ரஷ்யா ஆக்ரோஷப் போர்: உக்ரைனில் 10 லட்சம் பேர் அகதிகளானார்கள்!

ரஷ்யா ஆக்ரோஷப் போர்:  உக்ரைனில் 10 லட்சம் பேர் அகதிகளானார்கள்!

ஷ்யா ஆக்ரோஷ போர் எதிரொலி காரணமாக நிலை குலைந்து போயிருக்கும் உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கே இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தெருக்களில் ரஷ்ய, உக்ரைன் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ளது. தலைநகர் கீவ் மீதும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். உக்ரைனில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் ராணுவ நிலைகளில் ரஷ்ய படையினர் தொடர்ந்து மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கெனவே கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. உக்ரைன் தரப்பும் தாங்கள் மிகப் பெரிய நகரங்களை ஒன்றன்பின் ஒன்றாக ரஷ்யப் படைகளிடம் இழந்துள்ளதாக உறுதி செய்துள்ளது. பொதுமக்களில் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கிடையில் உயிர்பிழைத்தால் போதுமென உக்ரைன் மக்கள் 10 லட்சம் பேர் இதுவரை அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்ய படை வீரர்கள் 489 பேர் பலியானதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை 6,000 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் காயமடையும் ரஷ்ய வீரர்கள் சிகிச்சைக்காக பெலாரஸ் செல்கின்றனர்.

பெரிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திவரும் சூழலில், துறைமுக நகரமான மரியுபோல் நகரமும் ரஷ்யப் படைகளின் பிடியில் வந்தது. அசோவ் கடற்கரையில் உள்ள இந்த நகரம் மிகவும் முக்கியமானது. இதுவரை கிழக்கில் இருந்து நகரங்களைக் குறிவைத்த ரஷ்யா தற்போது தலைநகர் கீவின் மேற்கு மற்றும் தெற்கில் உள்ள நகரங்களையும் தாக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யா அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது. முந்தைய பேச்சுவார்த்தை கோமெல் நகரில் நடந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை பெலாரஸ் எல்லையில் வேறொரு இடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

error: Content is protected !!