பாரதீய ஜனதா கட்சி என்று இன்று அழைக்கப்படும் பாஜகவின் பர்த் டே டுடே!

பாரதீய ஜனதா கட்சி என்று இன்று அழைக்கப்படும் பாஜகவின் பர்த் டே டுடே!

பாரதீய ஜனதா கட்சி ஆகிய பாஜக இன்று நாடு முழுக்க வலிமையான அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது. அதிகமான மாநிலங்களில் ஆட்சி நடத்தும் கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஆனால் இன்றைய பாஜகவுக்கான விதை சுதந்திரத்துக்கு முன்பே விதைக்கப்பட்டு விட்டது. இதற்கு சுதந்திரப் போராட்ட வரலாற்றை தேடி அறிய வேண்டும்.சுதந்திரத்துக்கு முன்பு இந்திய அரசியலை உலுக்கிய இந்து – முஸ்லிம் என்ற அணி திரட்டல் மிக முக்கியமானது. முகமது அலி ஜின்னாவின் முஸ்லிம் லீக் ஏற்படுத்திய தாக்கங்களும் அதற்கு எதிர் அரசியலும் விடுதலை இயக்கத்திலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தின. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த சம்பவங்கள் மதவாத அரசியலை வேகமாக நகர்த்தின. முஸ்லிம் லீக்கின் அரசியலை எதிர்கொள்ளும் அமைப்பாக இந்து மகாசபா இருந்து வந்தது. நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்து மகாசபா செல்வாக்கை இழந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தனது இந்துத்துவக் கொள்கையை, அரசியல் தளத்தில் எடுத்துச் செல்ல தனியான அரசியல் கட்சி தேவை என எண்ணியது.

காங்கிரஸில் தீவிர வலதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்டவர் சியாம் பிரசாத் முகர்ஜி. சுதந்திரத்துக்குப் பிறகு நேருவின் இடைக்கால அரசில் அமைச்சராக இருந்த அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாரதிய ஜனசங்கத்தைத் தொடங்கினார். புதிய இந்துத்துவ அரசியல் கட்சியான பாரதிய ஜனசங்கத்துக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை அளித்து முழு ஒத்துழைப்பு அளித்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த நிர்வாகியாக இருந்த தீனதயாள் உபாத்யாயா பாரதிய ஜனசங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட அப்போதைய இளம் தலைவர்களான அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி போன்றோரும் ஜனசங்கத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்று கட்சியை வழி நடத்தினர்.

இதன் பின்னர் 1952 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பாரதிய ஜனசங்கம் 3 இடங்களில் வென்றது. அதன் பிறகு 1967-ம் ஆண்டு வரை ஜனசங்கம் பெரிய அளவில் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் கட்சியின் ஆதரவு தளத்தை விரிவடையச் செய்வதில் அதன் தலைவர்கள் கவனம் செலுத்தினர். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கோரி ஜனசங்கம் தொடர்ச்சியாக நடத்திய போரட்டம் அக்கட்சியின் செயல்பாடுகளை ஊக்குவித்தது.

