119 மொழிகள் தெரிந்த குவென்!

119 மொழிகள் தெரிந்த குவென்!

டீப்சீக் கிளப்பிய புயலே இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் சீனாவிலிருந்து மற்றும் ஓர் ஏஐ அறிவிப்பு வந்துள்ளது. இம்முறை அலிபாபா குகையிலிருந்து. அவர்களிடம் குவென் (Qwen) என்றொரு எல்.எல்.எம் உள்ளது. நேற்று Qwen 3.0 மாடலை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அது தான் டெய்லி ஒரு ஏஐ மாடல் வருதே…? என்றால் இது அப்படிக் கிடையாது.

வொய்?

இந்த மூன்றாம் குவென் ஓர் ஓப்பன் சோர்ஸ் மாடல். சொல்லப்போனால் இது ஒரே ஒரு மாடல் இல்லை. இதற்குள் ஒரு கூட்டுக்குடும்பமே ஆனந்தமாய் வாழ்கிறது.எல்.எல்.எம்கள் யானைகளைப் போல. வாங்கிவந்து வீட்டுத் தொழுவத்தில் கட்டிவைக்க முடியாது. அவற்றிற்குத் தீனி போட வேண்டும். பெருந்தீனி. எல்.எல்.எம்களின் தீனி ப்ராசஸிங் பவர்.

இப்போது வந்திருக்கும் குவென் ஒரு யானைக்குடும்பம். சின்ன வேலை என்றால் குட்டி யானையை வைத்தே முடித்துக்கொள்ளலாம். வேலை பெரிதென்றால் என்றால் மட்டும் பெரிய யானை. குவென் குடும்பத்தின் பெரிய மாடல் 235 பில்லியன் பாராமீட்டர்களைக் கொண்டது. இதுபோகப் பல்வேறு சைஸ்களில் மாடல்கள் வரிசை கட்டுகின்றன. பாராமீட்டர்லாம் புரியலியே…? என்றாலும் பரவாயில்லை. நம் தேவைக்கேற்ப மாடலை செலக்ட் செய்து கொள்ளலாம் என்று புரிந்தால் போதும்.

குவென் மூன்று மாடலுக்கு 119 மொழிகள் தெரியும் என்கிறார்கள். அதாவது அதன் டேட்டா செட்டில் இத்தனை மொழிகளும் உள்ளனவாம். பொதுவாக எல்.எல்.எம்களை இண்டெர்நெட்டில் இருக்கும் வலைப்பக்கங்களை வைத்து ட்ரெய்ன் செய்வாரகள். குவென்னிடம் எண்ணிலடங்கா பி.டி.எப் பைல்களையும் கொடுத்துள்ளதாம் அலிபாபா. ஒரு வேளை அந்த ஃப்ரீ புக் டெலிக்ராம் சேனலில் எடுத்திருப்பார்களா? இந்த மாடல்கள் இரண்டு விதமாகச் செயல்படுகின்றன. ஒன்று ஆழமாகச் சிந்திந்துச் செயல்படுவது. இன்னொன்று வேகமாக ஓடுவது.

நமது தேவைக்கேற்ப இவற்றை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

குவென் ஸ்பெஷல் என்று சொல்வதற்கு இன்னும் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. எல்.எல்.எம்களின் திறமையைச் சோதிக்கச் சில தேர்வுகள் இருக்கின்றன. இத்தேர்வுகளில் இப்போதிருக்கும் பல மாடல்களைவிட குவென் சிறப்பாகச் செயல்படுகிறது. பல ப்ரோ மாடல்களைவிட இவர்களின் ஓப்பன் வெர்ஷன் சிறப்பானதாக இருக்கிறது.

ஒரு சராசரி யூஸராக நாம் என்னவெல்லாம் செய்யலாம்?

– ப்ராம்ப்ட் கொடுத்துத் தகவல் திரட்டலாம்.
– படம் வரையலாம்
– ப்ரோக்ராம்கள் எழுதமுடியும்.
– வீடியோக்களை உருவாக்கலாம்.

ஏஐ ஆய்வாளர்கள் இந்த மாடல்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம். ப்ரோக்ராம்களிலும் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.குவென் இலவசமாகவே கிடைக்கிறது. அலிபாபா குகை உங்கள் மந்திரத்திற்குத் திறக்கிறதா என்று பாருங்கள்

குப்புசாமி

error: Content is protected !!