி அடைகிறது. இதன் நினைவாற்றல் சேமிப்புத் திறன் கணினியின் ஹார்ட் டிஸ்கில் உள்ள 4 டெராபைட்டுகளுக்கு (4 TB) நிகரானது. அதாவது, லட்சக்கணக்கான புத்தகங்களையும், ஆயிரக்கணக்கான மணிநேர வீடியோக்களையும் இதில் சேமிக்க முடியும்.

கொழுப்பால் ஆன உறுப்பு

மூளையின் சராசரி எடை சுமார் 3 பவுண்டுகள் (சுமார் 1.36 கிலோகிராம்). வியப்பூட்டும் உண்மை என்னவென்றால், இந்த எடையில் 60 சதவீதம் தூய கொழுப்புச் சத்துதான் உள்ளது. எனவே, உடலுக்கு நல்ல கொழுப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மூளையின் செயல்பாட்டிற்கும் அது அவசியமாகிறது.

2. மூளையின் தாங்குதிறனும் சகிப்புத்தன்மையும்

மனித உடல் பலவீனமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், மூளையின் தாங்குதிறன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அடிப்படைத் தேவைகள் இல்லாதபோதும் மூளை தன்னைக் காத்துக் கொள்ளப் போராடும் காலவரம்புகள்:

  • பிராணவாயு (Oxygen) இல்லாமல்: மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் செல்கள் அழியத் தொடங்கும்.

  • தண்ணீர் (Water) இல்லாமல்: குடிநீர் கிடைக்காத சூழலில் மூளையால் 2 நாட்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும்.

  • தூக்கம் (Sleep) இல்லாமல்: தொடர்ந்து 11 நாட்கள் வரை தூங்காமல் இருந்தால் மூளையின் இயக்கம் முற்றிலும் முடங்கிவிடும்.

  • உணவு (Food) இல்லாமல்: உணவு எதுவும் கிடைக்காத நிலையில், உடலின் பிற பகுதிகளில் உள்ள ஆற்றலைப் பயன்படுத்தி மூளை 20 நாட்கள் வரை இயங்கும்.

வலி உணராத விசித்திரம்!

உடலில் எங்கு அடிபட்டாலும் அந்த வலியை நமக்கு உணர்த்துவது மூளைதான். ஆனால், மூளைக்கு என்று சுயமான வலி உணர்விகள் (Pain receptors) கிடையாது! அதனால்தான், மூளை அறுவை சிகிச்சைகளின் போது (Awake Craniotomy) நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்காமல், அவர் விழித்திருக்கும் போதே மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. வலி நிவாரணிகள் உட்கொண்டால் மனித மூளையால் எந்த வலியையும் உணர இயலாது.

3. உலக மூளை தினம் 2026: “Brain Health: Access for All”

ஒவ்வொரு ஆண்டும் World Federation of Neurology (WFN) உலக மூளை தினத்திற்கான சிறப்புத் தீமை அறிவிக்கிறது. அந்த வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ தீம்:

“Brain Health: Access for All” (மூளை ஆரோக்கியம்: அனைவருக்கும் அணுகல்)

இந்த தீமின் முக்கியத்துவம் என்ன?

உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் நரம்பியல் நோய்களாலும், மூளை சார்ந்த பாதிப்புகளாலும் (பக்கவாதம், வலிப்பு நோய், டிமென்ஷியா போன்றவை) அவதிப்படுகிறார்கள். ஆனால், இதற்கான நவீன மருத்துவ வசதிகளும் பரிசோதனைகளும் ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும் கிராமப்புறங்களுக்கும் சரிவரக் கிடைப்பதில்லை.

“மூளை ஆரோக்கியத்திற்கான மருத்துவ வசதிகளும், விழிப்புணர்வும் சாதி, மத, பொருளாதாரப் பாகுபாடின்றி உலக மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தவே இந்தத் தீம் முன்வைக்கப்பட்டுள்ளது.

4. மூளையை எவ்வாறு பாதுகாப்பது?

மனிதர்களை ஆட்டிப்படைப்பது இரண்டு விஷயங்கள்: ஒன்று அவர்களின் அன்பு மனைவிகள், மற்றொன்று அவர்களின் சொந்த மூளை! நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தீர்மானிக்கும் இந்த மூளையை நாம் ஆரோக்கியமாகப் பராமரிக்க சில எளிய வழிகள்:

  1. சத்தான உணவு: மூளையில் 60% கொழுப்பு உள்ளதால், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த பாதாம், வால்நட்ஸ், தானியங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்க்க வேண்டும்.

  2. ஆழ்ந்த தூக்கம்: இரவில் 7 முதல் 8 மணி நேரச் சீரான தூக்கம் மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நினைவாற்றலை புதுப்பிக்கிறது.

  3. மூளைக்கான பயிற்சிகள்: புதிய மொழிகளைக் கற்றுக் கொள்வது, புதிர்களை விடுவிப்பது, வாசிப்பு மற்றும் இசை கேட்பது ஆகியவை நரம்புச் செல்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

  4. உடற்பயிற்சி & தியானம்: தினமும் உடற்பயிற்சி செய்வதால் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டமும் ஆக்ஸிஜனும் அதிகரிக்கும். தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைந்து மூளை அமைதி பெறும்.

மொத்தத்தில் நமது உடலின் தலைசிறந்த கட்டுப்பாட்டு மையமான மூளையைப் பேணிக் காப்பது நமது தலையாய கடமையாகும். “மூளை ஆரோக்கியம் – அனைவருக்கும் சாத்தியம்” என்ற 2026-ன் இலக்கை நோக்கிச் செயல்படுவோம். மூளையைப் பாதுகாப்போம், தெளிவான சிந்தனையோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வோம்!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts