அழிவிற்கான வழி – 12 மணிநேர வேலை!

அழிவிற்கான வழி – 12 மணிநேர வேலை!

னது கணவர் வளைகுடா நாட்டில் வேலை செய்தபோது எட்டு மணி நேரம் வேலையாக இருந்து பின்பு 12 மணிநேரம் வேலை, 12 நாள் விடுமுறை என கம்பெனி அறிவித்து,எனது கணவர் மிகவும் சோகமாக என்னிடம் பகிர்ந்தபோது, “ஏங்க எவ்வளவு அருமையான செய்தி.இதைப்போயி சோகத்தோட சொல்றீகளே,பன்னன்டு நாளுக்கொரு முறை எங்களைப் பார்க்க வந்துருவீக, பன்னன்டு நாளு வேலையும் கண்ணமூடிக் கண்ணத் தொறக்குறதுக்குள்ள போயிரும்,சட்டுன்னு கெளம்பி பட்டுன்னு ஏரோப்ளேன்ல வந்துருவீகனு நாஞ் சொன்னதுதேன் தாமதம்,”.

12மணி நேர வேலைனா என்ன நெனச்சே, காலையில ஆறு மணி்க்கு வேலைக்குப் போறதுக்கு,நாலரை மணி்க்கு நான் எந்திருச்சு,குளிச்சுக் கிளம்புனாத்தேன், ஆறு மணிக்கி வேலைக்கிப் போக முடியும்.இதுல,நைட் ஷிப்ட் 12 மணி நேரம் ஆறுநாள், பகல் ஷிபிட் ஆறுநாள், சரியான நேரத்தக்குச் சாப்பிட முடியாது. சளிப்பிடிச்சால் கூட பவரான ஆன்டிபயாடிக் இன்ஜெக்சனை நரம்பில் ஏற்றிக் கொண்டு உடனடியாக தேவலையாக்கிக் கொண்டு வேலைக்குப் போகனும். உடல்நலம் சரியில்லாமல் போகவே கூடாது.உடம்பை உழைக்கத் தயாராக இருக்குற மிஷினாத்தேன் நான் பாத்துக்கனும். கம்பெனிக்குத் தேவை புரொடக்ஷனே தவிர எங்களை மனுஷனாப் பாக்காது.எனது உடம்பின் தெம்பை உறிஞ்சிக் சக்கையாகப் போய் விடுவேன் என்று எனது கணவர் விளக்கியபோது, “அம்மாடி, வேணாம் கெளம்பி வந்துருங்க” என்றபோது, எனது கணவர் நம் மகளின் திருமணம் வரை சமாளிக்கிறேன், என்னால் முடியலை எனும்போது வந்து விடுகிறேன் என்றார், எங்கள் இருவர் உணர்வுகளும் இதென்ன வாழ்க்கை என்ற ரீதியில் இருந்தது.

12மணி நேர வேலை ஆரம்பமானது,எனது கணவரின் புலம்பலும்,கோவமும் மிக அதிகமானது,அவரது உடல் நலத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கவனித்துக் கொண்டாலும்,அவரின் கோபம் அதிகமாகவே இருந்தது. அமீருக்கென்ன 12நாள் வேலை,12நாள் லீவு குடுத்து வச்சவன்,பேருக்கு ஏத்த மாதிரி அமீர்தேன், உறவுகளின்(கலக்குறே சந்துரு) எங்கள் நிலை தெரியாத பெருமூச்சு எங்கள் காதருகில் சுட்டது. 12மணிநேர வேலையின் தாக்கம் எனது கணவர் எங்கள் குழந்தைகள் மீது எரிந்து விழுவது, சின்ன விஷயத்துக்குக் கூட கடுங் கோபம் கொள்வது.எனக்கும், கணவருக்கும் காரணம் சிறிதானாலும்,சண்டை பெரிதானது.நாளுக்குநாள் வீட்டில் நிம்மதி பறிபோனது,எங்கள் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வுகாண “நாட்டாமைகள்” உள்ளே வருமளவு நிலைமை போனது.வந்த நாட்டாமைகளும் எங்களுக்கு முன்னால் ஒரு பேச்சும்,எங்களுக்குப் பின்னால் ஒரு பேச்சும் என இருந்தது.
குடும்ப நிம்மதி போனதே பாழாப்போன, மனுஷ ரெத்தம் குடிக்கும் 12மணிநேர வேலைதானே,அப்புடி ஒரு சம்பாத்தியம் வேணாம் என்ற முடிவுக்கு நானும்,கணவரும் வந்து, வி.ஆர்.எஸ்.. கொடுத்து வந்துவிடத் தீர்மானித்த போது,எனது கணவருடன் பணிபுரிபவர்கள் சம்பாத்தியம் நின்னுபோனா வீட்டுல மதிப்பு இருக்காது எனச் சொன்னதும், புதுக் குழப்பம் வந்து, அந்தக் குழப்பத்துக்கு நான் வேப்பிலை அடித்துத் தெளிவித்து, வி.ஆர்,எஸ் கொடுத்து,அந்தத் திசை நோக்கிக் கும்பிடு போட்டு வந்து விட்டார்.

