மஹா ஜனங்களே..தொற்று குறைந்து உள்ளது- ஆனால் ஒழியவில்லை!- சுகாதாரத் துறை

மஹா ஜனங்களே..தொற்று குறைந்து உள்ளது- ஆனால் ஒழியவில்லை!- சுகாதாரத் துறை

மிழகத்தில் 48 லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றும், வடமாநிலங்களில் தொற்று அதிகரிப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கொரோனா தொற்று தற்போது தமிழகத்தில் குறைந்துள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக ஒருவர் கூட கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் தற்போது 20 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 98.7 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் பூஜ்ஜியமான பிறகு, பொதுமக்கள் பலர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அந்தவகையில் தற்போது வரை 48 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அதேபோல, 1.37 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை.

30 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், வட மாநிலங்களில் சில இடங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. டெல்லியில் நாள் ஒன்றுக்கு 300 என கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் 2.7 சதவீதம் என அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.

மேலும், முககவசம் அணிவது, கை கழுவுவது போன்றவை குறித்து நீதிமன்ற உத்தரவுகள் இருந்தாலும், நமது பாதுகாப்பிற்காக முககவசம் அணிவது உள்ளிட்ட சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம். வெயில் காலம் வந்துள்ளதால் பொதுமக்கள் அதிக நேரம் வெளியே நடமாடுவதை குறைக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. நிபுணர்கள் பலர் கொரோனா குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று 4 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதற்கு முந்தைய நாள் 2 ஆயிரத்து 800 பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். அந்தவகையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் போட்டு கொண்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வது நல்லது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பொறுத்தவரையில் 18.90 லட்சம் பேர் தடுப்பூசி போட தகுதியானவர்கள் இருக்கும் நிலையில், தற்போது வரை 8.49 லட்சம் பேர் தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொது மக்கள் முன்வர வேண்டும். இன்னும் 48 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் நிலையில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் செலுத்தினால் தான் அனைவரும் தடுப்பூசி போட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!