நோபல்:பொருளாதாரத்திற்கானபரிசு 3 பேருக்கு அறிவிப்பு!
ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
நடப்பு ஆண்டிற்கனான பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சைமன் ஜான்சன், டாரன் அசோமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூன்று வல்லுநர்களுக்கு இந்த வருடம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
நாட்டை வடிவமைப்பதில் அமைப்புகளின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது. ஒரு அமைப்பு எப்படி உருவாகின்றன. அவை எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு காரணமாக இருக்கிறது. நிலையான வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் ஆகிவை குறித்து இவர்கள் விரிவான ஆய்வுகளை செய்துள்ளனர்.
இது குறித்து தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசினை இந்த ஆண்டு டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 1967 இல் பிறந்த டேரன் அசெமோக்லு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ், யுகேவில் இருந்து 1992ம் ஆண்டு PhD முடித்தவர். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்-ல் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர்.
1963ல் இங்கிலாந்தின் ஷெஃபீல்டில் பிறந்த சைமன் ஜான்சன், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்-ல் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் 1989ம் ஆண்டு PhD முடித்தவர். தற்போது தான் படித்த அதே கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
1960ல் பிறந்த ஜேம்ஸ் ஏ. ராபின்சன், 1993 இல் அமெரிக்காவின் நியூ ஹெவன்-ல் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் PhD முடித்தவர். தற்போது, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் இருக்கிறார்.
“நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவை எவ்வாறு செழிப்பைப் பாதிக்கின்றன” என்பது பற்றி ஆய்வுகளுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாடுகளுக்கிடையேயான செழிப்பு வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள இவர்களின் ஆய்வு உதவியுள்ளதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் தெரிவித்துள்ளது.