வீரன் – விமர்சனம்!

வீரன் – விமர்சனம்!

ம் தமிழ் சினிமாவில் பேண்டசி வகைக் கதைகள் அபூர்வம்.. அப்படியான கதைகளை கையாள தனி திறமை வேண்டும்.. அந்த வகையில் மரகத நாணயம் என்ற பேண்டஸி படத்தை ரசிக்கும் படியாக நமக்கு கொடுத்த டைரக்டர் சரவணன் அதே பேண்டஸி டைப்பில் வேறொரு பரிமாணத்தில்வழங்கி இருக்கிறார்.. அதிலும் நம் கோலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றார் போல கதையை உள்ளூர் தெய்வங்களுடன் இணைத்து அவர் கதை சொல்லியிருக்கும் விதம் நம்பும் படியாம், ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பல இடங்களில் காமெடி காட்சிகளும், சென்டிமென்ட் காட்சிகளும் அனைத்து வயதினரையும் கவர்ந்திருக்கிறது. படத்தில ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ஒரு பேண்டஸி கதைக்கு தேவையான நியாயத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

அதாவது பொள்ளாச்சி டிஸ்ட்ரிக் வீரனூர் வில்லேஜில் வாழும் குமரனுக்கு(ஆதி) 15 வயதில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது மின்னல் அவரை தாக்குகிறது, பின்பு மருத்துவமனையில் சேர்த்தாலும் அவருக்கு சுய நினைவு திரும்பவில்லை. இதனால் அவரை சிங்கப்பூருக்கு அழைத்து செல்கின்றனர். மின்னல் தாக்கியதால் குமரனுக்கு சில சக்திகளும் கிடைக்கிறது. அந்த சக்தியை வைத்து மற்றவர்களின் மூளையை தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் ஆதி அறிந்துக்கொள்கிறார்.

இதற்கிடையே, ஆதி தனது சொன்ன கிராமத்துக்கு ஆபத்து ஏற்படுவது போல் ஒரு கனவு காண்கிறார். உடனடியாக சிங்கப்பூரில் இருந்து வீரனூர் கிராமத்துக்கு வரும் ஆதிக்கு, லண்டனை சேர்ந்த விஞ்ஞானி வினய், வீரனூர் கிராமத்தில் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பயங்கரமான திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் விஷயம் தெரிய வருகிறது. அதிலும் வீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் வில்லன் வினையின் கும்பல் மின்சாரம் தயாரிப்பதற்காக மண்ணுக்கடியில் கம்பிகளை பதிக்கின்றனர், இந்த கம்பி வெடித்தால் அந்த ஊரே தரைமட்டம் ஆகிவிடும் என்பது குமரனுக்கு தெரிய வருகிறது.. இந்த ஆபத்து பற்றி ஊர் மக்களிடம் விவரித்து சொன்னாலும் புரிந்துக்கொள்ளாத மக்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் ஆதி, அதை எப்படி செய்கிறார்? என்பது தான் ‘வீரன்’ படத்தின் கதை.

ஹிப் ஹாப் ஆதி தன்னால் முடிந்த அளவிலான நடிப்பின் மூலம் பாஸ் மார்க் வாங்குகிறார். அவரது குழந்தைத்தனமான முகமும், நடிப்பும் குமரன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.அதிலும்   அவர் சூப்பர் ஹீரோவாக மாறும் காட்சிகள், குழந்தைகளை மிகவும் கவரும் . அது மட்டுமல்லாமல் அவருடைய சண்டை காட்சிகளும், காமெடி காட்சிகளும், சூப்பர் ஹீரோ ஆன பிறகு அவர் செய்யும் சாகச காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.

நாயகியாக வரும் அறிமுக நடிகை ஆதிரா ராஜ், குடும்ப பாங்கான முகமாக இருந்தாலும் ஏனோ எடுபடவில்லை. வில்லனாக நடித்திருக்கும் வினய், ஆதியின் நண்பராக நடித்திருக்கும் யூடியூபர் சசி, முனிஷ்காந்த், காளி வெங்கட் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் பங்களிப்பை நிறைவாக வழங்கி இருக்கிறார்கள்.

தீபக் டி.மேனனின் கேமரா காட்சிகளை அழகாக காட்டியிருப்பதோடு, சூப்பர் ஹீரோ வீரன் வரும் காட்சிகளை இயல்பாகவும், நம்பகத்தன்மையோடும் படமாக்கியிக்கிறது.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது

ஆரம்ப பேராவில் சொன்னது போல் சூப்பர் ஹீரோ ஜானர் படம் என்றாலும் எல்லா மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக வீரன் கேரக்டரை எளிமையாக வடிவமைத்த டைரக்டர் இக்கதைக்கு தேவையான சுவாரஸ்யங்களை இணைக்க தவறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

மொத்தத்தில் வீரன் – ரசிக்க வைக்கிறான்

மார்க் 3/5

error: Content is protected !!