32°C
விளம்பரம்
Advertisement

டிரம்பின் விசித்திர ராஜதந்திரம்!

admin சேலம் Published: May 16, 2025 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



ட்ரம்ப் பதவியேற்றதும், நீங்கள் அரசு முறைப் பயணமாக சவுதி அரேபியாவுக்குச் செல்வீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். என்னுடைய சென்ற ஆட்சிக்காலத்தில், நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல் ராணுவத் தளவாடங்கள் வாங்க அவர்கள் அமெரிக்காவிற்கு ஆர்டர் கொடுத்தார்கள். மீண்டும் அப்படி ஒரு ஆர்டரை அவர்கள் தருவார்கள் என்றால் அங்கு செல்வதில் எனக்கொன்றும் தயக்கம் இல்லை என்று சொன்னார் ட்ரம்ப். அவர் என்ன மோடியா சொல்லுங்கள், எதற்குப் போகிறோம் என்றே தெரியாமல் எல்லா நாடுகளுக்கும் ஓடிக்கொண்டிருப்பதற்கு. (இத்தகைய சிறிய நாடுகளுக்கெல்லாம் மோடி செல்லவே தேவையில்லை, இதெல்லாம் என்ன மாதிரி விசித்திர ராஜதந்திரம் என்று புரியவில்லை என சுப்ரமணியசாமி ஒருமுறை கமென்ட் அடித்தார்…)

இப்போது ட்ரம்பின் சவுதி அரேபிய விஜயம் நல்ல விதமாக முடிந்திருக்கிறது. மீண்டும் நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல் ஆயுதம் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. அப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு இல்லையென்றால் ட்ரம்ப் சவுதி அரேபிய மண்ணில் கால் வைத்திருக்கமாட்டார்.அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது, நம்மிடம் நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன. நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல் ஆர்டர் தருகிறார்கள், இந்த நேரத்தில் கஸோகி கொலையைப் பற்றி் பேசமுடியுமா என்று கேட்டவர் ட்ரம்ப்.

யார் அந்த ஜமால் கஸோகி?

ஒரு காலத்தில் சவுதி அரச குடும்பத்தோடு நெருக்கமாக இருந்து, பிறகு அவர்களைக் கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளர். அமெரிக்கக் குடியுரிமை பெற்று சவுதியை விட்டு வெளியேறியிருந்த அவரைத் தந்திரமாக துருக்கியில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்துக்கு வரவழைத்து தூதரகத்தின் உள்ளேயே வைத்து அவரைக் கொன்றது சவுதி அரேபியா. சவுதி இளவரசர் அந்தக் கொலையில் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டார். அத்தகைய சந்தர்ப்பத்தில் தான் அப்படிச் சொன்னார் ட்ரம்ப்.

சவுதியைத் தனிமைப் படுத்தவேண்டும், கஸோகியின் கொலைக்கு நியாயம் கேட்கவேண்டும் என்று கஸோகி கட்டுரை எழுதிய பத்திரிகை உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உலகளாவிய பிரச்சாரத்தை முன்னெடுத்தன. நூறு பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தம், அமெரிக்கப் பொருளாதார நலன் என்று அதைக் கடந்து போனவர் ட்ரம்ப். அதனால் இந்தியா பாகிஸ்தான் சண்டையையொட்டி அவரது கூற்றுக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

கார்ல் மார்க்ஸ் கணபதி

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்