வேளச்சேரி & தி.நகர் ரெயின் பார்க்கிங் பிரிட்ஜ்!

வேளச்சேரி & தி.நகர் ரெயின் பார்க்கிங் பிரிட்ஜ்!

பாலம் கார்களால் நிரம்பி வழிகிறது. காரைக் காப்பாற்ற வேறு வழியில்லை என்று மக்கள் வாதிடுகிறார்கள். மழை நேரத்தில் அவர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டாம் என்று அரசு ஆயிரம் ரூபாய் ஃபைனுடன் அனுமதிக்கிறது. ஊடகங்கள் பார்க்கிங் செய்பவர்களை ஜாலியாக பேட்டி எடுத்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் ஒரு வரிசை என்பது இரண்டாகி, மூன்றானால் என்ன செய்வது? ஆட்டோ ஓட்டுநர்களும் இதே போல் பாலத்தில் பார்க் செய்து கொள்ளலாமா? மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களும் ஒரு ஓரத்தில் விட்டுக்கொள்கிறேன் என்று பிரிட்ஜ்ஜில் ஏறினால் அனுமதிப்பார்களா?என்னைக் கேட்டால் இது பொது மக்களும், அரசும் சேர்ந்து செய்யும் தவறு. ஒரு வேளை ஆம்புலன்சும், தீயணைப்புத் துறையும் இதர அவசர உதவி வாகனங்களும் போய் வர முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?

இப்போது எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால், மழை நேரத்து நியாயங்கள் மழை நின்றவுடன் மாறிவிடும். யாரும் வரிசையில் வந்து காரை எடுக்க மாட்டார்கள். நான்தான் முதலில் என்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள். அடுத்ததாக சட்டப் பிரச்சனை! இப்போது ஆயிரம் ரூபாய் அபராதம் பரவாயில்லை என்பவர்கள், காரை எடுக்கும்போது அதிகம் என்பார்கள். அடுத்து காரில் அதைக் காணோம், யாரோ இடித்துவிட்டார்கள் என்பார்கள். மீண்டும் அவசர உதவி வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தாமதமாகும். சில மணி நேரங்களாவது வழக்கமான போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும்.

சென்னை முழுவதும் குறிப்பாக வேளச்சேரி அருகிலேயே நிறைய மால்கள், மற்றும் தனியார் பார்க்கிங் வசதிகள் உள்ளன. அவர்களிடம் அரசு பேச வேண்டும். மழைக்கால பார்க்கிங் வசதிக்கு சலுகை விலையில் ஏற்பாடு செய்ய வேண்டும். கார் வைத்திருப்பவர்களை அங்கு செல்ல வலியுறுத்த வேண்டும். முடியாது என்போருக்கு மட்டும் சட்டப்படி ஃபைன் போடலாம். அந்தக் கார்களை மட்டும் ஸ்டேஷன்களுக்கு இழுத்துச் செல்லலாம். இதுதான் எனக்குத் தோன்றிய உடனடி அவசர காலத்தீர்வு. நீண்ட காலத் தீர்வுக்கும் இந்த மழைக்காலத்துக்குள் முடிவெடுத்துவிட வேண்டும்.

வேளச்சேரியைத் தொடர்ந்து தியாகராயா நகர் பகுதியிலும் கார்கள் மேம்பாலத்தில் அணிவகுக்கத் துவங்குவதாக செய்திகள் பார்த்தேன். இவை தொடரக் கூடாது.

மழை நின்றபின் ஒரு காட்சியை கற்பனை செய்வோம். எங்கள் வீடு தண்ணீரில் மிதக்கிறது. அதுவரையில் பாலத்தில் தங்கிக் கொள்கிறேன், என்று ஒரே ஒரு குடும்பம், தன் குழந்தைகளுடன் வருகிறது என கற்பனை செய்வோம். அவர்களுக்கு அனுமதி கிடைக்குமா?

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், பாலம் என்பது கார் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல!

ஐ.எஸ்.ஆர்.செல்வா

error: Content is protected !!