‘ஸ்கெட்ச்’ படத்துலே என்ன ஸ்பெஷல்?-இயக்குநர் பேட்டி!
கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “. இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே. சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவி கிஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடித்துள்ளார்கள். கலை-மாயபாண்டி, இசை -எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு- சுகுமார், எடிட்டிங்-ரூபன், நடனம்-ஷோபி, பிருந்தா, ஸ்டண்ட் -ரவி வர்மன், தயாரிப்பு-மூவிங் பிரேம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- விஜய்சந்தர்.
கொஞ்சம் ஹிட் அடித்த ‘வாலு’ படத்தையடுத்து விஜய் சந்தர் இயக்கும் படமிது. அவரிடம் ஸ்கெட்ச் போட்ட பின்னணி குறித்து பேச்சு கொடுத்த போது , “நான் அதிர்ஷ்டசாலிங்க. விக்ரம் எவ்வளவோ பெரிய பெரிய டைரக்டர்களோட ஒர்க் பண்ணினவர் அவர். ரெண்டாவ்து படம் எனக்கு தோள் கொடுத்து சாதிக்க வைச்சிட்டார். .இயக்குநருக்கான நடிகருங்க அவர். இந்த படம் ஆரம்பிச்ச நாளில் இருந்தே வடசென்னை கதைகள் நிறைய வந்திருக்கு. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்?-ன்னு ஆளாளுக்கு பேசறாங்க.. இது ஸ்பெஷல்தான்.. வடசென்னையில் வசிக்கும் மக்கள்னாலே அங்கே விளிம்புநிலையில் உள்ளவங்களே அதிகம், அங்கே இருக்கறவங்க எல்லாருமே கஷ்டப்படு றாங்கனு நினைச்சிட்டிருக்கோம். அவங்க அப்படி இருந்த காலமெல்லாம் மலையேறி போச்சு. பொருளாதாரத்தில் இருந்து லைஃப் ஸ்டைல் வரை எல்லாமே இம்ப்ரூவ் ஆகி போச்சுங்க. இப்போது அந்த ஏரியா மக்களை, சூழலின் ஒரு பகுதியை அப்படியே பதிவு பண்ணியிருக்கேன். உண்மையிலேயே இந்தக் கதைக்காக பல வருஷம் உழைச்சிருக்கேன். இதே வடசென்னை மக்களோடு மக்களா பழகி, அவங்களோடவே வாழ்ந்து இந்தக் கதையை ரெடி பண்ணினேன். அப்பாலே விக்ரம் சார்கிட்டே சொன்ன இந்தக் கதை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. நல்ல கேரக்டர்களை தேடிப்பிடிச்சு பண்றவர் அவர். அவரே இம்ப்ரஸ் ஆனதும் அடுத்தடுத்த வேலைகளை உடனே ஆரம்பிச்சிட்டோம்.
அதுனாலேயே வடசென்னையில சில இடங்கள்ல கேரவன் கூட போக முடியாத குறுகலான தெருக்கள்ல ஷூட் பண்ணியிருக்கோம். விக்ரம் சார், கேரவன் கூட போகாமல் மானிட்டர் பக்கத்துலேயே இருந்து நடிச்சுக் கொடுத்தார். எப்பவும் என்னை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். அவரோட ஸ்பீடு, எனர்ஜியாலதான் ஒரே மூச்சுல ஷூட் முடிச்சிட்டோம். படத்துல ரெண்டு பாடல்கள் எழுதியிருக்கேன். அதாவது விக்ரம் சார்தான் என்னை எழுத வச்சிருக்கார். இதுல ‘கனவே கனவே…’ பாடலை விக்ரம் சாரே பாடியிருக்கார்.
இன்னொரு விஷயம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்- விக்ரம் சார் போட்டோகிராஃபில எக்ஸ்பர்ட்- இல்லையா. அவரை நான் ஸ்டில்ஸ் மன்னன்னு கூட சொல்லுவேன். ஷூட்டிங் பிரேக்ல கேமராவும் கையுமா கண்ணுல தென்படுற அழகழகான விஷயங்களை ஷூட் பண்ணிட்டே இருப்பார். புரொஃபஷனல் போட்டோஷூட் மாதிரி அவ்வளவு பிரமாதமா இருக்கும். என்னைக் கூட அழகாக ஒரு படம் எடுத்துக் கொடுத்திருக்கார்.
இந்த ஸ்கெட்ச்-சில் நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரம் சாரோட ஸ்ரீமன் நடிச்சிருக்கார். இதுல விக்ரம் சாரோட முதல் முறையா சூரி சேர்ந்திருக்கார். அவருக்கு ஜோடியா தமன்னா நடிக்கறாங்க. இந்தக் கதையை கேட்ட முதல் நாள்ல இருந்தே தமன்னா, கேரக்டராகவே மாறிட்டாங்க. வடசென்னையில் நான் நிஜமாகவே பார்த்து ரசித்த ஒரு கேரக்டரை அப்படியே இதுல பிரதிபலிக்கிறாங்க. ‘நான் ஒவ்வொரு நாளும் ரசிச்சு பண்ணின படம் ‘ஸ்கெட்ச்’’னு ட்விட்டர்ல கூட அவங்க மனசு விட்டு சொல்லியிருந்தாங்க. அவ்வளவு இம்ப்ரஸ் ஆனதாலோ என்னவோ எத்தனை டேக் போனாலும், முகம் சுளிக்காம நடிச்சுக் கொடுத்தாங்க.
இதுல அவங்க காலேஜ் பொண்ணா ஹோம்லியிலேயும் அசத்தியிருக்காங்க. அவங்க விக்ரமோட வர்ற ரொமான்ஸ் சீன்ஸ் ரொம்பவே கலர்ஃபுல்லா வந்திருக்கு. தாணு சாரோட சகோதரர்கள் மகன்கள் பார்த்திபன், தினா -தான் இந்த படத்தை தயாரிச்சாங்க. அவங்களை புரொட்யூசர்ஸ்னு சொல்றதை விட நண்பர்கள்னு சொல்றதுதான் சரியா இருக்கும். தாணு சார் இந்தப் படத்தை வெளியிடறார். இந்த ‘ஸ்கெட்ச்’ உங்கள் ஒவ்வொருத்தரையும் கவரும் விதத்தில் ஸ்கெட்ச் போட்டு ரெடி பண்ணி இருக்கோம்” என்றார்.
ம்.. பார்த்துடலாம்.