ச்சீச்சீ.. இந்த ஓ.என்.வி விருது புளிக்கிறது : வைரமுத்து அறிவிப்பு!- வீடியோ

ச்சீச்சீ.. இந்த ஓ.என்.வி விருது புளிக்கிறது :  வைரமுத்து அறிவிப்பு!- வீடியோ

லையாளத்தில் மிகப் பிரபலமான கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே இந்த விருதைப் பெறுவதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் வைரமுத்து தெரிவித்திருந்தார். மேலும் முதல்வர் மு.க, ஸ்டாலின் இதற்கு வாழ்த்தெல்லாம் தெரிவித்திருந்தார் . இதனிடையே அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் இவ்விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுடன் பல பெண்ணியவாதிகளும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து ட்வீட் செய்தனர். இதையடுத்து வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் நேற்று அறிவித்தது. எனவே வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருது கிடைக்குமா இல்லையா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது தான் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும், அதனால் அந்த விருதை திருப்பியளிக்க முடிவு செய்திருப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இத்தனைக்கும் முதல் மரியாதை, ரோஜா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய பட பாடல்கள் மூலம் வைரமுத்துவிற்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளதும், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, பாம்பே, சங்கமம், அந்நியன், பெரியார் ஆகிய பட பாடல்கள் வழியாக வைரமுத்துவிற்கு தமிழக மாநில அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் கிடைத்துள்ளன. இந்த விருதுகள் மட்டுமின்றி வைரமுத்துவிற்கு 2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 2014 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் இந்திய அரசாங்கம் வழங்கி கௌரவித்தது. தமிழக அரசு வழங்கும் கலைமாமணி மற்றும் பாவேந்தர் விருதுகளையும் வைரமுத்து பெற்றுள்ளதும் மூன்று பல்கலைக்கழகங்கள் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அப்பேர்பட்டவர் இப்போது அறிவித்த விருத்துக்கு எழுந்த சர்ச்சைக் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”அனைவரையும் வணங்குகிறேன். கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது. நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன். ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன்.

இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.
அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒன்று மட்டும் உறுதியாகச்
சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.

ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மலையாள மண் மீதும் மக்கள் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.

தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும். இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!