உடன்பால் – விமர்சனம்!

உடன்பால் – விமர்சனம்!

வாழ்க்கையே பணம் என்றாகி விட்ட நிலையில், அந்தப் பணமே இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவது சாத்தியமில்லை என்பதையும் பணத்திற்கு கொடுக்கபடும் அளவு மதிப்பு வேறு எதற்குமே இல்லை என்பதே நிஜம் என்பதையும் உரக்கச் சொல்லும் சீரீஸே ;உடன்பால்’ அதாவது இன்றைய காலகட்டத்தில் பணத்துக்காக பெற்ற பிள்ளைகள் சிலரே தங்கள் அப்பா & அம்மாவை என்னவெல்லாம் செய்வார்கள் என்ற நிதர்சனமான உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இத்திரைப்படம். குறிப்பாக ‘நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்’ என்ற மிகப்பெரிய மெசேஜை இப்படம் வலியுறுத்தி உள்ளது ..

அதாவது வீட்டுத் தலைவர் சார்லிக்கு லிங்கா, தீனா, காயத்ரி என மூன்று பிள்ளைகள். இதில் லிங்காவும், காயத்திரியும் மேரேஜ் ஆகி அவரவர் குடும்பத்தோடு சிலபல இன்னல்களுக்கு இடையே குறிப்பாக ஏகப்பட்ட கடன் பிரச்சனையோடு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடன் பிரச்சனை தீர தங்களுடைய பூர்வீக வீட்டை விற்க முடிவு செய்கின்றனர். ஆனால் தான் வாழும் வீட்டை ஒரு போதும் விற்க விடமாட்டேன் என முரண்டு பிடிக்கிறார் சார்லி. இதனால் கோபம் அடையும் அவரது மகன் லிங்கா டென்ஷனாகி தவிக்கிறார். அந்த சமயம் பக்கத்தில் இருக்கும் ஒரு காம்ப்ளக்ஸ்க்கு வேலைக்குச் செல்கிறார் சார்லி. போன இடத்தில் அந்த காம்ப்ளக்ஸ் இடிந்து விழுந்து அதில் இருக்கும் நபர்கள் இடிபாடுகளில் சிக்கி இறந்து விடுகின்றனர். அந்த ஈடுபாடுகளில் சிக்கி தன் தந்தை சார்லியும் இறந்து விட்டதாக எண்ணி விடுகின்றனர் லிங்காவும், காயத்ரியும். அந்த சமயம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக டிவியில் செய்தி வருகிறது. இதைப் பார்த்த சார்லியின் பிள்ளைகள் அதை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள முடிவெடுக்கின்றனர். அந்த நேரம் பார்த்து சார்லி உயிரோடு வீட்டிற்கு திரும்பி வர அனைவரின் முகமும் வாடி விடுகிறது. இதை அடுத்து எதிர்பாராத விதமாக சிறிது நேரத்திலேயே சார்லி மாரடைப்பால் இறந்து விடுகிறார். இதைத் தொடர்ந்து இறந்து போன சார்லியை யாருக்கும் தெரியாமல் இடிந்து விழுந்த காம்ப்ளக்ஸ் உள்ளே போட்டுவிட்டால் தங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என நம்பும் சார்லியின் பிள்ளைகள் அதற்கான முயற்சியில் இறங்குகின்றனர். இதையடுத்து அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

