பிளஸ் 2 ரிசல்ட் அவுட்: 94.56% பேர் பாஸ்!

பிளஸ் 2 ரிசல்ட் அவுட்: 94.56% பேர் பாஸ்!

மிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில் 7,50,000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வுகளை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தேர்வு முடிவுளை வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

* தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 5603. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5161. (92.11%)

* தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 115 (92%)

* 125 சிறைவாசிகள் தேர்வுகளை எழுதிய நிலையில் அதில் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

* தேர்ச்சி சதவீதம் 92 சதவீதமாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் 91.32% பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

* அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதம், தனியார் பள்ளிகள் 96.7 சதவீதம், மகளிர் பள்ளிகள் 96.39 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 86.96 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 94.7 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

* இத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடிசினல் ரிப்போர்ட்:

இந்தத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் 94.56 சதவீதமாக உள்ள நிலையில், 41,410 பேர் இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் உடனடியாக மறுத்தேர்வு எழுதி அதன் மூலம் நடப்பாண்டில் கல்லூரிகளில் சேர்க்கை பெற வசதி வாய்ப்பு உள்ளது. எனவே, மாணவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள், நாளை முதலே இதற்காக விண்ணப்பிக்கலாம். தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவே மாணவர்கள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டுக்கு கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 505 ரூபாய் செலுத்த வேண்டும். 10 முதல் 15 நாட்களுக்குள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு அதன் தகவல்கள் தெரிவிக்கப்படும்.

இதே போல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், பாடம் ஒன்றுக்கு தலா 205 ரூபாயும், இரண்டு பாடங்கள் ஒன்றாக இருந்தால், அதற்கு 305 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். மாணவர்கள் சிலர் தங்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இவர்களின் வசதிக்காக அந்த விடைத்தாள்களின் நகல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது.

இதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் போது ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகல்களை, மாணவர்கள் இணையத்தில் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!