தமிழ் குரல் / AI Voice
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளார். அவர்கள் பயணித்து வந்த டிராகன் விண்கலம், இந்திய நேரப்படி (19.03.2025) சுமார் அதிகாலை 3.27 மணி அளவில் ஃபுளோரிடா அருகே கடலில் இறங்கியது.புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரோஸ்கோஸ்மோஸ், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்.

சுனிதா உள்ளிட்ட நால்வர் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி.ஆனால் அவர்கள் ஒன்றும் காப்பாற்றப் படவில்லை/மீட்கப்படவில்லை. அவர்களுடைய பணிக்காலம் நிறைவுற்ற பின்னர் பூமியை வந்தடைந்துள்ளனர். தொழில் நுட்ப சிக்கல் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தலுக்காக வரையறுக்கப்பட்ட காலத்தைக் கடந்து கூடுதல் நாட்கள் அங்கு பணியாற்ற வேண்டியதாகிவிட்டது.
இது வழக்கமான செயல் திட்டம் மற்றும் நடைமுறை தான். விண்வெளியிலிருந்து அவர்களை மீட்டு, எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் காப்பாற்றிக் கொண்டு வந்தது போன்று உலக ஊடகங்கள் செயற்கையாகக் கட்டமைப்பது தேவையற்றது, டிரம்ப் மற்றும் மஸ்க் கை ஆபத்பாந்தவர்களாகக் காட்டும் அமெரிக்க அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அறிவியலாளர் வெங்கடேசுவரன் சொன்னதை மனதில் கொள்ள வேண்டும்.
இதே கருத்தை/ எண்ணவோட்டத்தை நேற்றைய பேட்டியில் விஞ்ஞானி நம்பி நாராயணனும் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனிடையே 4 வீரர்களுக்கும் பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும். விண்வெளியில் தங்கியிருந்ததால் குறிப்பாக அவர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களால் எழுந்து நடக்க முடியாது.அவர்களின் தோல், குழந்தைகளின் தோல் போன்று மிகவும் மென்மையாக மாறியிருக்கும். கண்பார்வை திறன் பாதிக்கப்பட்டு இருக்கும். கதிரியக்க பாதிப்பு காரணமாக செல்கள், ரத்த அணுக்களும் பாதிக்கப்பட்டிருக்கும். பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி ஏற்படும். எலும்பு, தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும் என்பதால் அவர்களால் தரையில் கால் ஊன்றி நடக்க முடியாது.
விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் விஞ்ஞானிகளுக்கு திரும்ப நடைமுறை வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்வது பழக்கமாக பல நாட்கள் ஆகும்.மூளையின் அழுத்தத்தில் மாறுபாடுகள் ஏற்படுவதால் பார்வைக் குறைபாடுகளும், சிறுநீரகம், உணவு எடுத்துக் கொள்வதில் பிரச்சனை போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது

சுமார் 3 மாதங்கள் முதல் ஓராண்டுக்கு பிறகே சுனிதா உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள். பூமிக்குத் திரும்பிய 4 பேரும் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு 6 வாரங்கள் (45 நாட்கள்) தீவிர பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக தரையில் கால் ஊன்றி நடப்பதற்கு பயிற்சி வழங்கப்படும். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் வழங்கப்படும். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு தமது வீடுகளுக்கு செல்வார்கள்.
இந்நிலையில் உலகளவில் விண்வெளியில் அதிக நாட்களை கழித்த வீரர்கள்!
ஒலெக் கோனோனென்கோ,ரஷ்யா-1,110
கென்னடி படல்கா,ரஷ்யா – 878
செர்கெய் க்ரிகலெவ்,ரஷ்யா – 803
அலெக்சாண்டர் கலேரி, ரஷ்யா – 769
செர்கெய் அவ்தெயெவ்,ரஷ்யா – 747
பெக்கி விட்சன்,அமெரிக்கா – 675
ஃப்யோடர் யுர்சிகின்,ரஷ்யா – 672
யூரி மாலென்சென்கோ,ரஷ்யா – 641
சுனிதா வில்லியம்ஸ்,அமெரிக்கா 609
பாவெல் வினோக்ரதோ,ரஷ்யா – 546.
நிலவளம் ரெங்கராஜன்
