உலகக் கலை நாள்: படைப்பாற்றலின் கொண்டாட்டம்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 அன்று உலகக் கலை நாள் (World Art Day) கொண்டாடப்படுகிறது. இந்நாள், கலைஞர்களின் பங்களிப்பைப் போற்றவும், கலையின் மூலம் மனித அனுபவங்களைப் புரிந்துகொள்ளவும், படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.புகழ்பெற்ற இத்தாலியக் கலைஞர் லியனார்டோ டா வின்சியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. லியனார்டோ டா வின்சி ஒரு சிறந்த ஓவியர் மட்டுமல்ல, ஒரு சிற்பி, கட்டிடக் கலைஞர், இசைக்கலைஞர், விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், உடற்கூறியல் நிபுணர், நிலவியலாளர், கார்ட்டோகிராஃபர், தாவரவியலாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர். அவர் கலைக்கும் அறிவியலுக்கும் இடையே ஒரு பாலமாக திகழ்ந்தார்.இது, 2012ஆம் ஆண்டு முதல் சர்வதேச கலை அமைப்புகளால் (International Association of Art) அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
கலையின் முக்கியத்துவம்
கலை, மனித சமூகத்தின் ஆன்மாவை பிரதிபலிக்கும் கண்ணாடி. இது மொழி, கலாசாரம், மற்றும் எல்லைகளைக் கடந்து உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. ஓவியம், சிற்பம், இசை, நடனம், இலக்கியம், திரைப்படம் என பல்வேறு வடிவங்களில் கலை, மனிதர்களின் சிந்தனையையும் உணர்ச்சிகளையும் இணைக்கிறது. இது சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் உள்ளது.மனிதனின் அடுத்தகட்ட சமூக வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக இருப்பது கலைகள். நிகழ்கால சமூகத்தின் அக, புறப் பிரச்சனைகளையும், சமூகத்தின் மீதான ஆளும் வர்க்க அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து மனித சமூகம் ஒரு தீர்வை நோக்கி நகர வடிகாலாகவும், கலகக் குரலாகவும் இருந்து செயல்படுபவைகள் கலைகள். அது எந்த வகையிலான கலைகளாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த இயங்கியல் இதுவாகத்தான் இருக்கும். மனித சமூகம் தோன்றிய பல ஆயிரம் ஆண்டுகளாக கலைகள் மனித சமூகத்தை முன்னகர்த்திச் செல்லும் கருவிகளில் முக்கியமான கருவியாக இருந்து வருகிறது.
மனித சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதுடன் சேர்த்து, தன்னையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொள்ள கூடியவைகள் கலைகள். கலைகள் ஒரே கட்டத்தில் தேங்கிவிடக் கூடியவைகள் அல்ல. சமூகத்தின் வளர்ச்சியை விரும்பாத, வளர்ச்சி பெறாத ஒரு சமூகத்தை அடிமையாகக் கொண்டு அதிகார, பொருளாதார குளிர்காய நினைக்கும் மனித முயற்சிகள் வேண்டுமானால் செயற்கையாக கலைகளை அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் ஒரு தேக்க நிலையிலேயே முடக்க முடியுமே ஒழிய, கலைகள் தன்னியல்பாக ஓரிடத்தில் தேங்கக் கூடியவைகள் அல்ல. மனித சமூகத்தின் கடந்த கால, நிகழ் கால செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள பண்பாட்டு மானுடவியலும் அடிப்படையாக இருக்கிறது. பண்பாடுகளின் அடிப்படைகளில் ஒன்றாக இருப்பது கலைகள். அதன்படி மனித சமூகத்தின் கடந்தகால நிகழ்காலப் போக்குகளை நாம் புரிந்து கொள்ள கலைகளும் நமக்குப் பெரும் உதவியாக இருக்கின்றன.
கலையின் கடந்த கால பரிணாம வளர்ச்சிகளை நாம் திரும்பிப் பார்க்கும்போது நமக்கு அதன் ஊடே தெரியவருவது மனித சமூக மற்றும் தனி மனித சிந்தனையின் பரிணாம வளர்ச்சிகளும் கூட. வேட்டை நாகரீக மனிதனின் கலைகள் விவசாயம் கண்டுப்பிடிக்கப்பட்ட பிறகு மாற்றத்தை நோக்கி நகர்கிறது. அதன் வழி தனி மனித சிந்தனைகள் விவசாய நாகரீகத்தின் அக, புற பிரச்சனைகளில் இருந்து தப்பி, ஒரு தீர்வை நோக்கி நகர துணை செய்கிறது. விவசாய நாகரீகம் உலக பேரரசுகளின் நாகரீகமாக வளரும்போது கலைகளும் தங்களை அதற்கு ஏற்ப அடுத்த வளர்ச்சிக்கு நகர்த்திக்கொண்டு தனி மனித சிந்தனைகளையும் புதிய தீர்வுகளை நோக்கி நகர்த்துகிறது. இப்படியே இன்றைய நவீன காலம் வரை கலைகளின் வளர்ச்சியானது எங்கும் தேங்காத ஒரு நீண்ட பயணத்தை நடத்தி வருகிறது.
