பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பிரச்னை என்ன?

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பிரச்னை என்ன?

நேத்து மனதை கஷ்டப்படுத்திய செய்தியாக இதை படித்ததும் தோன்றியது… !பிள்ளைகள் சரிவர ஆதரிக்கவில்லை என்பதால் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து இறந்த தம்பதிகள்… குறித்த செய்திதான் அது! நடுத்தர வர்க்க குடும்பமாக தான் தெரிகிறது… சமீபகாலமாக இது மாதிரியான செய்திகளை நிறைய முறை கேள்விப் படுகிறேன்… !ரொம்பவும் வேதனையான விஷயம் தான்.. பொதுவாக இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது!

பொருளாதார கஷ்டம்
நோய் கொடுமைகள்
பிள்ளைகள் அன்போ ஆதரவோ இல்லை என்பதாக.. -இந்திய பெற்றோர்களை பொறுத்தவரை பிள்ளைகள் வாழ்வை மட்டுமே தம் வாழ்வாக நினைக்கிறார்கள்.. அது மிகப்பெரிய தவறு..!நிச்சயமாக நாம் வேறு பிள்ளைகள் வேறு தான்.. குறிப்பாக மொத்தவாழ்வில் பிள்ளைகளுக்கான உலகமாக அதிகபட்சமாக பத்து வயது வரை மட்டுமே கவனிக்கலாம்.! அதன் பிறகு பிள்ளைகள் திருமணம் வரை ஒரு கண்காணிப்பு அக்கறை மட்டுமே வைத்துக்கொள்ளலாம்… தனது ஆறாவது வகுப்பு முதல் பிள்ளைகளே நம்மிடமிருந்து பெரும்பாலும் விலகி கொள்கிறார்கள் . அதே சமயம் வெளி உலகத்தோடு சகஜமாக பழக துவங்கி விடுகிறார்கள்.. ஆனால் பெற்றோரான நாம் அவர்களை தூக்கி சுமப்பதாக நினைத்து கொண்டு நமது வாழ்வினை தியாகம் செய்து கொண்டிருப்போம்.. நமக்கென இருக்கும் வாழ்வு குறித்து யோசிப்பதே கிடையாது… !அப்படியில்லாமல் இளமையிலேயே ஒரு தொகையை நமது எதிர்காலத்துக்கென சேமித்து வைத்து கொள்வது நல்லது .

Infant Grasping Mother’s Finger

மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் இருக்குமே என நினைத்தாலும், பென்ஷன் தொகைக்கு மேல் கடன் வாங்கி பிள்ளைகளுக்கு செலவு செய்து விட்டு தவிக்கும் பலரை எனக்கு தெரியும்.. செட்டில்மென்ட் பணத்தை கூட துடைத்து பிள்ளைகளுக்கு செலவு செய்து விட்டு சோற்றுக்கு அலையும் பெற்றோரையும் தெரியும்.. 1தற்போது எல்லா வகை பெற்றோருமே தங்களுக்கென சேமித்து கொள்வது கட்டாய தேவை… !முதுமையில் நோய் கொடுமைகள் தவிர்க்க முடியாதது… நாற்பது வயது ஆனாலே மெது மெதுவாக ஒவ்வொன்றாக வரத் துவங்கும்.

நிறைய பேருக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம் என்பது கூட தெரியாது.. அநாவசிய செலவு என ஒதுக்குகிறார்கள். ஒரு நான்கு பேர் ஒரு முறை சினிமா பார்க்கும் செலவு தான். ஒரு மாதத்துக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொகை.. பலருக்கும் இது குறித்து தெரியாது. . தெரிந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். நோய் கொடுமைகளுக்கு முக்கிய முதல் காரணமே பொருளாதார காரணம். அது இல்லாவிட்டால் சாதாரண நோய் கூட கொடூரமானதாக மாறிவிடும். இக்காலத்தில் பணம் இல்லாமல் எந்த நோய்க்குமே மருத்துவம் பார்க்க இயலாது. அப்போது தான் பிள்ளைகள் தங்கள் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் தங்களை நிலைநிறுத்தி கொள்ளவே போராடி கொண்டிருப்பார்கள். பெற்றோரின் கஷ்டங்கள் அவர்களை இன்னமும் வெறுப்பேற்றும்..