குடும்பத்தில் பெண்கள் என்றால் கணவனை பணங்காய்ச்சி மரமாக நினைப்பார்கள் என்ற பொதுப்புத்தி உருவானவிதம் எப்படி வந்தது எனத் தெரியவில்லை.பணியை விட்டு வந்த எனது கணவர் என்னிடம் பேசியது எல்லாமே, நீ என்னை மதிக்க மாட்டியா?…என்ற வார்த்தைதான் மிக அதிகம், அதற்க்கும் சரியான வேப்பிலை அடித்துப் புரிய வைத்து ,இப்பொழுது எங்கள் வாழ்க்கை ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செல்கிறது. இதில், முக்கியமாக 12மணிநேர வேலையில் சம்பளமும் அதிகப் படுத்தவில்லை, வெளிநாட்டுப் பணி என்றவுடன் “ராஜ வாழ்க்கை” என வாழ ஆரம்பித்தால்,ஓய்வுக்காலத்தில் மிக வருந்த வேண்டியதாக இருக்கும்.எதிர்கால வாழ்வுக்கு சேமித்து கண்டிப்பாக வையுங்கள்.

நமது குழந்தைகள் சம்பாத்தியத்தை நம்பி வயதான காலத்தை எதிர் நோக்காதீர்கள். இப்போது தமிழகத்திலும் 12மணி நேரப் பணிக்கு சட்டம் வந்துருச்சு,கணவன்,மனைவி இருவரும் உழைத்தால்தான் இன்றைய விலைவாசிக்கு குடும்பம் நடத்த முடிகிறது.இதில் இருவரும் 12மணிநேரம் உழைத்தால், குடும்பத்தில் நிம்மதி இருக்காது.மனுஷ இயந்திரமாய் மாறிப் போக வேண்டிய காலமாகப் போய்விடும்.மொத்தத்தில் முதலாளிக்கு தோதான சட்டங்கள், தமிழ்நாட்டில் தொழிலாளி என்பவனை கசக்கிப் பிழிந்து சக்கையாக்கப் போடப் பட்டுள்ளது.

விடியாத காலங்கள் எதிலும் இல்லை,தொழிலாளிக்கும் விடியும் என “விடியல் ஆட்சி”உணர்ந்து கொண்டால் “தொழிலாளிக்கு எதிரான சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும்”. 12,மணி நேரப் பணிக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறோமே தவிர, வாரத்துக்கு 48மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, அதாவது4×12=48, அதை ஏன் 2×24=48 ஆக்கக் கூடாது. எழுபது வயசுல போகக் கூடிய உயிர்,இந்தப் 12மணி நேரப் பணிச் சட்டத்தால் 50 வயதில் போய் விடும்.2×24=48 ஆக்கி விட்டால் 40வயதில் போகட்டும், அழிவுக்கானது எந்த வயதில் அழிந்தால் என்ன?

Hutha

Related Posts

error: Content is protected !!