கலையின் தொடக்கம்:
ஆதிகால மனித சமூகத்தின் கலை வெளிப்பாடுகளில் ஒன்றாக இன்றைக்கு நமக்கு கிடைப்பவைகள் அவன் குகைகளில் தீட்டிய சுவர் ஓவியங்களே. இரண்டு இலட்சம் வருடத்திய தனி மனித சிந்தனை வளர்ச்சிப் போக்கை நமக்கு கண்ணாடி போலக் காட்டுபவைகள் இந்த ஓவியங்கள். கற்கால மனிதன், தன் உணர்வுக் கிளர்ச்சியை, சிந்தனை முதிர்ச்சியை வெளிப்படுத்த பயன்படுத்திய இசை மற்றும் நடனக் கலைகளை இன்றைய நிலையில் அப்படியே மீட்டு உருவாக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. காரணம் ஓவியங்களைப் போன்று அந்த கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்படியே நிலைத்திருக்கும் ஊடகங்களில் நிகழ்த்தப்பட்ட (பாறைகள்) கலைகள் அன்று. அவைகள் குறித்த எத்தகைய எழுத்து வடிவ அல்லது குறியீட்டு வடிவக் குறிப்புகளையும் கற்கால மனிதர்கள் நமக்கு விட்டுச் செல்லவில்லை. ஆக, கற்கால மனிதனின் கலைகள் என்று எடுத்துக்கொண்டால் (நம்மால் இன்றைக்கு காணக் கூடிய கற்கால மனிதர்களின் கலைகள்) அவை ஓவியமும் சிற்ப கலையும் மாத்திரமே.
கலாசார பரிமாற்றம்: கலை, பல்வேறு கலாசாரங்களை ஒருங்கிணைத்து, புரிதலையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்கிறது.
மன ஆரோக்கியம்: கலைப்படைப்புகள் மன அழுத்தத்தைக் குறைத்து, உளவியல் நலனை மேம்படுத்த உதவுகின்றன.
கல்வி மற்றும் சிந்தனை: கலை, புதிய கோணங்களில் சிந்திக்கவும், படைப்பாற்றலை வளர்க்கவும் உதவுகிறது.
உலகக் கலை நாளின் நோக்கம்
இந்நாள், கலைஞர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதோடு, கலையை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகெங்கும் கலை கண்காட்சிகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், மற்றும் கலாசார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இவை, இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதோடு, சமூகத்தில் கலையின் மதிப்பை உயர்த்துகின்றன.
தமிழகத்தில் கலை
தமிழகத்தின் கலைப் பாரம்பரியம் உலகப் புகழ் பெற்றது. தஞ்சை ஓவியங்கள், பரதநாட்டியம், கரகாட்டம், கோயில் சிற்பங்கள், மற்றும் நவீன கலை வடிவங்கள் என தமிழகம் கலைத்துறையில் முன்னோடியாக விளங்குகிறது. மேலும் தமிழ்நாட்டில் இருந்து இந்தியா முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதற்கும் முன்னோடியாக திகழ்கிறது பல கலைகள். குறிப்பாக சிற்பக்கலை உலோக சிற்பக்கலை மர வேலைப்பாடுகளோடு கூடிய சிற்பக்கலை கற்கோவிலில் இருந்து பொற்கோவில் வரையில் உருவாக்கிய பாரம்பரிய கலை படைப்பாளர்கள் இவர்கள் மட்டுமே. இவர்கள்பொன் நகைகளை உருவாக்கி இந்திய கலை படைப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர்கள். ஐந்தொழில் கலைகளில் ஆர்வம் உடைய படைப்பாளிகள் விஸ்வகர்மாக்கள் என்று வேதனையோடு அழைக்கப்படுபவர்கள் இவர்கள்தான். இந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவிலுக்கு கூட இவர்களின் உதவியும் பங்களிப்புமஅதிகம் தேவைப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அங்கிருக்கும் சந்தனத் தாலானவாயிற் படிகள் கதவுகள் கருவறையில் இடம் பெற்றுள்ள சிலைகள் அதற்கான நகைகள் அத்தனையும் உருவாக்கித் தந்தவர்கள் கலை படைப்பாளிகள் என்கிற விஸ்வகர்மாக்கள் ஆவார்கள். கூடவே கூத்து, பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், கும்மி, மற்போர், வில் வித்தை, ஏறுதழுவுதல் போன்ற தமிழகத்தின் தொன்றுதொட்ட (பரம்பரைக்) கலைகள் இந்தியா முழுதும் பெருமை பெற்றுள்ளன. உலகக் கலை நாளில், தமிழக கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதோடு, புதிய தலைமுறையினரை கலைப் பயணத்தில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்.
முடிவாக உலகக் கலை நாள், கலையின் மாண்பை உணர்த்தி, மனித இணைப்புகளை வலுப்படுத்தும் ஒரு தருணம். இது, நம்மைச் சுற்றியுள்ள அழகையும், படைப்பாற்றலையும் மதிக்கக் கற்றுத் தருகிறது. இந்த நாளில், ஒவ்வொருவரும் ஒரு கலைப்படைப்பை ரசிக்கவோ, உருவாக்கவோ முயல்வோம். கலை, உலகை அழகாக்கும் ஒளி!
பின்குறிப்பு: உலகக் கலை நாளை முன்னிட்டு, உங்கள் ஊரில் உள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, கலைஞர்களை ஆதரிக்க ஒரு சிறந்த வழியாகும்.
நிலவளம் ரெங்கராஜன்