தேசத்துரோக சட்டம் தேவையா? – சுப்ரீம் கோர்ட் கேள்வி?

தேசத்துரோக சட்டம் தேவையா? – சுப்ரீம் கோர்ட் கேள்வி?

இந்திய விடுதலைக்குப் பிறகு பல்வேறு பழைய சட்டங்களை மறுஆய்வுக்கு உட்படுத்தி திருத்தம் செய்து கொண்ட இந்திய அரசு, எப்படி இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவை மட்டும் மாற்ற பரிசீலிக்காமல் போனது என்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் தேவையா? என்றும் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் ராணுவ மேஜர் எஸ்.ஜி. ஓம்பட்கர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் இந்திய தண்டனைச் சட்டத்தின் தேச துரோக குற்றங்களுக்கான பிரிவு 124ஏ, பேச்சுரிமை, கருத்து சுதந்திரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார். அதாவது இந்தச் சட்டத்தை 1837-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதியும் வரலாற்று ஆசிரியருமான தாமஸ் மெக்காலே உருவாக்கினார். 1860-ம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட போது, இந்தச் சட்டம் முதலில் அதில் சேர்க்கப்படவில்லை. பின்னர், 1870-ம் ஆண்டு சிறப்பு மசோதா இயற்றப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தில் இது இணைக்கப்பட்டது. இந்தியாவிலேயே, பழைமையான சட்டத்தில் இதுவும் ஒன்று. இந்திய தண்டனைச் சட்டத்தில் 124ஏ பிரிவுதான் தேசத்துரோகத்தை வரையறுக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேசத்துரோகமாகக் கருதப்படுகின்றன

இதற்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை அல்லது அபாரதம் தண்டனையாக விதிக்கப்படலாம். இதில்,”அவநம்பிக்கை” என்ற வார்த்தையானது, விசுவாசமின்மை மற்றும் பகைமையின் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்குகிறது. இந்தியாவில் விடுதலை முழகத்தை எதிரொலிப்பவர்களை ஒடுக்க இந்த தேச துரோக சட்டத்தை பிரிட்டன் அரசு இயற்றியது. ஆனால், அதே பிரிட்டன் நாட்டில் இந்த சட்டம் 2009இல் நீக்கப்பட்டது. இந்தியாவில் இன்னும் தொடருகிறது. மேலும் அண்மைகாலமாக நம் நாட்டில் இந்த தேசத்துரோக வழக்குகள் அதிகரித்து வருகின்றன. பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், படைப்பாளர்கள், சினிமா இயக்குநர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் என கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவரின் மீதும் இந்தச் சட்டம் பாய்கிறது.

இந்நிலையில்தான் நாடு முழுவதும் இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “ஆங்கிலயேர்களின் காலனித்துவ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப்பிறகு தேவையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “மகாத்மா காந்தி மீது அடக்குமுறையை கையாள்வதற்காக பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம் இது” என குறிப்பிட்டவர், அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுபாடுகளை இந்த சட்டம் விதிப்பதாக தெரிவித்தார். அத்துடன் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவின்படியும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகும் எப்படி அந்த பிரிவை சட்ட அமலாக்க அமைப்புகள் பயன்படுத்துகின்றன என்றும் தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து இந்த மனு தொடர்பாக பதிலளிக்க கோரி மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார்.

error: Content is protected !!