தமிழ் குரல் / AI Voice
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி, இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் புகழ்பெற்ற ஹாக்கி வீரர், மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளே இவ்வாறு தேசிய விளையாட்டு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடம் (2025), தேசிய விளையாட்டு தினம் மூன்று நாள் கொண்டாட்டமாக ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை நடத்தப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களை ‘ஃபிட் இந்தியா மிஷன்’ வழிநடத்துகிறது. இந்த வருடத்தின் (2025) தேசிய விளையாட்டு தினக் கருப்பொருள் (Theme) “விளையாட்டு அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்களை ஊக்குவிக்கிறது” என்பதாகும். இது விளையாட்டு எவ்வாறு சமூகப் பிளவுகளை நீக்கி, மக்களை ஒன்று சேர்க்கும் ஆற்றல் கொண்டது என்பதை வலியுறுத்துகிறது. மேலும், “ஏக் கண்டா, கேல் கே மைதான் மே” (Ek Ghanta, Khel ke Maidan Main) என்ற பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட்டிலும், உடல் உழைப்பிலும் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
விளையாட்டின் முக்கியத்துவம்
மக்களிடையே விளையாட்டின் ஆரோக்கியமான பலன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்களை கௌரவிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. விளையாட்டு என்பது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையும் வலிமையையும் தருவதுடன், அணியாக இணைந்து செயல்படும் உணர்வையும், விடாமுயற்சியையும், ஒழுக்கத்தையும் வளர்க்கிறது.இந்த சிறப்பு நாளில், விளையாட்டுத்துறையில் சிறப்பாகப் பங்களித்த வீரர்களுக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (தற்போது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என பெயர் மாற்றப்பட்டுள்ளது), அர்ஜுனா விருது, துரோணாச்சாரியார் விருது, தயான் சந்த் விருது ஆகியவை குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள், விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதுடன், வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகத்தையும் அளிக்கின்றன.

ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த்
மேஜர் தயான் சந்த் ஒரு சிறந்த ஹாக்கி வீரர் மட்டுமல்ல, விளையாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், மற்றும் திறமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். அவர் இந்திய ஹாக்கி அணிக்கு 1928, 1932, மற்றும் 1936 ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் தொடர்ச்சியாகத் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்தார். அவரது ஆட்டத்திறனைக் கண்டு வியந்த பலர் அவரை ‘ஹாக்கி சூனியக்காரர்’ (The Wizard of Hockey) என்று அழைத்தனர்.
அவர் கோல் அடிக்கும் வேகத்தையும், திறமையையும் பார்த்த உலகின் பல்வேறு விளையாட்டு வீரர்களும், தலைவர்களும் அவரைப் புகழ்ந்துள்ளனர். உதாரணமாக, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன், “கிரிக்கெட்டில் ரன்களைக் குவிக்கும் வேகத்தில் தயான் சந்த் கோல்களை அடித்து வருகிறார்” என்று பாராட்டினார். 1936-ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் அவரது அபாரமான ஆட்டத்தைப் பார்த்து வியந்த ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர், தயான் சந்தை ஜெர்மனிக்கு வருமாறு அழைப்பு விடுத்து, அந்நாட்டு குடியுரிமையையும், ராணுவத்தில் உயரிய பதவியையும் தருவதாக உறுதியளித்தார். ஆனால், தயான் சந்த் அந்த வாய்ப்பை மறுத்து, தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினார்.
ஒருமுறை, தயான் சந்த் மிக அதிக கோல்களை அடித்ததால், நெதர்லாந்து ஹாக்கி அணியினர் அவரது ஹாக்கி மட்டையில் ஏதேனும் காந்தம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த சம்பவமும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அவரது திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
தேசிய விளையாட்டு தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களின் தியாகங்களையும், சாதனைகளையும் நினைவு கூர்ந்து, நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்களைப் பாராட்டும் ஒரு நாளாகும்.
தனுஜா
