சட்டசபையில் கவர்னர் பேசியதென்ன? சபாநாயகரின் பதிலடி என்ன? முழு விபரம்!
தமிழக சட்டப் பேரைவில் இன்று உரையாற்றிய கவர்னர் , “பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன.இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்”எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். முன்னதாக கேரளாவில் நடைபெற்ற சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் போது தன் உரையை முழுமையாக படிக்காமல் கேரள கவர்னர் ஆரிஃப் கான் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். பேரவைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த கவர்னரை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து இன்று (12.02.2023) காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியது இதுதான்.
“’அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். பின்னர் அவர், “சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க உரையை இந்த அவையில் நிகழ்த்துவதை எனக்குக் கிடைத்த கவுரவமாக எடுத்துக் கொள்கிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புது வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த அரசின் நோக்கங்களை காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு எனது உரையைத் தொடங்குகிறேன். “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து” மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு.
நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும். அரசின் இந்த உரையில் பல பத்திகள் உள்ளன. உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையில் இந்த உரையுடன் நான் உடன்படவில்லை. எனவே, இந்த அவையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விவாதங்கள் நடக்க வேண்டும் எனக் கூறி எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், நன்றி” என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.
அப்போது அவையில் சில விநாடிகள் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குள் சபாநாயகர் குறுக்கிட்டு உரையைத் தான் வாசிப்பதாகக் கூறி வாசித்தார்.
இதை அடுத்து அப்பாவு சொன்னது,
“கவர்னர் உரைக்கு முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டது. முறைப்படி அழைத்துவந்தோம். தமிழக அரசின் உரையை வாசிப்பதற்காக இந்த அவைக்கு கவர்னர் வருகை தந்தார். வந்த இடத்தில் குறைவாக வாசித்தார். அதை குறையாக நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் தேசிய கீதத்தை முதலில் பாடியிருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை சொன்னார்கள். எல்லோருக்கும் நிறைய கருத்துக்கள் உண்டு. அவற்றையெல்லாம் பேசுவது மரபல்ல. இந்த அரசு, முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாறுபட்ட கருத்துகள், கொள்கை வேறுபாடுகள் இருப்பினும். உயர்ந்த பதவியில் இருக்கும் கவர்னரை மாண்போடு நடத்துவதுதான் தமிழக அரசின், முதல்வரின் பண்பு. அதில் மாற்றமில்லை. கவர்னர், அவர் மனதில் இருப்பதை சொன்னார்.
அன்போடு கேட்பது இது தான். எங்கள் மனதில் இருப்பது என்னவென்றால், “எவ்வளவோ பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டுள்ளது. ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிரதமரின் “PM care fund”-ல் உள்ளது. இந்திய மக்கள் கணக்கு கேட்க முடியாத இந்த நிதியில் இருந்து ஒரு ரூ.50,000 கோடி வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என்று நான் கேட்கலாமே. சவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சபாநாயகர் அப்பாவுவின் இந்தப் பேச்சை தொடர்ந்து கவர்னர் உரையை பதிவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்ததது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அதில் பங்கேற்காமல் புறப்பட்டுச் சென்றார். கவர்னர் கிளம்பும்போது, “தேசிய கீதம் இனிதான் பாடுவார்கள்” என்று கூறினார் சபாநாயகர் அப்பாவு. எனினும், கவர்னர் நிற்காமல் அவையில் இருந்து கிளம்பி விட்டார்.