இடைத்தேர்தலில் ஆளும்கட்சி ஜெயிக்கறதெல்லாம் பெரிய விஷயமா?- டி.டி.வி. தினகரன் டவுட்!

இடைத்தேர்தலில் ஆளும்கட்சி ஜெயிக்கறதெல்லாம் பெரிய விஷயமா?- டி.டி.வி. தினகரன் டவுட்!

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளில், இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. தற்போது நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து சட்டசபையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இடைத்தேர்தலுக்கு முன் சட்டப்பேரவையில் ஆளும் அதிமுகவின் பலம் 122 ஆகவும், திமுகவின் பலம் 101 ஆகவும், காங்கிரஸ் கட்சியின் பலம் 8 ஆகவும் இருந்தது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 எம்எல்ஏவும், சென்னை – ஆர்.கே. நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி. தினகரன், சபாநாயகர் ஆகியோரும் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ராதாமணி உடல்நல குறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி இறந்தார். ராதாமணி மறைவைத் தொடர்ந்து திமுகவின் பலம் 100 ஆகவும், நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் பலம் 7 ஆகவும் குறைந்தது. காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. இதில், 2 தொகுதிகளையும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து அதிமுக கைப்பற்றி உள்ளது. இதனால் சட்டப்ரேவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 124 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமமுக ஒருபோதும் துரோகிகளுடன் இணையாது எனத் தெரிவித்தார். மேலும் “இடைத்தேர்தலில் ஆளும்கட்சி ஜெயிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இது ஒன்றும் பெரிய வெற்றி இல்லை. ஏனென்றால், 2006-2011 வரை நடைபெற்ற எல்லா இடைத்தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றது. அந்த ஆட்சிக் காலத்தில் கடைசியாக நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தல் வரை திமுக ஜெயித்தது. 2011-க்குப் பிறகு நிலைமை என்னவானது? நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் எல்லாவற்றையும் நன்றாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர்” என்று தினகரன் தெரிவித்தார்.

அப்போது, அதிமுகவுடன் அமமுக இணையுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அமமுக ஒருபோதும் துரோகிகளுடன் இணையாது” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!