‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – விமர்சனம்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’  – விமர்சனம்!

இலங்கைத் தமிழர் குறித்து ஏகப்பட்ட சினிமாக்கள் வந்துள்ளன. அவைகளில் பெரும்பாலும் அங்கு நடந்த போர் ,அதன் வலி, துயரம், சோகம் மட்டுமே மிகைப் படுத்தப்பட்டிருக்கும். அந்த பட்டியலில் சேரும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் அழுவாச்சி காவியமாக இல்லாமல் போரடிக்காத திரைக்கதைதான், ரசிகர்களை உணர்வுகளுக்குள் மூழ்க வைக்கும் சென்டிமெண்டோடு காமெடி என கலந்து அடித்து கவர முயன்றிருக்கிறார்தான். ஆனால் இலங்கை தமிழருக்கு தரும் முக்கியத்துவத்தை விட ‘கேணச் சிரிப்பழகன்’ சசிகுமாருக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அவரை எவ்வளவு தூக்கி வைத்து பேச முடியுமோ அவ்வளவு தூக்கி வைத்து பேசுவதற்காகவும், அவரை உயர்த்தி காட்டுவதற்காகவே பல காட்சிகளை அமைத்திருக்கிறார் டைரக்டர். ஒரு சீனில் குடிகார இளைஞன், சசிகுமாரை தெய்வம் என்று அழைப்பதெல்லாம் டூ மச்.மேலும் படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் செயற்கைத்தனமாக இருப்பதும், முத்தாய்ப்பாக வரும் காட்சிகள் விரும்பும்படி இருந்தாலும் நம்பும்படி இல்லாததாலும் ஆவ்ரேஜ் லிஸ்டில் இணைந்து விட்ட படமே இது. அதிலும் டீசர், டிரெய்லர் பார்த்து நிறைய எதிர்பார்த்து போனவர்கள் விரக்தி அடைய நேரிடும் என்பதும் உண்மை.

கதை என்னவென்றால் இலங்கைத் தமிழராக அதே மிக நல்லவரான சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் கள்ளத்தனமாக இலங்கையில் இருந்து தமிழகம் வருவதோடு,சட்டவிரோதமாக சென்னையில் குடியேறி வசிக்க தொடங்குகிறார்கள். இதற்கிடையே, சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரத்திற்கு வந்த அதே நாளில் அங்கு குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடக்க, இதற்கும் சசிகுமாரின் குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாக நம்பும் போலீஸ், அந்த குடும்பத்தை பிடித்து வழக்கை முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. இதை அடுத்து நடப்பது என்ன என்பதை டிவி சீரியல் பாணியில் சொல்லி இருப்பதே ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.

மெயின் ரோலில் வரும் அதே சசிகுமார், அதே .. அதே-வுடன் கொஞ்சம் அக்கறைக் காட்டி இருப்பது நிஜம். இதற்குக் காரணம் முன்னரே சொன்னது போல் இவரை ரொம்ம்ப்ப்ப நல்லவருன்னு சொல்ல உருவாக்கப்பட்ட சீன்களை புரிந்து களமாடி இருப்பதுதான். குடும்ப நாயகியாக வரும் சிம்ரம் அடடே சொல்ல வைத்து விடுகிறார், பல சென்டிமென்ட் காட்சிகளில் பக்குவப்பட்ட நடிப்போடு, ரொமான்ஸ், காமெடி, நடனம் போன்றவற்றாலும் பலம் சேர்த்திருக்கிறார் சிம்ரன்.

சசிகுமாரின் மூத்தமகனாக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர், இளைய மகனாக நடித்திருக்கும் கமலேஷ் ஆகிய இருவரும் பருவவயதினரின் மனநிலையையும் அப்பாவிச்சிறுவர்களின் எண்ணங்களையும் பிரதிபலித்திருக்கின்றனர்.குறிப்பாகமாட்டிக் கொள்ள வேண்டிய இடங்களில் எல்லாம் சட்டென்று புத்திசாலித்தனமான முடிவு எடுத்து, பார்க்கும் அத்தனை பேரையும் கொள்ளை கொள்கிறான். தன் பள்ளி ஆசிரியரைக் கூட விடாமல் ஓட்டும் கமலேஸை இனி அடிக்கடி வெள்ளித்திரைகளில் காண வாய்ப்புண்டு

யோகிபாபு என்னும் கோலிவுட் செட் பிராப்பர்ட்டி மூலம் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்‌ஷ்மி ஆகியோரும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. கேமராமேன் அரவிந்த விஷ்வநாதன் ஒளிப்பதிவு மேடை நாடகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், திரைக்கதையில் பலம் மிக்க அம்சங்கள் பெரிதாக இல்லை என்பதை உணர்ந்து காட்சிகளை சுருக்கி, படத்தின் நீளத்தை குறைத்திருப்பது படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

இலங்க்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய படங்கள் ஏற்கனவே நிறைய வந்திருக்கின்றன. அதிலிருந்து இது வித்தியாசமான கதை அமைப்பு என்னவென் றால் போருக்கு பின்னால் நடந்த பொருளாதார சீரழிவால் அங்கு விலைவாசி ஏறியதால் தவிக்கும் தமிழர் குடும்பம் ஒன்று தமிழகத்திற்கு வருவது தான் புதிது.தீவிரமான கதையோ, காட்சிகளோ எங்குமே இல்லை.. லாஜிக்கும் இல்லை. ஆனால் போரடிக்கவும் இல்லை. ஒரு டிபிகல் மெலோடிராமா படம். அந்த கால கோபாலகிருஷ்ணன் வி.சேகர்,விசு ஸ்டைல் பாணி சினிமாதான் இதுவும், ஆனால் அதில் முழுமையாக ஒரு உயிர் இருக்கும். இதில் அது மிஸ்ஸிங்.

மொத்தத்தில் சின்னத்திரையில் ஜொலிக்கலாம்

மார்க் 2.25/5

Related Posts

error: Content is protected !!