நீட் தேர்வு வேண்டாம் என்று ஒதுக்குவதால் யாருக்கு லாஸ்? – ஐகோர்ட் கேள்வி

நீட் தேர்வு வேண்டாம் என்று ஒதுக்குவதால் யாருக்கு லாஸ்? – ஐகோர்ட் கேள்வி

நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், ‘நீட்’ எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற்ற பின்னரே மருத்துவம் படிக்க முடியும் என்றும் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதால் இதனைக் கடுமையாக எதிர்த்த தமிழகம் அரசு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சிறைப்பு சட்டம் ஒன்றை இயற்றியது. அந்த சட்டமானது தற்போது ஜனாதிபதி ஒப்புதலுக்காக டெல்லி அனுப்பப்பட்டுள்ளது.

neet mar 16

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த வித்யா ஷரோன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில் தனியார் மற்றும் சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகள் தங்களிடம் உள்ள 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களை அரசிற்கு வழங்காமல் தாங்களாகவே நிரம்பி கொள்கிறார்கள் என்றும், அதனால் தன்னை போன்ற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறியிருந்தார். மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை முறையாக தமிழக அரசுக்கு அளிக்க தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் 50 சதவீத அரசு இடங்கள் தமிழக அரசுக்கு வழங்குவது குறித்து மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினர். கிராமப் புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களை விலக்கி வைப்பதன் மூலம் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் தாழ்ந்து போகாதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் கல்வியின் தரம் சிறப்பாக இல்லை என்றார்.

மேலும் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அரசுக்கு வழங்கப்படுகிறதா? அங்கு தகுதி அடிப்படையில் இடங்கள் நிரப்ப வேண்டும் என்ற விதிகள் பின் பற்றப்பட்டதா? தமிழக அரசு தனியார் கல்லூரிகளிடம் இருந்து பெறப்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் எத்தனை என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இது தவிர தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்புக்கு எத்தனை இடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது? அதை போல 2016-17ம் கல்வியாண்டில் எத்தனை மருத்துவ இடங்கள் அவற்றால் நிரப்பப்பட்டன? என்பது குறித்து எல்லாம் இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க வேண்டும் என்றும் கிருபாகரன் உத்தரவிட்டார்.

Related Posts

error: Content is protected !!