இந்த தேசம் அன்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது!- கர்நாடகா ரிசல்ட் குறித்து ராகுல் காந்தி!
கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு, அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெறுப்பரசியலை கையிலெடுக்காமல் அன்பின் அடிப்படையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு காங்., தலைவர்கள் கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 13) நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை விட கூடுதலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதில் கர்நாடக காங்., தலைவர் டி.கே.சிவக்குமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதை அடுத்து கர்நாடகா தேர்தலில் காங்கிரசின் வெற்றி குறித்து மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் , “பெரும் முதலாளிகளை எளிய மக்கள் வீழ்த்தியுள்ளனர். கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு, அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெறுப்பரசியலை கையிலெடுக்காமல் அன்பின் அடிப்படையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. கர்நாடகா மக்களுக்கு நாங்கள் 5 வாக்குறுதிகளை கொடுத்திருந்தோம். முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இ
இந்த யுத்தத்தில் நாங்கள் வெறுப்பைக் கொண்டு சண்டையிடவில்லை. அன்பின் மூலம் சண்டையிட்டோம். இந்த தேசம் அன்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை கர்நாடக மக்கள் நிரூபித்துள்ளனர். மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நான் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்


