வலி தரும் செய்திகளைத் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்!

வலி தரும் செய்திகளைத் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்!

ந்த இரண்டு படங்களைக் கவனியுங்கள். எந்தப் படம் உங்களுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருக்கிறது?

தாயிர் காலித் அல் ரஹல் ஒரு சிரிய நாட்டு அகதி. ஜோர்டானில் இருந்த ஒரு முகாமில் அதிகாரப்பூர்வமாக ஏதாவது ஒரு நாட்டில் குடியுரிமை கிடைக்கும் என்று காத்திருந்தவர். அவரது மகனுக்கு லுக்கேமியா. அதற்கு விரைவில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவை. மகனின் உயிரை அவர் காப்பாற்றியே ஆக வேண்டும். அதற்காக அவர் ஐரோப்பாவுக்குள் நுழைய வேண்டும்.

எகிப்தைச் சேர்ந்த மொகம்மது அப்துல் நாசர் தன்னுடைய தச்சு வேலையின் மூலம் கிடைத்த வருமானத்தால் மனைவி, குழந்தைகளுக்கான செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலை.

மட்லூப் ஹுசைன், கிரேக்க நாட்டின் குடியுரிமை திடீரென்று ரத்து செய்யப்பட்டு உடனடியாக பாகிஸ்தான் கிளம்ப வேண்டிய சூழல். ஆனால் அங்கே 20 குடும்ப உறுப்பினர்கள் இவர் வருமானத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை. இவர்கள் எல்லோரும் யாரென்று நமக்குத் தெரியுமா?

லிபியாவின் கரைகளிலிருந்து ஜூன் 8ஆம் தேதி 750 போர் அகதிகளுடனும், வேலை தேடிச் செல்லும் குடும்பத் தலைவர்களுடனும், குழந்தைகளுடனும் கிளம்பிய ஒரு மீன்பிடிப் படகு க்ரீஸ் கடற்கரை அருகே கவிழ்ந்து, அதில் வெறும் 104 பேர் மட்டும் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். அவர்களில் 84 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மீதம் இருந்தவர்கள் குறித்து இன்னும் தகவல்கள் ஏதும் இல்லை. ஒரு மீன்பிடி படகில் 750 பேரை ஏற்றி அழைத்துச் செல்ல எப்படி அங்கே உள்ள நாடுகளின் கடற்படைகள் அனுமதித்தன என்று இப்போது கேள்விகள் எழுகின்றன. அந்தப் படகின் படம்தான் நீங்கள் இங்கே காண்பது.

இறந்து போனவர்களில் சிலர்தான் மேலே உள்ள பெயர்கள். இவர்களைப் பற்றிய செய்திகளை நாம் கடந்த மூன்று வாரங்களில் படித்திருக்கிறோமா? அந்தப் படகின் படத்தை நாம் பார்த்திருக்கிறோமா? பெரும்பாலானவர்கள் படித்திருக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால் ஒட்டுமொத்த உலக ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் ஜூன் 18ஆம் தேதி கடலில் மூழ்கிய டைட்டன் என்ற சிறிய நீர்மூழ்கியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தன. அதில் மூழ்கிய பெரும் பணக்காரர்களைப் பற்றியும் அவர்களைத் தேடும் வேட்டை குறித்த ஒவ்வொரு நிமிட முன்னேற்றங்களையும் பரபரப்பான செய்தியாக்கிக் கொண்டிருந்தன. அந்த டைட்டன் நீர்மூழ்கியின் படம்தான் இன்னொன்று.

இந்த இரண்டு விபத்துகளும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தவை. சொல்லப் போனால் க்ரீஸ் படகு விபத்து முன்பாகவே நடந்திருக்கிறது. உலக ஊடகங்களில் அது குறித்துப் பெரிய செய்திகள் எதுவும் வரவில்லை. சமூக வலைத்தளங்களில் அது குறித்த விவாதங்களும் இல்லை. ஐரோப்பாவுக்கு ஆட்களைப் பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லும் இந்த ஆள் கடத்தல் அமைப்புகள் அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியது குறித்தும் அதை அனுமதிக்கும் ஊழல் அரசு அமைப்புகள் குறித்தும் காட்டமான விமர்சனங்கள் இல்லை. இது தொடர்பான சமூக, பொருளாதாரக் காரணிகள் குறித்து ஒரு சில ஊடகங்கள் தவிர்த்து யாரும் அலசி ஆராயவில்லை.

அதே நேரம் டைட்டன் நீர்மூழ்கியில் பொழுதுபோக்கவோ கேளிக்கைக்காவோ சென்று இறந்தவர்கள் பற்றிய செய்தி மட்டுமே இங்கு முன்னிலை பெறுகிறது. இந்தப் போக்கை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும் சாடியிருக்கிறார். இப்போதெல்லாம் உண்மையான ரத்தமும் சதையுமான பிரச்னைகளுக்கு ஊடகங்களின் கவனம் கிடைப்பதில்லை. அப்படி கவனம் கிடைக்க அதன் பின்னால் ஒரு கவர்ச்சியான பெரும் பகுதி மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் அல்லது கேளிக்கை தரும் கதை இருக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெரும் பணக்காரர்களின் கூட்டம் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சென்று அதே போல மூழ்கிப்போன செய்தியில் அந்தக் கவர்ச்சி இருக்கிறது. ‘வேண்டும் அவர்களுக்கு..’ என்ற ஒருவித வன்மத்தையும் அதில் உணர முடிந்தது.

ஏழை எளியவர்கள் தங்களைத் துரத்தும் வறுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் தப்பிச் சென்ற ஒரு மீன் பிடி படகில் அந்தக் கவர்ச்சி இல்லை. ஏனென்றால் இந்த மாதிரியான செய்திகள் நம்மையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கடினமான கேள்விகளை எழுப்புகின்றன. 500க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயிருக்கும் சாத்தியம் உள்ள செய்தியில் கூட நமக்கு ஆர்வம் ஏற்படுத்தும் கூறுகள் இல்லை என்பது கொஞ்சம் அதிர்ச்சியைக் கூட அளிக்கிறது.

இன்று இந்த நேரத்தில் கூட நாம் கூட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் டிரெண்டிங் செய்திகளின் பின்னால் எத்தனை உண்மையான வலி தரும் செய்திகளைத் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது.

ஷான் கருப்பசாமி

error: Content is protected !!