இந்த மூன்றாவது வகை கொடுமை.. தனிமை.. பேச ஆள் இல்லா நிலை.பணத்திற்கும் இதற்குமே கூட கொஞ்சம் சம்பந்தமுண்டு.. பணம் இருந்தால் கார் போன்ற வசதிகளை வாடகைக்கு கூட எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு மருத்துவமனைக்கோ, ஒரு தேவைக்கோ அல்லது உறவினர்கள் இல்லத்திற்கோ சற்று உதவிகள் தேவையில்லாமல் கூட சென்று விடலாம்… ஒரு மினி சுற்றுலா கோவில் போன்ற இடங்களுக்கும் கூட சென்று வரலாம். நிச்சயமாக இளமை காலங்களில் தனக்கென ஒரு ஹாபி வைத்துக்கொள்வது முதுமையில் தனிமையை கொஞ்சம் மட்டு படுத்தும். அப்படியில்லாத பலருக்கு முதுமை காலங்களில் என்ன செய்வதென்றே புரிவதில்லை.. சும்மாவே எதையாவது யோசிக்க தோன்றுகிறது.. நமக்கு யாருமே இல்லை.. பிள்ளைகள் எட்டி கூட பார்ப்பதில்லை என்பதாக.. மாறாக முதுமையிலும் பிஸியாக வைத்து கொள்ளும் பெற்றோருக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் குறைகிறது..

கடைசியாக பலரும் தெரிந்து கொள்ளாத ஒன்று… வயதானவர்களுக்கான இல்லங்கள்..!குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் அதிகபட்சமான தொகைகள் வரை நமது வசதிகளுக்கேற்ப நிறைய வந்துவிட்டது… பணம் கட்டி விட்டால் மூன்று வேளை உணவுகளுடன் மருத்துவ வசதிகளுடன் கிடைக்கிறது. தனியாக இருப்பதாக நினைக்க தேவையிருக்காது.. நவீன வசதிகளுடன் பைவ் ஸ்டார் வசதிகளுடன் கூட ரிசார்ட்கள் போன்று இருக்கிறது. நம் ஊரில் இதற்கு ஆட்சேபங்கள் நிறைய இருக்கிறது. பிள்ளைகளுக்கு கௌரவ குறைச்சல்.. ஏன் பெற்றவர்களுக்கே கௌரவ குறைச்சல்… சொந்தகாரர்களின் வாய்… போன்று நிறைய கிரிட்டிரியா… இதையெல்லாம் தூக்கி போட்டு விட்டு நிம்மதியாக இந்த வசதிகளை பயன்படுத்தி வருபவர்கள் சிலரையும் எனக்கு தெரியும்..!

ஒரு பத்திரிக்கையாளராக முதியவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் (அல்சீமர் ) மற்றும் தேவைகள் குறித்து இந்த இல்லங்கள் மற்றும் அமைப்புகள் நடத்துபவர்களிடம் நிறைய பேசி இருக்கிறேன்.நர்சரி ஸ்கூல் போன்று( தனியாக உணரும் பெற்றோருக்கு) காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு வரை உணவுடன் கூடிய வகுப்புகள் உண்டு என்பது எவ்வளவு பேருக்கு தெரியும். அதில் சின்ன சின்ன ஆக்டிவிட்டி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் உண்டு. விழாக்கள் உண்டு. அவர்களுக்கேற்ப எளிதில் செரிக்கும் உணவுகளும் உண்டு.மறதி முதலான குறைபாடு உள்ளோருக்கு தனி வகுப்புகள் உள்ளது… இதில் அவர்களுக்கு நிறைய புத்துணர்ச்சி கிடைப்பது உண்மை.

அதே போன்று ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பிஸியோதெரபி போன்ற சிறு சிறு பயிற்சி உண்டு. தங்கள் வேலைகளை தாங்கள் செய்து கொள்ள உதவும். வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு போனாலும் இதை தொடரும் வசதிகள் உண்டு. இது போன்று வகுப்புகள் நடத்தும் பெண்மணி ஒருவர் நெகிழ்வாக என்னிடம் பகிர்ந்து கொண்டது.. ஏதேனும் தவிர்க்க இயலாத காரணத்தால் பயிற்சி வகுப்புகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தால் கூட அந்த பெரியவர்கள் ஏங்கி போய் விடுகிறார்கள்… அப்போது அதற்கான இன்பாக்ட் எவ்வளவு இருக்கிறது என்று யோசித்து கொள்ளலாம். இதற்கெல்லாம் பணம் என்கிற வஸ்து தான் முக்கிய காரணம் தான்.. பல விஷயங்களை தவிர்க்கும் வரங்கள் அதற்கு உண்டு தான்.. அதையெல்லாம் விட இதை செய்யும் மனம் தான் முதலில் தேவை.!நிறைய பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இது குறித்த பல்வேறு விழிப்புணர்வுகள் கிடையாது என்பதே உண்மை.இது குறித்து நான் அறிந்து கொண்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்ள ஆசை தான்… பலரும் படிப்பார்களா என்று தெரியவில்லை.. மற்றொன்று இங்கு எழுத எனக்கு நேரமும் குறைவாகத்தான் இருக்கிறது.!

– தனுஜா ஜெயராமன்

error: Content is protected !!