ஐஐடி சென்னையில் இரண்டு புதிய பிடெக் படிப்புகள் அறிமுகம்!

நாட்டின் தரவரிசையில் முன்னணி பொறியியல் கல்வி நிறுவனமான சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி சென்னை), 2025-26-ம் கல்வியாண்டில் மேலும் இரண்டு புதிய இளங்கலை பொறியியல் படிப்புகளைத் தொடங்கியுள்ளது.
1959-ம் ஆண்டில் ஐஐடி சென்னை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, பல்துறை ஆராய்ச்சியில் முன்னணியில் இருந்துவரும் பயன்பாட்டு இயக்கவியல், உயிரி மருத்துவப் பொறியியல் ஆகிய துறைகள் மூலம் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள், வரவிருக்கும் கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையத்தின் (JOSAA) கலந்தாய்வில் இந்த இரு புதிய பாடத் திட்டங்களையும் தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றிலும் தலா 40 மாணவ-மாணவிகள் இடம்பெறுவார்கள்.
கணக்கீட்டுப் பொறியியல் மற்றும் இயக்கவியல் (Computational Engieering and Mechanics – CEM) பிரிவில் (i) B.Tech. பாடநெறிக்கான குறியீடு 412U, கருவிமயமாக்கல் மற்றும் உயிரி மருத்துவ பொறியியலில் B.Tech. (Instrumentation and Biomedical Engineering – iBME) பாடநெறிக்கான குறியீடு 412V.
இதற்கான நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி சென்னை இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “தொழில்நுட்பம் விரைவான மாற்றங்களைக் கண்டு வருவதால், கல்வி–தொழில் ஆகியவற்றுக்கான இடைவெளியைக் குறைக்க உயர்கல்வி நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது மிக அவசியம் என்று தெரிவித்தார். இந்த இரு புதிய அதிநவீன பி.டெக் படிப்புகளும் தொழில்துறை 5.0, சுகாதாரத் தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தி ஆகிய துறைகளுடன் தொடர்புடைய அனைத்து புதுமையான கருத்துகளையும் நிவர்த்தி செய்யும்” என்று கூறினார்.
இடைநிலை இரட்டைப் பட்டம் திட்டங்கள் மூலம் கணக்கீட்டுப் பொறியியல், உயிரி மருத்துவப் பொறியியல், ஆகிய படிப்புகளில் மாணவர்கள் ஐந்தாண்டு இரட்டைப் பட்டப்படிப்புக்கு (B.Tech. + M.Tech.) மேம்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் துறையின் ஆசிரியர்களால் இவை ஒருங்கிணைக்கப்படுகின்றன.
4-ஆண்டு பி.டெக். கணக்கீட்டுப் பொறியியல் மற்றும் இயக்கவியல் (Computational Enginering and Mechanics – CEM) படிப்பு:
எதிர்கால டிஜிட்டல் பொறியியல் தொழில்களுக்கு ஏற்ப இப்பாடத்திட்டம் மாணவர்களைத் தயார்படுத்தும். இயற்பியல் அமைப்புகள் கணக்கீட்டு மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் இதில் ஒன்றிணைகின்றன. தனித்துவமான இப்படிப்பு, நவீன கணக்கீட்டுக் கருவிகளுடன் பாரம்பரிய பொறியியல் அறிவைக் கற்றுக்கொள்ள வைக்கிறது. அத்துடன் நாளைய சிக்கலான, நடைமுறைப் பொறியியல் சவால்களை எதிர்கொள்ளவும் பட்டதாரிகளைத் தயார்படுத்தும்.
இயந்திரக் கற்றல், தரவு அறிவியல், உயர் செயல்திறன் கணினிமயமாக்கல் உள்ளிட்ட அதிநவீன கணக்கீட்டு முறைகளை இப்பாடத் திட்டம் ஒருங்கிணைக்கிறது.