எது பைத்தியக்காரத்தனம் சீமான்?

எது பைத்தியக்காரத்தனம் சீமான்?

சிறுபான்மை, பெரும்பான்மை என்று பேசுவது பைத்தியக்காரத்தனமானது என்று பைத்தியக்காரத்தனமாக சீமான் பேசியிருக்கிறார். இது சங்கப் பரிவாரத்தின் மொழி. சிறுபான்மையினர் உரிமை என்பது ஒரு இளையராஜாவோ, யுவனோ, திலீப்போ, ரஹ்மானோ மட்டும் சம்பந்தப்பட்ட தனி மனிதப் பிரச்சனை அல்ல. சமூகக் குழுக்களின் உரிமைகள் தொடர்பானது என சர்வதேச அளவில் பொதுக் கருத்தும், பிரகடனங்களும் காலங்காலமாக இருக்கின்றன. மேலும் சிறுபான்மை உரிமை என்பது மதம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. ஐ. நா. வின் பிரகடனம் இனக்குழுக்கள், மதப் பிரிவுகள், மொழிப் பிரிவுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரின் உரிமைகள் என்றே வரையறை செய்கிறது. இதில் சீமான் ஆதரிக்கும், சீமானை ஆதரிக்கும் புலம் பெயர்ந்த தமிழ் இனக் குழுக்களும் அடங்கும். அவர்கள் வாழும் இடங்களிலெல்லாம் சிறுபான்மையினருக்கு உரிமை ஏதுமில்லை என்று அரசுகள் கூறி விட்டால், இவருடைய அரசியல் இருப்பே ஆட்டம் கண்டு விடும். சிறுபான்மையினர் உரிமை குறித்து ஏ. ஜி. நூரனி ‘ஆர்.எஸ்.எஸ்; இந்தியாவிற்கு ஓர்’ அச்சுறுத்தல்’ என்கிற நூலில் எழுதியிருக்கும் பத்திகளை இங்கு தருகிறேன். சற்றே நீளமான பதிவாக இருந்தாலும் இதை முடிந்தவரை பகிர்வது சீமானின் தம்பிகள் உட்பட பலருக்கும் தெளிவைக் கொடுக்கும்:

இனி ஏ.ஜி. நூரானி:

ஜனசங்கமும், பி.ஜே.பி.யும் சிறுபான்மையினர் என்கிற கருத்தாக்கத்தையே ஏற்றுக் கொண்டதில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 29 மற்றும் 30வது பிரிவுகள் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பெரும்பான்மையினர் மறுக்கும் நிலையில் அவர்களைப் பாதுகாப்பது குறித்துப் பேசும்போது சிறுபான்மையினர் என்று குறிப்பிட்ட போதிலும், சங்கப் பரிவார அமைப்புகள் முஸ்லிம்களையும், கிறிஸ்துவர் களையும், சீக்கியர்களையும் சிறுபான்மையினர் என்று ஏற்றுக் கொள்வதில்லை.

இது போன்ற பல கருத்தாக்கங்களில், ஆர்.எஸ்.எஸ் நவீன காலத்திற்கும், நவீனத்திற்கும், ஏன் இந்திய வரலாற்றிற்கும் எதிராகவே செயல் படுகிறது. ஆரம்பக் காலத்திலேயே சிறுபான்மையினரைப் பாதுகாப்போம் என்று முடிவெடுத்தது இந்திய தேசிய காங்கிரஸ். பாலகங்காதர திலகரும் முகமது அலி ஜின்னாவும் எழுதிய, காங்கிரசிற்கும் முஸ்லிம் லீகிற்கும் இடையே 1916ல் ஏற்பட்ட லக்னோ ஒப்பந்தமும் இதையேதான் செய்தது. டிசம்பர் 28, 1927 அன்று சென்னையில் நடந்த தன் 42வது மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த ஒரு விரிவான தீர்மானத்தை நிறைவேற்றியது. (தீர்மானத்தைக் கமெண்ட் பகுதியில் காண்க) லண்டன் மாநகரில் சிறுபான்மை உரிமைகள் குழு செயல்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் ஒரு துணை ஆணையத்தையே வைத்திருக்கிறது. சர்வதேச அளவில், முதல் உலகப் போர் முடிந்த நிலையில், ஜூன் 28, 1919 அன்று நேச நாடுகளுக்கும், மைய நாடுகளுக்கும், போலந்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில்தான் முதன் முதலாகச் ‘சிறுபான்மையினர் பாதுகாப்பு’ என்கிற சொற்றொடர் புழக்கத்திற்கு வந்தது. டிசம்பர் 18, 1992 அன்று ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் (எண் 47/135) இணைப்பில், தேசிய, மத, மொழிச் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த பிரகடனம் இருந்தது. 1994இல் ஐரோப்பிய கவுன்சில் தேசியச் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியது. 32 பிரிவுகளைக் கொண்ட அந்த ஆவணத்தில் கையெழுத்திடும் நாடுகள் அதன் விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள்.

சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், நடைமுறைகளுக்கு எதிரான பார்வையையே ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி அமைப்புகள் கொண்டிருக்கின்றன. பாராளுமன்றத்தில் இருக்கும் மிருக பலத்தை வைத்துக் கொண்டு தொகுதிகளை மறு சீரமைப்பது, கட்சியிலிருக்கும் முஸ்லிம்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்களின் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை முக்கியத்துவம் இழக்கச் செய்கின்றன சங்கப் பரிவார அமைப்புகள்.

விஜய்சங்கர் ராமசந்திரன்

Related Posts