சியாம் பிரசாத் முகர்ஜியின் மரணத்துக்குப் பிறகு தீனதயாள் உபாத்யாயா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனைத் தவிர இந்தக் காலகட்டத்தில், இந்துத்துவ அடையாளத்துக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் பாரம்பரியம் சார்ந்த கொள்கையை சுவீகரித்து அரசியல், சமூக, பொருளாதார சித்தாந்தங்களை அதன் தலைவர்கள் உருவாக்கினர்.குறிப்பாக தீனதயாள் உபாத்யாவின் ஏகாத்ம மானவவாதம் எனப்படும் ஒன்றுபட்ட மனிதநேயம் என்ற கோட்பாடு இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதுவே தங்கள் தனித்துவ சித்தாந்தம் என இன்றைய பாஜக தலைவர்களும் பெருமையுடன் கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து 1962 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 14 இடங்கள் வெற்றி பெற்ற பாரதிய ஜனசங்கம், 1967 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது 35 இடங்களில் வென்றது.அதே சமயம் நேருவின் மரணத்துக்குப் பிறகு 1967-ம் ஆண்டில் இந்திய அரசியல் புதிய பாதைகளை நோக்கிப் பயணப்பட்டது. குறிப்பாக காங்கிரஸில் இருந்த சோசலிஸ்ட் கொள்கை கொண்ட தலைவர்கள் புதிய அரசியல் அமைப்புகளை வலிமையாக்கி வந்தனர். இந்திரா காந்தியின் அரசியலை எதிர்த்த மொராஜ் தேசாய், சரண் சிங் போன்றவர்கள் காங்கிரஸுக்கு எதிராக மற்ற கட்சிகளை அணி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டனர். வட மற்றும் மத்திய இந்தியாவில் வலிமையான தளத்தைக் கொண்டிருந்த ஜனசங்கமும், அந்தத் தலைவர்களுடன் கைகோத்து அரசியல் செய்தது. 1971 இல் நடந்த பொதுத்தேர்தலில் 22 இடங்கள் வென்றது பாரதிய ஜன சங்கம். இந்தத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

1975இல் அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டு இந்தியா முழுக்க தணிக்கைகள், தலைவர்கள் கைது என அடுத்த இரு ஆண்டுகளுக்கு இந்தியா கடினமான நாள்களைக் கடந்ததாக எமர்ஜென்ஸி அண்ட் இண்டியன் டெமாக்ரசி’ என்ற தனது புத்தகத்தில் பி.என். தர் குறிப்பிடுகிறார். இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை இந்திய அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கியது. இடதுசாரி சிந்தனை கொண்ட சோசலிஸ்டுகளையும், தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட ஜனசங்கத்தினரையும் ஓரணியில் கொண்டு வந்தது. நெருக்கடி நிலையை எதிர்த்து ஜெய பிரகாஷ் நாராயண் நடத்திய மக்கள் இயக்கத்தில் ஜனசங்கத் தலைவர்களும் தங்களை இணைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். சிறையில் சென்ற ஜனசங்கத் தலைவர்களுக்கு அங்கு சோசலிஸ்ட் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் சூழல் உருவாகியது. இதன் மூலம் இந்திய அரசியலில் யாருடனும் தொடர்பு இல்லாமல் தனிப்பாதையில் சென்று கொண்டிருந்த ஜனசங்கத்துக்கு பொது அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்திராவுக்கு எதிராக உருவான மக்கள் இயக்கம் புதிய அரசியல் சக்தியாக ஜனதா கட்சியாக உருவெடுத்தது. இதில் ஜனசங்கமும் ஐக்கியமானது.

அந்த எமெர்ஜென்சிக்கு பிறகு, 1977 இல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டபோது, பாரதிய ஜனசங்கமும் ஜனதா கட்சியும் இணைந்து, ஸ்தாபன காங்கிரஸ், சோசலிசக் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தன. இதில், காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு அமைந்தது. மொரார்ஜி தேசாய் இந்தக் கூட்டணி அரசின் பிரதமராக பொறுப்பேற்றார். இப்படியாக ஆட்சி அதிகாரத்தில் மெல்லக் கால் வைத்தது பாரதிய ஜனசங்கம்.

இந்த நிலையில், இந்துத்துவ சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, கட்சியில் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலோ, அமைப்பில் இருப்பவர்கள் கட்சியிலோ உறுப்பினராக இருக்கக்கூடாது. இந்த இரட்டை உறுப்பினர் முறைக்கு எதிராக வந்த அறிவிப்பை முன்னிட்டு பலர் ஜனசங்கத்தை விட்டு வெளியேறினர். ஜனதா கட்சி உடைந்தது.

