June 2, 2023

என்னது 5ஜியே வரல..! அதுக்குள்ள 6ஜிக்கு போட்டியா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

எப்போது வரும் என்று பலரும் காத்திருக்கும் 5ஜி தொழில்நுட்பம் இப்போதிருக்கும் தொலைத் தொடர்பு வசதிகளை பல விதங்களில் மாற்றியமைக்கப் போகிறது. தற்போது அளிக்கப்பட்டு வரும் 4ஜி தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு அதிகமாக செயலாற்றக்கூடியது 5 ஜியாகும். ஒரு பைட் டேட்டாவிற்கு தற்போது ஆகும் செலவைவிடக் குறைவான செலவில் அதிக வேகத்தைத் தரப்போவது 5 ஜி தொழில்நுட்பமாகும். இந்த நிலையில் சீனாவிற்கும் அமெரிக்கா விற்கும் கடும் போட்டியை ஏற்படுத்தும் சூழலில் 6ஜி தொழில்நுட்பமும் ஆய்வு நிலையில் உள்ளது. எப்படிப் பார்த்தாலும் அடுத்த பத்தாண்டுகளுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் படாத தொழில் நுட்பமாக 6ஜி இருக்கிறது. ஆனால் யார் 6ஜி யை முதலில் வெளியிடுவது என்பதில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் கடும் போட்டி. இந்த 6ஜி எனும் தொழில்நுட்பம் அடுத்த தொழிற்புரட்சி என்று கருதப்படும் ஒன்றாகும். வரப்போகும் 5ஜியின் உச்சபட்ச வேகத்தை விட 100 மடங்கு அதிகமாக இந்த 6ஜியின் வேகம் இருக்கும் என்கின்றனர்.

புவிசார் அரசியலில் மேலாதிக்கம் செய்ய நினைக்கும் சீனாவும், அமெரிக்காவும் இதையொரு ஆயுதப்போட்டிக்கு இணையான விஷயமாகவே நினைக்கின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் ஹூவாவே நிறுவனம் 5ஜியை அறிமுகப்படுத்தி இன்றுவரை அத்தொழில்நுட்பத்தில் முன்னணியிலுள்ளது. இது போல் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்று டிரம்ப் அரசு நினைத்ததால் ஹூவாவேவின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. ஆயினும் ஒருமுறை டிரம்ப் “எவ்வளவு விரைவாக 6ஜி கிடைக்குமோ அவ்வளவு விரைவாக கிடைக்க வேண்டும்” என்று டிவிட்டரில் பதிவிட்டார் என்றால் அதை எவ்வளவு முக்கியமாக அமெரிக்கா நினைக்கிறது என்பது புரியும். ஆனாலும் சீனா தனது விண்கோள் ஒன்றின் மூலம் எத்தகைய அலைவரிசையைப் பயன்படுத்தி 6ஜி சேவையை அளிப்பது என்பதை ஆராய்கிறது என்று கனடா நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மொபைல் சாதனங்கள் தயாரிக்கும் இஸட் டி ஈ நிறுவனம் சீனா யூனிகாம் ஹாங்காங் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இத்தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயல்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் வாங்கிவிடக்கூடாது என்று மூன்று மாதங்களுக்கு தடைபோட்டது. அமெரிக்காவின் அலைய்ன்ஸ் ஃபார் டெலிகம்யூனி கேஷன்ஸ் இண்டஸ்ட்ரீ சொல்யூஷன்ஸ் கூட்டமைப்பு ஆப்பிள் நிறுவனம் உட்பட பல உலகளவிலான முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இத்தொழில்நுட்பத்தில் முதன்மைப் பெறத் தீவிரம் காட்டி வருகிறது.

டிரம்ப் அரசு ஹூவாவே நிறுவனத்தை உளவு நிறுவனமாகப் பார்த்து அதைச் செயல்பட விடாமல் தடுத்தது 5ஜியில் ஆதிக்கம் பெறுவதற்கே.ஆயினும் ரஷ்யா, மத்தியக் கிழக்கு உட்பட பல நாடுகள் சீனாவின் தொழில்நுட்பம் மலிவு என்பதால் அதனை அனுமதிக்கின்றனர். சீனா 6ஜி தொழில்நுட்பத்தைப் பெற்றால் உள்நாட்டில் உளவு வேலைகளுக்குப் பயன்படுத்தும் என்றும், 5ஜியைக் கொண்டு முக அடையாளம் அறிந்துக்கொள்வதில் சீனா வலிமைப் பெற்றுள்ளதால் 6ஜி மேலும் அது போன்ற உளவு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் என்றும் அமெரிக்கா கருதுகிறது. ஏனெனில் 6ஜி டிரோன், வான் போக்குவரத்து போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றதாகும். மேலும் சீனா போன்ற ஜனநாயகமற்ற நாடுகளில் ஆளுகின்ற கட்சியோ, ஆட்சியாளரோ இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு கடும் அடக்குமுறைகளை ஏவி விடலாம் என்பதும் அமெரிக்காவின் அச்சமாகும்.

இப்போது சுமார் 100 வொயர்லெஸ் காரியர்ஸ் அமைப்புகளே 5ஜியை உலகில் அலைய விட்டு உள்ளன. இதைக்கடந்துதான் 6ஜி உள்ளே வரவேண்டும். இன்னும் 5ஜிக்கே வழியற்ற நிலையில் அதற்குள் உலக அரசியல் நடைமுறைகளால் 6ஜியின் வருகை துரிதப்படலாமோ எனும் கேள்வியும் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் 5ஜியின் செலவே இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களை திணற அடிக்கின்ற நிலையில் 6ஜி வேறா என்ற கேள்வி எழாமல் இல்லை.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு