June 2, 2023

உ.பி. மாநில சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்!

சர்வதேச அளவில் புகழ் பெற்ற தாஜ்மஹால் தற்போது சுற்றுலாத் தலப் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உத்திரப்பிரதேச அரசு வெளியிட்ட முக்கிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் தாஜ்மஹால் இடம் பெற வில்லை. உத்திரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முகலாயப் பேரரசர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியது தான் தாஜ்மஹால். எனவேதான் சுற்றுலா மைங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கிவிட்டு, புதுப்பட்டியலை மாநில அரசு வெளியிட்டுள்ளது. உத்திரப்பிரதேச அரசின் புதிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்திற்கு நான்காவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து குவியும் இடமான தாஜ்மஹாலை, சுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து மாநில பாரதிய ஜனதா அரசு நீக்கியுள்ளது நாடு முழுவதுமுள்ள மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த தாஜ் மஹால் குறித்த சுவாரஷ்யமான தகவல்கள் இதோ:

இக் கட்டிடம் 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கட்டிடக்கலை:

தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக் கல்லாலான கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றி வடிவமானது.

இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு மினார்கள் அமைந்துள்ளன.

இக் கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது. வெங்காய வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர உருளை வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியில் தாமரை வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும் இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. இக் கலசம் 1800 ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இப் பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை. வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் கூரை திறந்து உள்ளதால் அவற்றினூடாக கட்டிடத்தின் உட்பகுதிக்கு சூரிய ஒளி செல்லக்கூடியதாக உள்ளது. கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன.

அடித்தளத்தின் மூலைகளில் கட்டப்பட்டுள்ள மினார்கள் எனப்படும் கோபுர அமைப்புக்கள் 400 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கின்றன. கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் உருளை வடிவ அமைப்பைக் கொண்ட இவை ஒவ்வொன்றையும் சுற்றி, இடையில் அமைக்கப்பட்டுள்ள உப்பரிகைகள் அவற்றை மூன்று சம அளவான பகுதிகளாகப் பிரிக்கின்றன. இவற்றின் உச்சியிலும் ஒரு உப்பரிகையும் அவற்றின் மேல் குவிமாடங்களுடன் கூடிய கூடுபோன்ற அமைப்புக்களும் காணப்படுகின்றன. இக் குவிமாடங்கள், முதன்மைக் கட்டிடத்திலுள்ள குவிமாடங்களின் அதே வடிவில் சிறிய அளவுள்ளவையாகவும் அங்குள்ளதைப் போன்றே தாமரை வடிவ அலங்காரம், கலசம் ஆகியவற்றைக் கொண்டனவாகவும் உள்ளன

வெளிப்புற அழகூட்டல்:

தாஜ்மகாலின் வெளிப்புற அழகூட்டல், பிற கட்டிடங்களோடு ஒப்பிடும் போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக் கட்டிடத்தின் வெளிப்புற அழகூட்டல், நிறப்பூச்சு, சாந்துப்பூச்சு அல்லது கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது. அழகூட்டல்களில், வனப்பெழுத்துக்களும், செடி கொடி வடிவங்களும் பயன்பட்டுள்ளன. இவ் வனப்பெழுத்துக்கள் சலவைக்கல்லில், சூரியகாந்தக்கற்கள் பதித்து உருவாக்கப்பட்டவை.
உட்புற அழகூட்டல்:

தாஜ்மகாலின் உட்புறக் கூடம் மரபுவழியான அழகூட்டல்களையும் தாண்டிச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்கூடம் எண்கோண வடிவானது. இதன் எல்லாப் பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன எனினும் தெற்குப் பக்கப் பூங்காவை நோக்கியுள்ள கதவு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. உட்புறச் சுவர்கள் சுமார் 25 மீட்டர் உயரம் கொண்டவை. இவற்றின் மேல் சூரிய உருவினால் அழகூட்டப்பட்ட “போலி”க் குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்கா:

தாஜ்மகால் கட்டிடத் தொகுதி, 300 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுகைகளாகப் பிரிக்கின்றன. கட்டிடத்துக்கும் தொகுதியின் நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியின் நடுவில் ஒரு குளம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு அச்சில் நின்று பார்க்கும்போது கட்டிடத்தின் விம்பம் இக் குளத்தில் தெரியுமாறு அமைந்துள்ளது. பூங்காவின் பிற இடங்களில் மர வரிசைகளுடன் கூடிய பாதைகளும், செயற்கை நீரூற்றுக்களும் காணப்படுகின்றன. இது நான்கு ஆறுகள் பாயும் சுவர்க்கத்திலுள்ள பூங்காவுக்கான ஒரு குறியீட்டு வடிவமாகும்.

வெளிக் கட்டிடங்கள்

தாஜ்மகால் தொகுதி மூன்று பக்கங்களில் செந்நிற மணற்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. யாமுனை ஆற்றை நோக்கியுள்ள பக்கத்தில் சுவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.