மெயின் ரோலில் நடித்திருக்கும் லிங்கா, உழைச்சு முன்னேறவேண்டும் என்று நினைக்காமல் அப்பாவின் சொத்தை விற்று காலம் தள்ள நினைக்கும் ரோலை நன்குணர்ந்து மிடில் கிளாஸ் ஃபேமிலி மேனின் இயலாமை, கோபம், பாசம் ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்துகிறார். அவர் மனைவியாக வரும் அபர்ணதியின் நடிப்பும் நன்று. கண்மணி மட்டுமில்லை நாங்களும் துடிச்சுப் போயிட்டோம் என்று சொல்லுமிடம் சான்று. சார்லின் மகளாக காயத்ரி நடிப்பு பற்றி சொல்ல வேண்டாம்.. அண்ணனுக்குத் தப்பாத தங்கையாக சுயநலம் மிளிரும் பாத்திரத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கு சரியாக வந்து விட வேண்டும் என்கிற பேராசை மேலிதும் காயத்ரியின் பங்களிப்பு – கொஞ்சம் மிகை என்றாலும் கச்சிதம். காயத்ரியின் கணவராக வரும் விவேக்பிரசன்னா அதகளம் செய்கிறார். மாப்பிள்ளைகளுக்கு மரியாதைக் குறைவு ஏற்படக் காரணமாகியிருக்கிறார்.

காமெடி நடிகராக வலம் வரும் சார்லி, எந்த விதமான குணசித்திர வேடத்தையும் ஏற்று நடிக்க வல்லவர் என்பது தெரிந்த செய்திதான். ஆனால் இதில் வீட்டை விற்க முடியாது என்று மறுத்தாலும் அந்த மறுதலிப்பையும் கூட ஒரு வித பாசத்துடன் வெளிப்படுத்தி இருக்கும் சார்லி நடிப்பில் ச்கோர் செய்கிறார். பேரன் பேத்தியுடன் கொஞ்சும் கலகலப்பில் ஆகட்டும், பேரனையும் தாத்தா என்று அழைப்பதில் ஆகட்டும், இந்தப் படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களது தந்தையோ அல்லது தாத்தாவோ நினைவுக்கு கொண்டு வருவதில் சாதித்து விட்டார் சார்லி. இவரின் சகோதரியாக வரும் தனம், சார்லியின் இரண்டாவது மகனாக வரும் தீனா,ஒரு காட்சியில் மட்டும் வரும் மயில்சாமி ஆகியோர் உட்பட அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

மதன்கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு நடுத்தரவர்க்க வீடு மற்றும் வாழ்க்கையைப் பதிவுசெய்திருக்கிறது. குறிப்பாகச் சொல்வதானால் ஒரு சின்ன வீட்டுக்குள் எந்தெந்த இடத்தில் பிரேம்களை வைத்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணி அதை சிறப்பான முறையில் கையாண்டு காட்சிகளுக்கு வலு சேர்ப்பதுபோல் ஒளிப்பதிவு அமைத்திருக்கிறார் மதன் கிறிஸ்டோபர். அதேபோல் சக்தி பாலாஜியின் பின்னணி இசை ஒரு ஜனரஞ்சகமான படமாக இப்படத்தை மாற்றியுள்ளது. சில டிராஜெடியான காட்சிகளைக் கூட இவரது பின்னணி இசை கலகலப்பு ஊட்டியுள்ளது. ஒரு சிறிய வீட்டுக்குள் சின்ன சின்ன விஷயங்களைக் கூட சிறப்பாக கையாண்டு மிகவும் ரியலிஸ்டிக்கான ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறார் கலை இயக்குநர்

எடுக்கப்பட்ட கதை தவறான கண்ணோட்டதைக் கொடுத்தாலும், அதை காமெடியாக சொல்லி ரசிக்க வைத்து விட்டார் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் ஸ்ரீனிவாசன், இப்போதைய மனிதர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பணத்திற்காக செய்யும் பாவச் செயலை படம் முழுவதும் காமெடியாக சொல்லி இறுதிக்காட்சியில் முகத்தில் அறையும் ஒரு உண்மையும் சொல்லி சகலரையும் கவர்ந்து விட்டது..

மொத்தத்தில் ஃபேமிலியோடு கண்டிப்பாக பார்க்க வேண்டிய லிஸ்டில் இணைந்து விட்டது இந்த உடன் பால். ஆஹா ஓடிடியில் காணலாம்!

error: Content is protected !!