இந்த நிலையில், புதியதாக ஒரு அமைப்பு தேவைப்பட, ஏப்ரல் 6ஆம் தேதி 1980ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவித்து, நிறுவன தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார் அடல் பிகாரி வாஜ்பேயி. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் வென்று இந்திய பிரதமரானார் இந்திரா காந்தி. அடுத்த நிகழ்வு 1984 இல் நடந்தது. அக்டோபர் 31 ஆம் தேதி, சுட்டுக்கொல்லப்பட்டார் இந்திரா காந்தி. இதையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவெற்றி பெற்று ராஜிவ் காந்தி பிரதமரானார். இந்ததேர்தலில் போட்டியிட்ட பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.அடுத்த நடந்த 1989 பொதுத்தேர்தலில் பாஜக, சித்தாந்தங்களுக்கு நடவடிக்கை வடிவிலான உருவம் கொடுக்கத் தொடங்கியது. குறிப்பாக, அயோத்தி ராமஜென்ம பூமி விவாகரத்தை தீவிரமாகக் கையிலெடுத்தது. அந்த சமயம், ஜனதா தளத்துக்கு ஆதரவு அளித்து பிரதமராக வி.பி.சிங் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

1990 ஆம் ஆண்டு தனது முதல் ரத யாத்திரை பயணத்தை தொடங்கியது பாஜக. சோம்நாத்திலிருந்து அயோத்தி வரையிலான இந்த ரதயாத்திரை ஒருவழியாக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு அடுத்த ரதயாத்திரைக்கு திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், அதிலிருந்துதான் இந்திய அரசியலின் நெடுங்கால விவகாரம் ஒன்று தொடங்கப்போகிறது என்பது அப்போது பலருக்கும் தெரியாது. இதற்கிடையில், 1991 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆட்சியமைத்தது காங்கிரஸ் கூட்டணி. ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு நடந்த இந்தத்தேர்தலில், நரசிம்மராவ் பிரதமரானார்.

1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதி. விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி) ஆர்வலர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் சில தலைவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் (கர சேவகர்கள்) கலந்து கொண்டனர். பேரணி பின்னர் வன்முறையாக மாறியது. கும்பல் அந்த பகுதியின் பாதுகாப்பை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, பாபர் மசூதியை இடித்தது.ராம ஜென்ம பூமி பின்நாட்களில் வடஇந்திய அரசியலில் வாக்குறுதிகளாகவும் தேர்தல் அறிக்கைகளாகவும் கூட மாறியது.

இதை அடுத்து நடந்த 1996 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சுமார் 187 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக. மற்றெந்த கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால், பிரதமராக பொறுப்பேற்று பின் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ்ந்தது.பின்னர் 1998 தேர்தலில் 2004 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது பாஜக. மீண்டும் 2014இல் நடந்த பொதுத்தேர்தலில் வென்று பாஜக சார்பில் இந்திய பிரதமரானார் நரேந்திரமோடி.5 ஆண்டுகால ஆட்சியில் அடுத்தடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற பாஜக, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கோஷத்தை முன் வைத்தது. இருப்பினும் மோடி அரசின் செயல்பாடுகள், அரசு மீதான மக்களின் அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு போன்றவை வரும் மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசு சந்திக்கும் பெரும் சவாலாக உள்ளது. அதேசமயம் வசீகரமான தலைமை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை போன்றவை பாஜகவுக்குச் சாதகமாக உள்ளது.

எது எப்படியாகிலும், வெறும் இந்துத்துவ அரசியல் மட்டுமின்றி வளர்ச்சி அரசியல் தேவை என்ற 2014-ம் ஆண்டு பாஜக கருதியது. ஆனால் வளர்ச்சி அரசியல் மட்டும் போதாது, கூட்டணி அரசியலும் தேவை என்ற கட்டாயத்துடன் 2019-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்ட பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

இப்படித்தான் 3 தொகுதிகளில் தொடங்கி 303 தொகுதிகளில் வெற்றி என்ற நிலையை எட்டி மூன்றாம் முறை ஆட்சியைப் பிடிக்க பாடுபடும் பாரதிய ஜனதா கட்சி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!