எனக்குத் தந்த 5 தேசிய விருதுகளையும் ஒப்படைக்க விரும்புகிறேன்! – பிரகாஷ் ராஜ் அப்செட்!

எனக்குத் தந்த 5 தேசிய விருதுகளையும் ஒப்படைக்க விரும்புகிறேன்! – பிரகாஷ் ராஜ் அப்செட்!

கடந்த மாதம் 5-ம் தேதி பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தனது பத்திரிகையில் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதி வந்தார். ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு அவரது குடும்ப நண்பரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தார். கவுரி லங்கேஷ், மரணத்தால் சத்தம் அதிகமாகி இருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் மிரட்டலால் இந்த சத்தத்தை நிறுத்த முடியாது என்று கூறி இருந்தார். இந்த நிலையில் கவுரி படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடுவதை சிலர் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர்களைத்தான் வலைத்தளங்களில் மோடியை மட்டுமே பின்பற்றுகிறவர்கள் என பிரகாஷ்ராஜ் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளார்.

பிரகாஷ்ராஜ் இது குறித்து பேசியதாவது:

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள்? அவர்களது சித்தாந்தம் என்ன? என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கொலையைக் கொண்டாடுவது மிகவும் கொடூரமானது. இவ்வாறு கொண்டாடுகிறவர்கள் சமூக வலைத் தளங்களில் பிரதமர் மோடியை தவிர வேறு யாரையும் பின்பற்றாதவர்கள். கவுரி லங்கேஷ் மரணத்தைக் கொண்டாடுகிறவர்கள் மீது மோடி நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் என்னை விட மிகப்பெரிய நடிகராக முயற்சித்து வருகிறார் என்பதை நிரூபித்து உள்ளார்.

பிரதமர் இந்த வி‌ஷயத்தில் மவுனமாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. தனது ஆதரவாளர்களில் சிலர் கொடூரமாக நடப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் அவரது மெளனம் அமைந்துள்ளது. இதைப் பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. மோடியின் மெளனம் எனக்கு பெரிதும் ஏமாற்றத்தைத் தருகிறது.

மோடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட உ.பி. மாநிலத்தின் முதல்வராக உள்ள ஆதித்யாநாத் வெளியிடும் அறிக்கைகளைப் பார்த்தால், அவர் முதலமைச்சராக இருக்கிறாரா அல்லது ஒரு துறவியாக இருக்கிறாரா எனத் தெரியவில்லை. அவர் என்னைவிட மிக நன்றாக நடிக்கிறார். இந்த அரசு எனக்குத் தந்த 5 தேசிய விருதுகளையும் யோகி ஆதித்யாநாத்தின் காலடியில் ஒப்படைக்க விரும்புகிறேன். அவை எனக்கு வேண்டாம். உண்மையில் தகுதியானவர் உ.பி. மாநில முதல்வர் ஆதித்யாநாத் தான் இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

பெங்களூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பின் 11வது மாநில மாநாட்டில் பேசும் பொழுது இந்தக் கருத்தை பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

error: Content is protected !!