“இராஜராஜ சோழன் எந்த மதம்? வெட்டி விவாதங்களில் சிக்காதீர்!”

“இராஜராஜ சோழன் எந்த மதம்? வெட்டி விவாதங்களில் சிக்காதீர்!”

ராஜராஜ சோழன் இந்துவா, இல்லையா என்கிற ஒரு விவாதம் இணையத்தில் பரபரக்கிறது. இது தேவையற்றதாகும். வரலாற்று நிகழ்வுகளை அந்தந்த வரலாற்று காலத்தில் வைத்து பார்க்காமால், தற்கால சூழலில் வைத்துப் பார்ப்பது கேடுகளையே உருவாக்கும். இராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் அவர் தன்னை இந்துவாகக் கூறிக்கொள்ளவில்லை என்பது உண்மை. அதே நேரத்தில் சோழர்களின் மதமாக இருந்த சைவம் – பிற்காலத்தில் இந்து மதமாக ஆனது என்பதும் உண்மை.

சைவ சமயத்தில் கோவில் என்றால் அது தில்லை சிதம்பரத்தை குறிக்கும். அக்கோவில் சோழர்களின் ஆன்மிக தலைமை இடமும் கூட. அங்குதான் சோழ மன்னர்கள் நடராஜருக்கு முன்பாக முடிசூடிக்கொள்வதை மரபாகக் கொண்டிருந்தார்கள். இப்போதும் நடராஜருக்கு முன்பாக முடிசூடும் மரபை பிச்சாவாரம் சோழ மரபினர் பின் தொடர்கின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் இப்போது ஒரு இந்துக் கோவிலா, இல்லையா – என்று விவாதிப்பதற்கு இணையானதுதான், இராஜராஜன் இந்துவா, இல்லையா என்கிற விவாதமும் ஆகும்.

இராஜராஜ சோழன் தன்னை ஒரு இந்துவாக கூறிக்கொள்ளவில்லை. ஆனால், அவர் பின்பற்றிய சமயத்தை இப்போது நாம் இந்துமதமாக அடையாளப் படுத்துகிறோம். காலம்தான் ஒரு பெயரை அளித்துள்ளதே தவிர, இராஜராஜனின் அடையாளத்தில் எந்த முரண்பாடும் இல்லை!
——————–

“இராஜராஜ சோழன் சமய வெறுப்பாளன் இல்லை”

இராஜராஜ சோழன் ஒரு சைவ சமயப் பற்றாளன். அதே நேரத்தில் மற்ற சமயங்களை வெறுத்தவர் இல்லை. அவர் வைணவ கோவிலையும் கட்டியிருக்கிறார். வைணவ கோவில்களில் திருப்பணிகளையும் செய்திருக்கிறார். தஞ்சாவூர்-பாபநாசம் சோத்தமங்கலம் பெருமாள் கோவில் இராஜராஜ சோழன் கட்டியது ஆகும். விழுப்புரம் அருகே உள்ள எண்ணாயிரம் ஸ்ரீஅழகிய நரசிம்ம பெருமாள் கோவில் இராஜராஜன் திருப்பணி செய்த கோவில் ஆகும். சைவம், வைணவம் மட்டுமல்லாமல், அவற்றிலிருந்து வேறுபட்ட சமயமான பௌத்த கோவிலுக்கும் இராஜராஜ சோழன் கொடைகள் வழங்கியிருக்கிறார்.

இராஜராஜ சோழன் தனது 21ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1006) நாகப்பட்டினம் அருகே ஆனைமங்கலத்தில் சூளாமணி விகாரம் எனும் பௌத்த கோவிலை கட்ட, ஸ்ரீவிஜயத்தை (மலேசியா – இந்தோனேசியா) ஆண்ட அரசன் மாறவிஜயதுங்க வர்மனுக்கு அனுமதி அளித்தார். இந்த புத்த விகாரத்திற்காக ஆனைமங்கலத்தின் வருமானத்தை கொடையாக அளிக்கும் ஆணையை ராஜராஜ சோழனே யானை மீது வந்து அளித்தார் என லெய்டன் செப்பேடுகள் கூறுகின்றன.

புத்த விகாரத்திற்கு இராஜராஜன் அளித்த கொடையை அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழனும், மகள் வழி கொள்ளுப் பேரனான முதலாம் குலோத்துங்க சோழனும் மீண்டும் உறுதி செய்து ஆணை வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு, ஒரு வேற்று சமயத்தை சோழர்கள் வழிவழியாக போற்றி வந்துள்ளனர். (இந்த புத்த விகாரத்தின் சிதைந்த பகுதிகள் 1867ஆம் ஆண்டுவரை இருந்தன).

——————–

சோழர்கள் சமய வெறுப்பை கைக்கொள்ளவில்லை. தமிழர்கள் மதவெறுப்பாளர்கள் இல்லை. தமிழ்நாட்டிற்குள் புதிய மதங்கள் படையெடுத்து வரவில்லை. அவை வணிகத்தொடர்பால் வந்தன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின், ஒரு நூறாண்டு காலத்திற்குள் தமிழ்நாட்டிற்கு கிறிஸ்தவம் வந்துவிட்டது (புனித தாமஸ்). முகமது நபிகள் வாழ்ந்த காலத்திலேயே இஸ்லாம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது (சேரமான் பெருமான்). ஆனால், கடந்த 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் தமிழக மக்கள் புதிய மதங்களுக்கு பெருமளவில் மாறிவிடவில்லை. குறுகிய கால அரசியல் இலாபநோக்கில் தமிழ்நாட்டின் மீது மதவெறியை திணிப்பது இந்த நாட்டை பேரழிவில் தள்ளும். ஒருபோதும் மதவெறி & மதவெறுப்பு கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிராதீர், பரப்பாதீர்.
——————–

குறிப்புகள்

1: சோழர் காலத்தில் சைவம் வைணவம் இடையே சமய சச்சரவு இருந்தது. ஆனால், சோழர்கள் அந்த சண்டையை ஊக்குவிக்கவில்லை. இரண்டாம் குலோத்துங்க சோழன், சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசி எறிந்த நிகழ்வு தவிர வேறு நிகழ்வுகளில் சோழர்கள் எந்த சமயத்தையும் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில், இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன் இரண்டாம் இராஜராஜ சோழன் வைணவ எதிர்ப்பை கைவிட்டு, தந்தையின் தவறுக்கு ஈடுசெய்தான் என்பதை அவனது மெய்கீர்த்தி “வீழ்ந்த அரி சமயத்தையும் மீள விடுவித்து” என்று குறிப்பிடுகிறது.

2. இந்திய அரசியல் அமைப்பு 1950ஆம் ஆண்டில் ஏற்கப்பட்டது முதல், அனைத்து மதங்களுக்கும், அனைத்து நம்பிக்கைகளுக்கும் இந்தியாவில் சமஉரிமை உள்ளது. எதுவும் மேலானது இல்லை, எதுவும் கீழானது இல்லை. எவரும் எந்தவொரு நம்பிக்கையையும் கைக்கொள்ளலாம், விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம். இந்த உரிமையை எதிர்ப்பதும் எந்தவொரு மத நம்பிக்கையையும் குறைவாக மதிப்பிட்டு வெறுப்பு பிரச்சாரம் செய்வதும் இந்திய தேசத்திற்கு எதிரான குற்றச்செயலாகவே கருதப்பட வேண்டும்.

அருள் ரத்தினம்

error: Content is protected !!