உலகாயுதா சார்பில் 100 மூத்த திரைப்பட தொழிலாளர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் விழா!
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘உலகாயுதா’ என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர். ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்கத்திற்கான செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார். இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இந்நிகழ்வில், இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் நிறைய திரைப்பட தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். விழாவில், சினிமாவில் தொழிற்சங்க முன்னோடிகளான நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சங்கம் சார்ந்து இயங்கக்கூடிய கலைஞர்கள் மற்றும் சங்கம் சாராமல் இயங்கும் கலைஞர்கள் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மூத்த திரைப்பட ஆபரேட்டர் ராமலிங்கத்திற்கு, ஆபரேட்டராக பணியாற்றிய சேரனின் அப்பா பதக்கம் அணிவித்தார். விநியோகஸ்தர்கள், ஆபரேட்டர்கள், டிரைவர்கள், நடன இயக்குனர்கள், என சினிமாவின் அனைத்து துறைகளை சார்ந்தவர்களுக்கும் பதக்கம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் கலைப்பூங்கா ராவணன், தேவி மணி, மாலி மற்றும் நெல்லை பாரதி ஆகியோருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.

பின்னர் பேசிய விஜய் சேதுபதி, “இங்கு பேசிய அனைவருமே விஜய் சேதுபதி கொடுத்தார் என பேசினார்கள். தமிழ் சினிமாவில் இருந்து எடுத்தேன், அதனால் அங்கேயே கொடுத்துவிட்டேன். எனக்குத் தெரிந்து விஜய் சேதுபதி என்ற மனிதனுக்கு இதுவரைக்கும் ஒரு மரியாதை இருந்ததே இல்லை. எனக்கு மரியாதையோ, அங்கீகாரமோ, அடையாளமோ சினிமா மட்டும்தான்.
விஜய் சேதுபதி என்ற நடிகனுக்குதான் சினிமாவில் மரியாதை. என் வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷமும், எங்கு சென்றாலும் சிரித்த முகத்தோடு வரவேற்கிறார்கள் என்றால் சினிமா எனக்கு கொடுத்த ஒரு பெரிய பாக்கியமாக பார்க்கிறேன். அதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கான வாய்ப்பை நண்பர், தோழர், அண்ணன் ஜனநாதன் சார் கொடுத்துள்ளார். இந்த சிந்தனையை அவர் என்னிடம் கூறிய போது முதலில் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
எங்கு சென்றாலும் சினிமா தான் எனக்கு எல்லாமே என சொல்லிக் கொண்டே இருப்போம். அந்த சினிமாவுக்கு நாம் என்ன செய்தோம் என ஒன்று உள்ளது. ஒருவர் நாயகனாகிவிட்டால் அவனை மதிக்கிற விதம், கொண்டாடுகிற விதம் என எனக்கு ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் அனைவரிடமுமிருந்து வந்தது. எனது படங்களின் லைட் மேன், அரங்கு அமைப்பாளர்கள் என அனைவருமே மதித்தார்கள்.
‘தென்மேற்கு பருவக்காற்று’ சமயத்தில் அப்படத்தின் லைட்மேன் தங்கியிருக்கும் விடுதிக்குள் சென்றேன். எனது முதல் படம், 10 நாட்கள் தான் படப்பிடிப்பு சென்றிருக்கும். அங்கு பெரிய வரவேற்பு கொடுத்து சாப்பாடு போட்டார்கள். அந்த இடத்தில் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். எனக்கே இன்னும் திரையுலகில் மரியாதை கிடைக்கவில்லை, அதற்குள் இவ்வளவு மரியாதையா என நினைத்தேன்” என்று பேசினார் விஜய் சேதுபதி.



