மக்களவையில் நிறைவேறிய பெண்ணரசியல்!

மக்களவையில் நிறைவேறிய பெண்ணரசியல்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் ஒரே ஒரு விதிவிலக்கு தவிர ஒருமித்த ஆதரவுடன் நிறைவேறி இருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் இருந்து இருந்து பேசப்பட்டு வந்த, 2010ல் ஒருமுறை தோற்கடிக்கப்பட்ட, இந்த மசோதா இப்போது நிறைவேறி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இது 2024 தேர்தலுக்கு அமுலுக்கு வராது. காரணம் இந்த மசோதாவின் விதிமுறைகளின்படி இரண்டு தடைகள் இருக்கின்றன: மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறு சீரமைப்புகள் நிகழ்ந்த பின்னர்தான் இது அமுலுக்கு வரும். மறு சீரமைப்பு 2026ல் செய்யப்பட இருக்கிறது. சென்சஸ் 2021ல் நிகழ வேண்டியது கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்டது இன்னமும் துவங்கவில்லை. அதாவது குறைந்தது இன்னும் மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு இது அமுலுக்கு வராது.

இந்த சட்டத்தை இந்த இரண்டு விஷயங்களுடன் தொடர்புபடுத்துவதன் லாஜிக் புரியவில்லை. இட ஒதுக்கீடு வந்த மாதிரியும் இருக்கணும், வராத மாதிரியும் இருக்கணும் என்று யோசித்து இருப்பதாகத்தான் தெரிகிறது. ‘மருதநாயகம் படம் ரிலீஸ் ஆனதும் இந்த சட்டம் அமுலுக்கு வரும்,’ என்று கூட சொல்லி இருக்கலாம். எது எப்படி இருப்பினும் இது மக்களவையில் நிறைவேறி இருப்பது ஒரு முக்கியமான மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும். இது சோனியா அவர்களின் கனவு, இப்போது நிஜத்துக்கு அருகில் வந்திருப்பதற்கு நரேந்திர மோடி அரசுதான் காரணம் என்பதை ஆச்சரிய முரணாகவே பார்க்கிறேன். காரணம், பாஜக அரசு கண்டிப்பாக இதனை சீண்டவே சீண்டாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்திய ஜனநாயகம் நம்மைத் தொடர்ந்து இன்ப ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது. அதன் அடுத்த மகிழ்வுதான் இந்த மசோதா நிறைவேற்றம். சொல்லப்பட்ட தாமதமும் கூட பெரிய விஷயமில்லைதான். கால ஓட்டத்தில் ‘இதோ இப்போது’ என்றபடி 2026 வந்து விடும். இட ஒதுக்கீடும் அமுலுக்கு வந்து விடும்.

இதில் ஆண் அரசியல்வாதிகள் தங்கள் மனைவி, மகள்களை பொம்மை வேட்பாளர்களாக அறிவிப்பார்கள். அவர்கள் பின்னிருந்து அதிகாரம் செலுத்துவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். இவையெல்லாம் ஆரம்ப கட்டத்தில் நடக்கும். ஆனால் நிலைமை மாறும். அப்படி ஒரு எதிர்பார்ப்பில்தான் ஊமைப் பொம்மை (‘கூங்கி குடியா’) என்று கிண்டல் செய்யப்பட்ட இந்திராவை காங்கிரசின் ஆண் தலைவர்கள் நியமித்தார்கள். பின்னர் இந்திரா அவர்கள் எல்லாரையும் கூங்கியாக்கினதுதான் வரலாறு. போலவே, இதர பெண்களும் நாள்பட நாள்பட அதிகாரத்தை தங்கள் கைக்கொள்வார்கள்.

இன்றே கூட உள்ளாட்சிகளில் சில மாநிலங்களில் 50%க்கும் மேல் பெண்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்கள். இவர்களில் எத்தனை பேர் ஆண் அரசியல்வாதிகளின் பொம்மையாக இருப்பார்கள்? மிஞ்சி மிஞ்சிப் போனால் 15-20% இருந்தால் அதிகம். மீதி அனைவரும் தங்கள் அதிகாரத்தை நேரடியாக பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதேதான் இங்கும் நிகழும். முதல் தலைமுறைக்கு அடுத்த பெண் அரசியல்வாதிகள் தங்கள் பிரதிநிதித்துவத்தை நேரடியாக பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஆணாதிக்கத்துக்கு எதிரான மாற்றங்கள் வேகம் பெறும் என்று நம்புகிறேன்.

இந்த மசோதாவை ஆர்வத்துடன் முன்னெடுக்க முயன்ற சோனியா அவர்களுக்கும், தற்போது அது அவையில் நிறைவேற அனுமதித்த பிரதமர் மோடி அவர்களுக்கும் நன்றிகள்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!