500 ரூபாயை புழக்கத்தில் விட இன்றே கடைசி!
கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுக்க பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரையிலான காலக்கெடுவுக்குள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள், அரசு சேவைகள் என சில அத்தியாவசியத் தேவைகளுக்கான கட்டணங்களுக்காக பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு வங்கிகளில் இதுவரை ரூ.12.44 லட்சம் கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.காந்தி, மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களால் வங்கிகளில் கடந்த 10-ஆம் தேதி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.12.44 லட்சம் கோடியாகும். கடந்த மாதம் (நவம்பர்) 10-ஆம் தேதி முதல் இம்மாதம் (டிசம்பர்) 10-ஆம் தேதி வரை வங்கிகள் தங்களின் கிளைகள் மூலமும் ஏடிஎம் மையங்கள் மூலமும் மக்களுக்கு வழங்கிய பணத்தின் மதிப்பு ரூ.4.61 லட்சம் கோடியாகும்.அவ்வாறு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2,180 கோடி. அவற்றில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 ஆகிய நோட்டுகளின் எண்ணிக்கை 2,010 கோடியாகும். மேலும், மக்களுக்கு வழங்கப்பட்ட பணத்தில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 170 கோடி.
மக்களின் கைகளில் பணப் புழக்கம் இருப்பதை ஊக்குவிப்பதற்காக ஒட்டுமொத்த அமைப்புகளும் தொடர்ச்சியாகப் பாடுபட்டு வருகின்றன. நாள்தோறும் புதிய நோட்டுகள் வெளியிடுவதையும், அச்சிடுவதையும் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையாகும். மக்கள் தங்கள் கரங்களில் இருக்கும் ரூபாய் நோட்டுகளைப் பதுக்காமல் அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார் அவர்.
இந்நிலையில், தற்போது காஸ் சிலிண்டர், அரசு வரி கட்டுதல், சுங்கச் சாவடிகளில் 500 ரூபாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ளபடி மேற்கூறிய இடங்களிலும் பழைய 500 ரூபாய் ஏற்புக்கான காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


