ஏன் இந்த திசை திருப்பும் அரசியலை முன்னெடுக்கிறார்கள்?

ஏன் இந்த திசை திருப்பும் அரசியலை முன்னெடுக்கிறார்கள்?

கல்வித்துறையின் மாபெரும் பாலியல் வக்கிர வலைப்பின்னல்கள் மற்றும் அதிகார வர்க்க போதை, இவைகள் குறித்து எழ வேண்டிய கோவத்தையும் கேள்விகளையும் ஆளுநர் ‘தாத்தா’வும் , எச்.ராஜாவும் எஸ்.வீ. சேகரும் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். அதுவும், திட்டமிடப்பட்ட திசை திருப்புதல்கள். கவர்னரின் நடவடிக்கைகள், எச். ராஜா மற்றும் எஸ்.வீ. சேகரின் வக்கிர எழுத்துக்களின் வீரியமோ அதன் அர்த்தங்களும் தாக்கங்களும் தெரியாமல் செய்ய அவர்கள் முட்டாள்கள் இல்லை. நிச்சயமாக, கைத்தேந்த அரசியல்வாதிகள்தான்!.

கல்வித்துறையில் நடக்கும் பாலியல் வலைவிரிப்பு என்னும் மாபெரும் அட்டூழியங்கள், இனி பத்திரிக்கையாளர்கள்-பிஜேபி மோதல்களாக நீடித்து, அடுத்து அடுத்து பயணித்து எல்லாம் மறக்கடிக்கப்படும் சூழல் இப்பொழுதே கண் கூடாக தெரிகிறது.

மதிப்பிற்குரிய ஊடகத் தோழர்களும் தோழியர்களும் உங்கள் மீதான தாக்குதல்கள் எந்த நேரத்தில் எதற்காக தொடுக்கப்படுகிறது (ஜோடிக்கப்படுகிறது) என்பதை உணர்ந்து தொடக்கப்புள்ளியில் இருந்து, ஊடகவியலாளர் லஷ்மி மீதான சீண்டல், சேகரின் ஊடகவியாளர்கள் மீதான பாலியல் வக்கிர எழுத்துக்கள், எச். ராஜா போன்றோரின் கனிமொழிக்கு எதிரான கீழ்த்தரமான எழுத்துக்கள் இவைகளையும் ஒன்றிணைத்து போராடினால் மட்டுமே இங்கு ‘அவர்’களின் அரசியலை முறியடிக்கலாம்.

நிர்மலா தேவி புகைப்படம் என பிஜேபியில் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் வேகமாக பரவியது. நிர்மலா தேவிதான் பிஜேபியில் இருந்தவர் என நம்பவைக்க எடுத்த முயற்சி. பிறகு, புகைப்படத்திற்கு சொந்தமான பெண், இத்தகைய பொய்யான புகைப்படப் பரவுவதால், மன உளைச்சலுக்கு ஆளானதாக எழுதுகிறார். பரவிய புகைப்படம் உண்மையில்லை என்று நிரூபணம் ஆகும் அதே தருவாயில் நிர்மலா மீது வர வேண்டிய கோவத்தை பொய்யாக இன்னொருவர் மீது வர வைத்து, பொய்தான் என அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், நிர்மலா மீதான கோபமும் குறைக்கப்படும் உளவியல் அரசியல் இங்கே நடந்தேறுவதை உன்னிப்பாக கவனிக்கலாம்.

திசை திருப்புதல், பொய்யான இன்னொருவர் மீது கோவத்தை மாற்றுதல், ஒரு பிரச்சனைப் பற்றி கேள்வி கேட்க சென்ற பத்திரிக்கையாளர்களையே எதிரியாக்கி, ஊடகவியலாளர் கோவத்தை திட்டமிட்டு ஏற்றுக்கொள்ளுதல் எல்லாமே ஏதோ ஒரு புள்ளியில் இணையும் அரசியல் தானே!

இந்த திசை திருப்பும் நடவடிக்கைகளை, பல்கலைக்கழக அதிகார வர்க்கம் செயல்பட்டிருந்தால், அது அவர்களை காக்க நடத்தும் கூத்து என உணரலாம். தேவையில்லாமல் ஒரு கட்சியினர் அனைவரும் ஏன் இந்த திசை திருப்பும் அரசியலை முன்னெடுக்கிறார்கள்? யாரைக் காப்பாற்ற? எதனை மறைக்க? எதற்காக?

விஜய் அசோகன்

Related Posts