திருப்பதி கோயிலின் மொத்த சொத்துமதிப்பு விபரமிதோ!
திருப்பதியில் கடந்த 8 மாதங்களாக உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டி வசூலாகி வருகிறது. இந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுமார் ரூ.1000 கோடியை தாண்டி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்த சூழலில் தனது நிலையான ரொக்க வைப்புத்தொகை மற்றும் தங்கம் உள்ளிட்ட சொத்துகளின் பட்டியலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
திருமலை திருப்பதி கோயில் அறக்கட்டளையின் நிகர சொத்துமதிப்பு ரூ. 2.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அந்த அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி ஏவி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். அவர், “2019ம் ஆண்டில் பல்வேறு வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை வடிவில் திருப்பதி கோயில் அறக்கட்டளையின் முதலீடுகள் ரூ.13,025 கோடியாக இருந்தது, இது இப்போது 15,938 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீடு ரூ.2,900 கோடிகள் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ₹ 5,300 கோடிக்கு மதிப்புள்ள 10.3 டன் தங்கம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக திருப்பதி கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அறக்கட்டளையால் பகிரப்பட்ட வங்கி வாரியான முதலீட்டின்படி, 2019- ல் 7339.74 டன் தங்க வைப்பினைக் கொண்டிருந்ததாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் 2.9 டன்கள் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் 7,123 ஏக்கர் பரப்பளவில் 960 சொத்துக்கள் அறக்கட்டளைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயில் அறக்கட்டளை தலைவரும், வாரியமும் உபரி நிதியை ஆந்திரப் பிரதேச அரசின் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக வெளியான சமூக ஊடக அறிக்கைகளை அறக்கட்டளை மறுத்துள்ளது. உபரி தொகைகள் திட்டமிடப்பட்ட வங்கிகளில் H1 வட்டி விகிதத்தில் மட்டுமே முதலீடு செய்யப்படுவதாக அறக்கட்டளை தரப்பில் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் நன்கொடைகள் மூலம் திருப்பதி கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது.