டெல்டா வைரஸால் ஆபத்து : இன்னும் பல உருமாற்றம் வரும் : WHO எச்சரிக்கை!

டெல்டா வைரஸால் ஆபத்து : இன்னும் பல உருமாற்றம் வரும் : WHO எச்சரிக்கை!

”கொரோனா உருமாறலைப் பொறுத்தவரை, இன்னும் பல கொரோனா உருமாற்றம் இனி வரும் நாட்களில் உருவாகலாம். தற்போது 111 நாடுகளில் பரவியிருக்கும் டெல்டா வகை கொரோனா மூன்றால் அலையானது இன்னும் வேகமாக உலகம் முழுவதும் விரைவில் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சர்வதேச அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம் “ அளவுக்கு அதிகமான தளர்வுகளால் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருக்கின்றனர். இதனால் கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் உலகளவில் மீண்டுமொரு முறை அதிகரிக்கிறது. ஆம்.. கடந்த சில வாரங்களாக தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்பட்டதால் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் கொரோனா புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கையும் இறப்பும் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் உலக அளவில் அவை தற்போது ஏற்றமடைவதை தரவுகளின் வழியாக தெரிந்துக்கொள்ள முடிகிறது. கடந்த 10 வாரங்களாக குறைந்துவந்த உலகளாவிய கொரோனா இறப்பு எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

மேலும் உலகிலுள்ள 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள ‘டெல்டா’ வைரஸ் பரவியுள்ளது. டெல்டா, ஆல்பா, காமா, பேட்டா ஆகிய 4 வகை உருமாறிய வைரஸ்களில், டெல்டாவுக்குத் தான் விரைவாக பரவும் தன்மை அதிகம் உள்ளது. மேலும், இனி வரும் நாட்களில், பல நாடுகளில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. முன்னரே குறிப்பிட்டது போல் குறைவான மக்களுக்கு, தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் சுகாதார வசதிகளை உருவாக்குவதில் அதிக நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

உலகில், 178 நாடுகளில் ஆல்பா வைரஸ் பரவியுள்ளது. பீட்டா வைரஸ் 123 நாடுகளிலும், காமா வைரஸ் 75 நாடுகளில் பரவியுள்ளன. உலகின் பல நாடுகளில், தொற்று நோய் கண்காணிப்பு பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் குறைவாக உள்ளதால், எப்போது எந்த வகை கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இதுவரை, உலகில் 300 கோடி பேருக்கு ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது உலகின், மொத்த மக்கள் தொகையில் 24.7% மட்டுமே ஆகும். ‘கோவாக்ஸ்’ திட்டத்தின் மூலம், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி சப்ளையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”, என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!